அச்சுவேலி புனித சூசையப்பர்

இலங்கைக்கு போர்த்துக்கேயர் வரும் வரை சமயங்கள் என்ற வகையில் இந்து மதமும் பௌத்த மதமும், இஸ்லாம் மதமும் மக்களின் வளிபாட்டுக்கு உரியனவாக இருந்து வந்தன. 1905 ம் ஆண்டு எதிர்பாராத வகையில் இலங்கையை வந்தடைந்த போர்த்துக்கேயர் இலங்கையை தமது ஆளுகைக்கு உட்படுத்துவது என்ற நோக்கோடு கத்தோலிக்க சமயத்தை சுதேசிகள் மத்தியில் பரப்பத் தலைப்பட்டனர். சமயம் பரப்புதற்கு கல்வியை பயன்படுத்தியதோடு சமயத்தோடு இணைந்த நிலையில் சமூகப்பணியையும் முன்னெடுத்தனர்.

குறித்த காலப்பகுதியில் யாழ்ப்பாண இராட்சியம் தமிழ் மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டதோடு சைவமும் தமிழும் தனித்துவத்தோடு நிலைபெற்றிருந்தது. இந்தக் காலப்பகுதியில் யாழ்ப்பாண இராட்சிய ஆளுகைப்புலத்தில் கத்தோலிக்க மதத்தை பரப்புவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் யாழ்ப்பாண இராட்சிய மன்னர்களால் நேரடியாக எதிர்க்கப்பட்டதோடு பல நூற்றுக்கணக்கானோர் இந்த வகையில் உயிர்ப்பலியானதும் யாழ்ப்பாண இராச்சியத்தை போர்த்துக்கீசர் கைப்பற்றித் தமது ஆளுகைக்கு உட்படுத்தவும் செய்தது.

அச்சுவேலி புனித சூசையப்பர்போர்த்துக்கீசர் ஆட்சிக்காலத்தில் கல்வி ஊடாக சமயம் பரப்பப்பட்டதோடு சமயப் பணியில் ஈடுபட்டவர்கள் சமூகப் பணியிலும் ஈடுபட்டு மக்கள் மத்தியில் சமயத்தை பரப்பியதோடு வழிபாட்டுக்கான தேவாலயங்களையும் நிறுவினர். கத்தோலிக்க சமயத்தில் இணைந்து கொண்டவர்கள் சமய விசுவாசிகளாக வாழத்தலைப்பட்டனர். அச்சுவேலி மேற்கில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் கத்தோலிக்க மதத்தில் இணைந்து வாழ்ந்தனர்.

அச்சுவேலி மேற்கில் அச்சு நகரில் கத்தோலிக்க சமயத்தில் குறிப்பிட்ட சில குடும்பத்தினர் இணைந்து கொண்டது தொடர்பான அச்சு நகர் அபிவிருத்தி சபையின் தலைவரும் மூத்த பிரஜையுமான எஸ்.சீ. இம்மானுவேல் தகவல் தெரிவிக்கையில்

குறித்த காலப்பகுதியில் கத்தோலிக்க சமயத்தில் சேர்ந்த சிற்றம்பலம் முதலியார் ஆவரங்காலில் வசித்த வட்டுக்கோட்டையை சேர்ந்த மரியம் செட்டியார் என்ற கத்தோலிக்க வர்த்தகர் சிற்றம்பலம் முதலியாரின் மகள் காக்கைப்பிள்ளையைத் திருமணம் செய்வதாகவும், இவர்களின் குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக மீண்டும் சைவ சமயத்தில் சேர்ந்து கொண்டனர். பின்னர் மன வருத்தம் அடைந்து தோலகட்டியில் வாழ்ந்த வெள்ளைக்கார மதகுருவிடம் மன்னிப்பு கேட்டு கத்தோலிக்க மதத்தில் இணைந்து கொண்டதாகவும் இது 1750 ஆண்டு காலப்பகுதியில் நிகழ்ந்ததாகவும் அதன் பின்பு வேறு சிலரும் அந்தக் குடும்பங்களின் வழித்தோன்றல்களுமே கத்தோலிக்கர்களாக வாழ்வதாகத் தெரிவித்தார். மேலும் காக்கைப்பிள்ளைக்கு இடப்பட்ட கத்தோலிக்க நாமம் ”மரியா” என்பதாகும். ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்ட ”சேர்” பட்டத்திற்கு சமமானதாக அந்தக் காலப்பகுதியில் மரியாவுக்க ”டொள்” பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டு காக்கைப்பிள்ளை ”டொள் மரியா” என மரியாதையாக அழைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆரம்பகாலத்தில் கத்தோலிக்க மதத்தில் இணைந்து கொண்டவர்கள் வழிபடுவதற்கு அச்சுவேலி பொதுச்சந்தைக்கு அருகில் சிறு தேவாலயம் அமைக்கப்பட்டிருந்தது. 1800 ம் ஆண்டு தற்போதைய புனித சூசையப்பர் ஆரயத்தின் வடகிழக்கு மூலையில் ஓலைக்கொட்டிலில் புனித சூசையப்பரை வைத்து வழிபட்டதோடு பெரிய குருசு மரம் நடப்பட்டிருந்தது.

