அல்வாய் சாமணந்துறை ஆலடிப்பிள்ளையார் கோயில்

வடமராட்சியில் அமைந்த அல்வாயூரின் எல்லையில் இக்கோயில் அமைந்துள்ளது. அவ்விடம் சோலைவனமாக இருந்தது. ஆல், நிழல்வாரி, இலுப்பை, வேம்பு, ஒதி, பூவரசு, மாவிலங்கை போன்ற பல மரங்கள் அடர்ந்த சோலை. இவற்றைச் சுற்றிவர பனை வடலிகளும் பற்றையாய் வளர்ந்திருந்தன. எங்கும் பசுமைக் கோலம். “சாமளம்” என்ற சொல் பசுமையைக் குறிப்பது. “சாமளந்தறை” என்பதே மருவி சாமணற்தறை என வந்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

கோயிலின் தலவிருட்சம் ஆலமரம். கோயிலின் பெயர் தலவிருட்சத்தின் பெயரையும் இடத்தின் பெயரையும் இணைத்து வழங்கப்படுகிறது. கோயிலின் தெற்குப் புறம் சுடலை அமைந்துள்ளது. ஈழத்து ஞானிகளில் ஒருவரான யோகர் சுவாமி இங்கு வந்த போது சுற்றுப்புறச் சூழல் கண்டு வியந்ததாகக் கூற்படுகிறது. அவர் தனது பசியைத் தீர்ப்பதற்கு அங்கிருந்த பூவரச மரத்தின் இலைகளை உருவி உண்டமையும் சிறப்பைக் கொடுத்துள்ளது.
வழிபாட்டு நிலையில் அண்ணமார், பணிக்கர், காளி, காத்தவராயர், வீரபத்திரர் போன்ற குலதெய்வ வழிபாடுகளும் நடைபெற்றன. வேள்வியில் மிருகபலியும் இடம்பெற்றது. முச்சமாமிசப் படையல்களும் செய்யப்பட்டன. பலியிட ஆடு, கோழிகளை நேர்ந்து கொணர்ந்து விடுவர். குடும்பநிலையில் மடைப்பண்டங்கள் கோயிலுக்கு எடுத்து வரப்படும். விபூதி மந்திரித்தல், நீர் தெளித்தல், நீர் ஓதுதல் போன்றன இடம்பெற்றன.
காலப்போக்கில் உயிர்ப்பலி வேள்வி முறை மாறியது. பலியிடாமல் விற்கும் வழக்கம் ஏற்பட்டது. அத்துடன் சைவநெறிகள் செயற்படுத்தப்பட்டன. நித்திய நைமித்திய பூசைகள் ஏற்படுத்தப்பட்டமை வரலாற்று மாற்றமாயிற்று. கோயிலில் காண்டாமணியும் கட்டப்பட்டது. தீர்த்தக் கிணறு அமைக்கப்பட்டது. பல நாடகங்கள் நேர்த்திக்காக மேடையேற்றப்பட்டன. கூத்து, இசைநாடகமெனப் பல நடைபெற்றன. கவிஞர்.மு.செல்லய்யா, சோதிடர்.ச.தம்பிஐயா, கலைப்போதனாச்சுடர் பொன்னையா போன்நோர் இப்பணியில் முன்னின்றனர்.
மூன்று கும்பாபிஷேகங்கள் (1968, 1986, 1999) நடைபெற்றுள்ளன. கோயில் உற்சவங்கள் விரிவாக்கம் பெற்றன. வசந்த மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது. ஏறக்குறைய 200 ஆண்டுப் பழமையுடைய இக்கோயில் அண்ணமார் வழிபாட்டில் தொடங்கி விநாயகர் வழிபாட்டில் நிறைவெய்தியுள்ளது. இளைஞரை வழிபாட்டில் இணைத்து அவர்களுடைய ஆற்றலை எல்லோரும் உணர வகை செய்யப்பட்டது. அதிகாலையில் சங்கூதி அனைவரையும் வழிபாட்டில் இணைக்குரல் கொடுக்கும் இளமையை ஆலடிப் பிள்ளையார் அருள்பாலித்து வருகின்றார்.

Sharing is caring!

Add your review

12345