அருள்மிகு மாணிக்கப் பிள்ளையார் தேவஸ்தானம் இடைக்காடு

இக் கோவிலின் ஆரம்ப காலத்தை சரியாக அறிய முடியவில்லை இடைக்காட்டைச் சேர்ந்த சந்திரவர் தம்பையா என்ற அருளாளர் கதிர்காமக்கந்தனை வழிபட கால்நடையாகச் சென்று கதிர்காமத்தை அடைந்து மாணிக்க கங்கையில் நீராடியபோது அவர் அருகில் நீராடிக்கொண்டிருந்த ஒரு தபோதனர் கையில் மூர்த்தம் ஒன்று திருவருளால் கிடைக்கப்பெற்றது.  அத்தபோதனர் அம் மூர்த்தத்தை சந்திரவர் தம்பையா கையில் கொடுத்து இதை உங்கள் ஊருக்கு எடுத்துச்சென்று கோவில் கட்டி அதை மாணிக்கப் பிள்ளையாராக வழிபடும்படி கூறினார்.  தம்பையாவும் அம் மாணிக்கப்பிள்ளையாரை இடைக்காட்டிற்குக் கொண்டுவந்து தனது சொந்தக் காணியில் தென்னோலைக் கொட்டில் அமைத்த அதில் வைத்துப் பயபக்தியுடன் பூசித்த வந்தார்.  தம்பையர் சிவபதமடைந்ததும் அவர் சகோதரரான சந்திரவர் செல்லர் தொடர்ந்து பூசை வழிபாடுகளை நடாத்தி வந்தார்.  இவர் காலத்தில் சுண்ணாம்பு கட்டடம் அமைத்த அதில் பிள்ளையாரை வைத்து பூசைகள் நடைபெற்று வந்தன.  செல்லர் என்று பலராலும் பயபக்தியுடன் அழைக்கப்படும் இவ் அருளாளர் உரு ஆடி நினைத்த காரியம் அருள்வாக்குக் கூறுவதில் வல்லவர்.  இதை அறிந்த பல ஊர் மக்களும் இவரை நாடி வந்து தம் துன்பங்களைத் தீர்த்துக்கொண்டனர்.  இவர் காலத்தில் வருடாவருடம் தீ மிதிப்பு வைபவம் நடைபெற்று வந்தது.  இதில் சில இளைஞர்களையும் தீ மிதிக்க வைத்தார்.  இவ் அருளாளர் தன் 75வது வயதில் இறையடி சேர்ந்ததும் பூசை வழிபாடுகளைச் செய்வதற்கும் பராமணோத்தமர்கள் நியமிக்கப்பட்டனர்.  இக் காலத்தில் மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், நிருத்தமண்டபம் போன்றவற்றை நிர்மாணித்து கிணறு, மடப்பள்ளியை புனரமைத்து மின்சார இணைப்பைப்பெற்று மூலஸ்தானத்தில் ஆதிமூர்த்தியையும், பிரதிஸ்டை மூர்த்தியையும் சமமாக வைத்து 13.10.1988ல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

—-நன்றி—–
1.திரு. க. அருணாசலம் – இடைக்காடு
2.திரு. வை. தம்பு – இடைக்காடு
3.திரு. வே. சுவாமிநாதன் – இடைக்காடு
4.திருமதி. பொ. மகாதேவா – இடைக்காடு

Sharing is caring!

Add your review

12345