அம்மான் என் கண்

அம்மான் என் கண்

திருகோணமலையில் இருந்து 40 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்திருக்கும் கந்தளாயில் உள்ளது கந்தளாய்க் குளம். அதில் உள்ள பகுதி ஒன்றுதான் இந்த அம்மான் கண் ஆகும்.

ஆரம்பத்தில் கந்தளாய்க்குளம் அமைக்கப்பட்ட பின்னர் அதிலிருந்து நீரைப்பெறுவதற்கான வழி அமைக்கப்பட்ட பிரதேசமே அம்மான் என் கண் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. பிரமாண்டமான அந்தக் குளக்கட்டின்  வரலாற்றாதாரங்கள் பற்றி எதுவும் தீர்மானமாகத் தெரியவில்லை. இருந்தும் கந்தளாய், தம்பலகாமம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் கூறப்படும் இந்தக் கர்ணபரம்பரைக் கதையினை இன்றும் நீங்கள் கேட்டறியலாம்.
 
திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு திருப்பணிகள் செய்த குளக்கோட்டு மன்னன் அதனைச் சூழ இருந்த வயல் நிலங்களைப் பராமரிக்கும் பொருட்டு கந்தளாய்க் குளத்தினை அமைத்தான் என வரலாறு சொல்கிறது. இனி அந்தக் கதை………..
 
அன்று சதுர்வேத மங்களாபுரி (இன்றைய கந்தளாய்) விழாக்கோலம் பூண்டிருந்தது. அங்கு புதிதாக நிர்மானிக்கப்பட்ட பெருங்குளத்தினைச் சுற்றி மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. சோழகங்கன் என்று புகழப்படும் குளக்கோட்டு மன்னனும், அவனது பரிவாரங்களும் அவர்களுக்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த மேடைகளில் வீற்றிருக்க வேதியர்களால் மாபெரும் யாகத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.
 
இத்தனை வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த இந்நிகழ்வில் கூடியிருந்தவர்கள் முகங்களில் வழமைக்கு மாறான பயத்துடன் கூடிய படபடப்பும், சோகமும் நிறைந்திருந்தது. ஆம் அந்த யாகம் நரபலிகொடுப்பதற்காக நிகழ்த்தப்படுகிறது. காரணம் இதுதான். கந்தளாய்க் குளத்தினைக் கட்டிமுடிக்க முடியாதபடி பலமுறை அணை உடைப்பெடுத்துக் கொண்டிருந்தது. அதற்கான காரணத்தைக் கண்டறிய விழைந்த அரண்மனை நிமித்திகனும் , வேதியரும் அது அரசனின் முற்பிறப்பின் பழி எனவும் அதனை நிவர்த்திக்க அரசகுலத்து மூத்த மகனை நரபலி கொடுக்கவேண்டுமென தீர்மானமாகவும், முடிவாகவும் கூறி இருந்தனர். இப்போது அதற்காகத்தான் இந்த யாகம் வளர்க்கப்படுகிறது. அதுவே விழாக்களின் இயல்புக்கு மாறான அமைதி நிலவக் காரணமாக அமைந்திருந்தது.
அம்மான் என் கண்
 
(அம்மான் என் கண் என்றழைக்கப்படும் பிரதேசம்)
 
நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அனைவரது கண்களும் நரபலி இடுவதற்காக குளக்கட்டில் வெட்டி, பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த குழியின் மீதே நிலைத்திருந்தது. குளக்கோட்டு மன்னனின் சகோதரியின் மூத்தமகன் ஏலவே அந்தணர்கள் வகுத்திருந்த முறைப்படி அந்தக் குழிக்குள் இறக்கப்பட்டான். தனக்கு நிகழப்போவது பற்றி அறியாத அப்பாலகன் அலங்கரித்த குழிக்குள் விளையாடிக்கொண்டிருந்தான்.
 
சிறிது நேரத்தில் மன்னன் முதற்கொண்டு மற்றையவர் அனைவரும் இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு இருகைகளாலும் மண்ணள்ளிக் குழிக்குள் போட்டனர். முதலில் விளையாட்டாக நினைத்த பாலகனுக்கு நடக்க இருக்கும் விபரீதம் விளங்கியிருக்கவேண்டும். பயங்கலந்த பீதியுடன் தனது அம்மானை (அரசனை -குழந்தையின் தாய்மாமனை) நோக்கி தன்னைக் காப்பாற்றும்படி மன்றாடியது குழந்தை. குழந்தையதும் மக்களதும் அழுகை, ஓலம் ,கதறல்களுக்கு நடுவில் மண்போடும் படலம் தொடர்ந்தது. இறுதியில் பாலகனின் கண்ணுக்குள்ளும் மண்விழுந்தது.
 
‘அம்மான் என் கண் ‘ என்றலறியது குழந்தை. கூடியிருந்த மக்களின் அழுகையும் வானைப்பிளந்தது.
 
இறுதியில் எங்கும் நிசப்தம். குழி முற்றாக மூடப்பட்டுவிட்டது. நீண்ட நேரத்தின் பின் மக்கள் கூட்டமும், மன்னரும் அவரது பரிவாரங்களும் துயரத்தோடு இடம் விட்டகன்றனர். அணைக்கட்டும், நீர்திறந்துவிடும் ஓடையின் இறுதிப்பணிகளும் முடிந்த பின் வேலையாட்களும் விலகிச் சென்றனர். நிகழ்ந்துபோன கொடுமையின் துயரம் தாங்காத சூரியனும் மலைமுகடுகளுக்குள் மறைந்துபோனான். புதிதாக அமைக்கப்பட்ட ஓடையில் சலசலத்தோடும் குளத்துநீர் மட்டும் ‘அம்மான் என் கண்‘ என தொடர்ந்தோலமிட்டுக் கொண்டிருந்தது.
 
கர்ணபரம்பரைக்கதை எனத் தெரிந்திருந்தும் நெஞ்சின் ஒரு மூலையில் துயரத்தோடு நிலைத்திருக்கிறது இந்தக்கதை.
 
 

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம்- http://kizkkuman.blogspot.com இணையம்

Sharing is caring!

Add your review

12345