அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை

அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை

அராலி தெற்கினைப் பிறப்பிடமாகவும், இல 30, கடைச்சாமி வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம் என்ற இடத்தை வாழ்விடமாகவும் கொண்ட அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை (கலாபூசணம் நடராசா சுந்தரம்பிள்ளை – 20-10-1933) சிறந்த வானொலி நாடகக் கலைஞர் ஆவார். இலக்கிய விமர்சன நூல்கள், இலக்கிய வழிகாட்டல், நாடக நூல்கள், நாவல்கள், கற்பித்தல் நுல்கள் எனப் பல நூல்களை எழுதியுள்ள இவர் சிறுகதைகளும் எழுதியுள்ளார். கலைமாணி, கல்வியியல் டிப்ளோமா ஆகிய பட்டங்களை பெற்ற அராலியூர் ந. சுந்தரம்பிள்ளைஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படித்த காலத்தில் (1955-1958) பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் நாடகங்களில் நடித்த பொழுது அவரின் மண்வாசனை மிகுந்த நாடகப் பாணியையும் அவற்றைத் தயாரித்து அரங்கேற்றிய கலாநிதி சு. வித்தியானந்தனின் செயற்பாடுகளிலிருந்து அவற்றை அரங்கிடும் முறைமைகளை அறிந்து பெற்ற அனுபவங்களும், வசன வீச்சுகளுமே இவரை நாடக ஆசிரியராக வழிவகுத்தன. மேலும் உலகின் அதிசிறந்த இலக்கிய படைப்புகளை ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களின் மூலம் கற்றுத் தேர்ந்தமையால் இலக்கியப் படைப்புக்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டு இவர் செயற்பட்டார்.

இதுவரை நாடகங்கள் ஐந்நூறு வரை எழுதியுள்ள அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை பன்னிரண்டு நாடகங்களை நூலுருவாக்கியுள்ளார். இலக்கிய விமர்சன நூல்கள் நான்கினையும் இலக்கியம் படைக்க வழிகாட்டும் நூல்கள் மூன்றினையும் இலக்கியம் கற்பிக்க வழிகாட்டும் நூல்கள் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச்சேவை நடாத்திய வானொலி நாடகம் எழுதும் போடடியில் 2000ம் ஆண்டு முதலாம் பரிசும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும், தேசிய ஒருங்கிணைப்பு செலகத்திட்ட பணியகமும் ஒருங்கிணைந்து 1998 ம் ஆண்டு நடாத்திய வானொலி நாடகம் எழுதும் போடடியில் முதலாமிடமும் இவருக்குக் கிடைத்தது.

”முதலாம்பிள்ளை”, எங்கள் நாடு”, ”இமயம்” நாடக நூல்களுக்கு வடக்கு கிழக்கு மாகாண சபையின் பரிசில்கள் இவருக்குக் கிடைத்தன. இமயம் நாடக நூலுக்கு இலங்கை அரசின் சாகித்தியப் பரிசும் இவருக்குக் கிடைத்தது. 2007ம் ஆண்டு இலங்கை வடமாகாண சபையின் ஆளுனர் விருதினையும், 2001ம் ஆண்டு இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ”கலாபூஷணம்” விருதினையும் அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை பெற்றுள்ளார்.
By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடு

Sharing is caring!

Add your review

12345