இந்த இடம் பிற்காலத்தில் குருசு மரத்தடி என அழைக்கப்பட்டது. ஆரம்ப சூசையப்பர் தேவாலயம் சிற்றம்பல முதலியார் காலத்தில் அவரின் அனுசரணையேயாடு நிறுவப்பட்டது.

அச்சுநகர் புனித சூசையப்பர் ஆலயம் அச்சுவேலி சங்கானை வீதியில் வடக்குப் புறத்திலும் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு வடமேற்கு பக்கத்திலும் அமைந்துள்ளது. இது வலி கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் காலத்தால் முந்தியதும் அளவுப் பிரமாணத்தில் மிகப்பெரிய தேவாலயமாகவும் விளங்கி வந்தது.

அச்சுவேலி பங்குத் தந்தைக்கான வதிவிடத்துடன் மிக விசாலமான பரப்பளவு கொண்ட காணியில் இது அமைந்துள்ளது.

ஆலய வளாகத்தில் சுவாமி ஞானப்பிரகாசர் படிப்பகமும், வாசகர்சாலையும், கலை அரங்கமும் அமைந்துள்ளன. அச்சுவேலி மண்ணுக்கு பெருமை சேர்த்தவர்களில் முன்னணியில் திகழ்பவரும், ஈழத்தின் முதுபெரும் அறிஞரும், பாவலருமான தம்பிமுத்து என்பவர் பிறந்து வாழ்ந்து தமிழ்பணி புரிந்த இடம் அச்சு நகர் ஆகும். ஈழத்தில் முதல் முதல் தமிழ் அச்சக்கூடம் தம்பிமுத்து புலவரால் நிறுவப்பட்டது.  பழைய அச்சுக்கூடத்தின் அழிவுகளும், சிதைவடைந்த அடித்தளமும் இன்று காணக்கூடியதாக உள்ளது.

பாவலர் தம்பிமுத்து சுவாமி ஞானப்பிரகாசரின் வளர்ப்புத் தந்தை ஆவார். சுவாமி ஞானப்பிரகாசர் வாழ்ந்த இடம் சூசையப்பர் கோயில் சூழல். ஞானப்பிரகாசரை சுவாமி ஞானப்பிரகாசராக உருவாக்கி ஆத்மீக உலகிற்கு வழங்கிய பெருமை பாவலர் தம்பிமுத்து பிள்ளைக்கும், அச்சுவேலி மண்ணுக்கும் உரியது.

அச்சுவேலி மேற்கில் கிறிஸ்தவ பாரம்பரியம் நிலை பெறுவதற்கு உதவியவர்கள் என்ற வகையில் பாவலர் தம்பிமுத்து பிள்ளையும் சுவாமி ஞானப்பிரகாசரும் நினைவு கூரப்படுகின்றனர். அந்த வகையில் அச்சுவேலி புனித சூசையப்பர் தேவாலய வளாகத்தில், தேவாலயத்திற்கு தெற்குப் பக்கத்தில் சுவாமி ஞானப்பிரகாசரை நினைவு கூரும் வகையில் நிரந்தரமான கட்டடங்களோடு கூடிய அமைப்புக்கள் நிறவப்பட்டுள்ளன. சூசையப்பர் தேவாலத்தின் வளர்ச்சியிலும் சுவாமி ஞானப்பிரகாசரும், அவரின் வளர்ப்புத் தந்தையார்  பாவலர் தம்பிமுத்துப்பிள்ளையும் இணைந்து பெரும் பங்கு பணியாற்றியுள்ளனர்.
By – Shutharsan.S

Sharing is caring!

Add your review

12345