அத்தியார் இந்துக்கல்லூரி

நீர்வேலிக் கிராமத்தில் ஸ்ரீலஸ்ரீ சிவசங்கரபண்டிதர் அவர்கள் தமது இல்லத்தில் 1850 ஆம் ஆண்டளவில் திண்ணைப்பள்ளி ஒன்றை அமைத்து தமிழ், சமஸ்கிருதம் என்பவற்றைப் போதித்து வந்தார். இவர் அமரத்துவம் அடைந்த பின்னர் அவரது சிரேஸ்ட மைந்தனான சிவசங்கரபண்டிதர் தந்தையினால் நடாத்தப்பட்டு வந்த திண்ணைப் பள்ளியை விஸ்தரித்து 1880 ஆம் ஆண்டளவில் ‘சைவப்பிரகாச வித்தியாசாலை’ எனும் பெயரில் ஒரு பாடசாலையை அமைத்து நடாத்தி வந்தார். இவர் 1914 இல் சிவபதம் அடைந்த பின்னர் அவரது புதல்வன் நடராஜப்பிள்ளை இப்பாடசாலையை நடத்தி வந்தார். காலப்போக்கில் அவருக்கு கடன் தொல்லை அதிகரிக்க பாடசாலையை விற்க முற்பட்டார்.
அக்காலத்தில் கிறிஸ்தவ மிசனறிமார்களின் செல்வாக்கு அதிகரித்து இருந்தமையால் அவர்கள் பாடசாலையை வாங்க முற்பட்டனர். இதனை கொழும்பு வர்த்தக கம்பனியில் கடமையாற்றிக் கொண்டிருந்த முதலியார் அத்தியார் அருணாச்சலம் அவர்கள் கேள்விப்பட்ட உடன் இங்கு வந்து தனது சொந்தப்பணத்தில் பாடசாலையையும் அதனுடன் சேர்ந்த 2 பரப்பு காணி, கிணறு ஆகியவற்றையும் வாங்கிக் கொண்டார். அதன் பின்னர் தனது சொந்த முயற்சியால் பிரமாண்டமான மண்டபங்கள், அலுவலகம் என்பவற்றை அமைத்து தான் கடமையாற்றிய கொழும்பு வர்த்தகக் கம்பனியின் பொறியியலாளர் சாள்ஸ் ஸ்ரீபன் அவர்களால் 1929 இல் அத்தியார் இந்துக்கல்லூரியை திறந்து வைக்கச் செய்தார்.
இப்பாடசாலைக்கு நீர்வேலிக் கிராமத்தில் மாத்திரமல்ல வேறு பல இடங்களில் இருந்தும் மாணவர்கள் வருகை தந்தார்கள். அக்காலத்தில் பாடசாலை மாணவர்களிற்கு மதியபோசனம் வழங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் மதியபோசனமாக சோறு வழங்கப்பட்டது. பாடசாலை ஆசிரியர்களின் சம்பளம், உணவுக்கான செலவுகள் யாவற்றையும் அத்தியார் அவர்களே பொறுப்பேற்றிருந்தார்.
ஆரம்பத்தில் தமிழ்ப்பிரிவு, ஆங்கிலப்பிரிவு என இருபிரிவுகள் கல்லூரியில் இயங்கின. தமிழ் பிரிவுக்கு தலைமை உபாத்தியாயர் ஒருவரும், ஆங்கிலப்பிரிவுக்கு அதிபர் ஒருவரும் கடமையாற்றினர். இதேகாலத்தில் ஆங்கிலப்பிரிவில் 30 மாணவர்களும், 3 ஆசிரியர்களும் இருந்தனர். 1946 ஆம் ஆண்டில் தமிழ்ப்பிரிவு 350 மாணவர்களையும் 14 ஆசிரியர்களையும் கொண்டிருந்தது. ஆங்கிலப்பிரிவில் 125 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் இருந்தனர்.
1947 ஆம் ஆண்டளவில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு பிரிவுகளும் ஒன்றாக்கப்பட்டு ஒரு அதிபரின் கீழ் நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டது. நிர்வாகத்தை திறம்பட நடத்துவற்காக பகுதித் தலைவர் ஒருவர் கடமையாற்றினார்.
1954 ஆம் ஆண்டில் 700 மாணவர்களும் 35 ஆசிரியர்களும் கல்லூரியில் இருந்தனர். இக்காலத்தில் நீர்வேலிக்கு வருகை தந்த பிரதம மந்திரி சேர். ஜோன்.கொத்தலாவலை இப்பாடசாலைக்கு வருகை தந்து திரு.அத்தியார் அவர்களைப் பாராட்டிக் கௌரவித்தார்.
1957 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. கலை, வர்த்தகம,; விஞ்ஞானம் ஆகிய மூன்று பிரிவுகளும் சிறப்பாக செயற்பட்டன. பல வளங்களுடன் கல்லூரி சிறப்பாக விளங்கியது. 1961 ஆம் ஆண்டில் அரசு நாட்டின் சகல பாடசாலைகளையும் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அத்தியார் இந்துக் கல்லூரியும் அரசின் சொத்தாக மாற்றப்பட்டது. இக்காலத்தில் கல்லூரியில் மாணவர் தங்கிக் கல்வி கற்கும் விடுதி வசதியும் இருந்தது. வெளியிடங்களைச் சேர்ந்த பல மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வி கற்றனர்;.
அரசாங்கம் இப்பாடசாலையைப் பொறுப்பேற்ற பின்னர் கல்லூரி நூல் நிலையம், கிழக்குப்புற மண்டபங்கள் மாடிக்கட்டிடம் என்பன அரசாங்கத்தால் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இன்று இக்கல்லூரி மிகவும் பொலிவு பெற்று விளங்குகின்றது. இக்கல்லூரியில் ஏழு(7) கட்டிடங்களும் மிகப்பெரியதோர் விளையாட்டு மைதானமும், க.பொ.த. உயர்தர வகுப்புக்கள் வரை வகுப்புகளும் அமைந்துள்ளன.
1965ஐத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் க.பொ.த (உ.த.) வர்த்தகப்பிரிவில் யாழ்மாவட்டத்திலேயே இக்கல்லூரி சிறப்பாக இயங்கியது. 1979ல் 796 ஆக இருந்த கல்லூரியின் மாணவர் தொகை படிப்படியாக உயர்ந்து 1988ல் 1015 மாணவர்களைக் கொண்டிருந்தது. இக்காலத்தில் 40 ஆசிரியர்கள் கடமையாற்றினர்.

மேலதிக விபரங்களுக்கு
Attiyar Hindu College
நன்றி: அத்தியார் இந்துக்கல்லூரி இணையம்

Sharing is caring!

Add your review

12345