அறுகம் புல்லின் மகிமை

”கவுண்டின்யர் என்னும் மகாமுனிவர், தம் மனைவி ஆசிரியையுடன் இல்லறத்தோடு இணைந்த தூய தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

ஆதிமூலரான விநாயகர் மேல் அதீத பக்தி மிக்க கவுண்டின்யர் தினமும் அறுகம்புல்லால் அவருக்கு அர்ச்சனை செய்து வந்தார்.

ஒருநாள் ஆசிரியை தன் கணவர் கவுண்டின்யரிடம் சந்தேகம் ஒன்றை கேட்டாள்.

”சுவாமி ஆண்டவனுக்கு அர்ச்சிக்க அனேக விதமான மலர்கள் இருக்க சாதாரண அறுகம் புல்லால் அவரை அர்ச்சிக்கிறீர்களே … ஏன்?”

அமைதி தவள ஆசிரியையை நோக்கிய கவுண்டின்யர் புன்னகை ஒன்றைப் புரிந்தார். பிறகு சொல்லத் தொடங்கினார்.

”ஆசிரியையே..நீ உன் அறியாமையால், அறுகை சாதாரணமானது என்று சொல்லி விட்டாய்.. ஆனால் அது எவ்வளவு உயர்வானது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லுகிறேன் கேள்.

ஒரு சமயம் தேவலோகத்தில் ரம்பை, ஊர்வசி, திலோத்தமை ஆகியோரின் நடனம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அப்போது திலோத்தமையின் அழகில் மயங்கிய யமதர்மன் அங்கிருந்து எழுந்து தன் மனைவியை நாடி அந்தப்புரம் நோக்கிச் சென்றான்.

யமதர்மன் அப்படி சென்ற போது, அவன் உடலில் இருந்து வெளிப்பட்ட காமாக்கினி ஓர் அசுரனாக மாறியது.

அக்கினியை விடவும் அதி பயங்கரமான வெப்பம் வெளிப்பட்டது. அந்த அசுரனின் உடலிலிருந்து வெளிப்பட, அனலாசுரன் என்று அழைக்கப்பட்டான்.

அனலாசுரன் சென்ற இடமெல்லாம் பற்றி எரிந்தது. தந்தையான யமதர்மனை தவிர தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் என மூவுலகில் உள்ளோரையும் தனது அடாத செயல்களால் வாட்டி வதைத்தான். அக்னி தேவனே அவனை நெருங்க முடியாமல் அஞ்சி ஓடினான்.

பலகாலம் பயந்து திரிந்தவர்கள் பரம்பொருளை துதித்து காப்பாற்ற வேண்டினார்கள். அப்போது ஓர் அந்தணர் வடிவில் அவர்களிடையே தோன்றினார். ஆனைமுகன், அஞ்ச வேண்டாம் என்று அபயம் அளித்தார்.

அதே வடிவோடு அனலாசுரனை நோக்கி போனவர், அவனைக் கண்டதும் தன் சுய உருவை எடுத்தார். விநாயகரை எதிர்க்க வந்தான் அனலாசுரன். அவனை துதிக்கையால் தூக்கி தம் வாயில் போட்டு விழுங்கினார் விநாயகர்.

அழிந்தான் அனலாசுரன் என்று அனைவரும் ஆனந்தித்த வேளையில் ஆபத்து ஒன்று ஆரம்பமானது.

பிள்ளையாரின் பேளை வயிற்றுக்குள் அனலாசுரன் சென்ற சில கணங்களில் எங்கும் ஓர் உஷ்ணம் பரவியது. அதைத் தாங்க முடியாமல் அக்னித்தேவனே அலறினான்.

வெப்பம்… சூடு…வெம்மை விநாடிக்கு விநாடி கூடிக்கொண்டே போக, தவிக்கத் தொடங்கினார்கள் தேவர்கள். மண்டை பிளந்து துடித்தார்கள். மண்ணுலகத்தினர்…பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புழுக்கள் எல்லாம் அப்படியே கருகி விழுந்தன.

என்ன காரணம்.. என்ன காரணம்? என்று புரியாமல் எல்லோரும் தவிக்க பிரம்மா சொன்னார்.

”விநாயகரின் வயிற்றுக்குள் அனலாசுரனால் ஏற்படும் வெப்பம் பரவிக் கொண்டிருக்கிறது. அகில உலகமும் அவரது வயிற்றினுள் அடக்கம் என்பதால் அந்த உஷ்ணம் உலகம் மூன்றையும் வாட்டுகிறது…ஆனை முகனின் மேனி குளிர்ந்தால் தான் வெப்பம் நீங்கும்.”

நான்முகன் சொன்னதைக் கேட்டதும் கணபதியின் மேனி உஷ்ணத்தை குறைக்க ஆளாளுக்கு ஒரு வழியை தேடினார்கள்.

குடம் குடமாக பாலை ஊற்றினார் ஒருவர். அக்கினியோ எங்கே கிட்ட போனால் தானே எரிந்துவிடுமோ என பயந்து பதுங்கி நின்றார். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக முயற்சித்தும் அனலாசுரன் ஏற்படுத்திய வெம்மை பிள்ளையாரை விட்டு நீங்கவில்லை.

அந்தச் சமயத்தில் மூவுலகில் உள்ள முனிவர்கள் அனைவரும் வந்து நின்றார்கள். விநாயகரை வணங்கி விட்டு, ஒவ்வொருவரும் இருபத்தொரு அறுகம்புற்களால் அவரை அர்ச்சித்தார்கள்.

முதல் அறுகு பட்டதுமே குளிரத் தொடங்கிய கணபதியின் உடல் வெப்பம், முனிவர்கள் யாவரும் அர்ச்சித்து முடித்தபோது முழுமையாக அகன்றது.

அப்போது கணேசர்

”உங்கள் அனைவரது உபசாரங்களை விட உயர்வானது, அறுகம்புல்லால் எனக்குச் செய்யும் உபாசனை, எத்தனை பெரிய அளவில் பலவித பூக்கள், பத்ரங்களால் எனக்கு அர்ச்சனை செய்தாலும், அறுகும் வன்னியுமே எனக்கு மிகவும் பிடித்தமானவை…

என்று சொல்லி மறைந்தார்.

அப்போது முதல் பிள்ளையார் வழிபாட்டில் அறுகுக்கு முக்கிய இடம் வந்தது.

அதுமட்டுமல்ல, ஒரு சமயம் கவுண்டிய முனிவரின் மனைவியான ஆசிரியை அறுகின் பெருமை பற்றி கேட்டபோது, விநாயகரை வணங்கி விட்டு அறுகு ஒன்றை தந்தனுப்பினார் முனிவர். அதற்கு ஈடாக செல்வம் பெற்று வரச் சொன்னார்.

இந்திரனால் கூட அதற்கு ஈடாக பொன் தர இயலவில்லை. அவனே அந்த முனி பத்தினிக்கு அடிமையாக வந்தான். அவ்வளவு உயர்வானது அறுகம்புல்.

”இவ்வாறான சிறப்புள்ள அறுகம்புல் விஞ்ஞான ரீதியாக கூட மருத்துவ முக்கியத்துவம் உடையதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பெருமை வாய்ந்த இவ் அறுகு யாழ்ப்பாணத்தின் அரும் பெரும் பொக்கிசமாகும். இதை நாம் அழித்தக் கொண்டிருக்கிறோம். வீடுகளில் அழகுக்காக வளர்ப்புப் புற்களை நாம் வளர்க்கிறோம். இதைவிட அறுகை வளர்த்தால் கரும் பச்சையில் பார்ப்பதற்கு ரம்மியமாகவும் குளிர்மையாகவும் இருக்கும். வீதியின் இரு மருங்கிலும் வளர்த்தால் மண்ணரிப்பை தடுக்க கூடியதாகவும் குளிர்ச்சியாகவும் .ருக்கும். கடும் வரட்சியில் கூட வாழக்கூடியது. வளர்ப்புப் புற்களை வளர்த்து நித்தம் தண்ணியை விடுவதைவிட அறுகம் புல்லை வளர்த்து அனாதரவாக விட்டாலும் பசுமையாக இருக்கிறது.”

 

Sharing is caring!

1 review on “அறுகம் புல்லின் மகிமை”

  1. தங்களின் ஆவணப்படுத்தலை மிகவும் வரவேற்கிறேன். வளர்க சேவை

Add your review

12345