அளவெட்டி – மல்லாகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம்

அளவெட்டியில் தற்பொழுது இயங்கிவரும் பொதுத் தாபனங்களில் அளவெட்டி – மல்லாகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் முக்கியமானதொன்றாகும். இச் சங்கம் உருப்பெற்ற வரலாறு சுவாரஸ்யம் மிக்கதாகும். இரண்டாம் உலக மகாயுத்தம் நிகழ்ந்த போது அரசினர் வழங்கும் உணவுப் பொருள்கள் சீராக எல்லோருக்கும் கிடைப்பதில் தடங்கல் நிலை ஏற்பட்டது. அதனால் உணவு விநியோகத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசாங்கம் விரும்பியது. அந்த விருப்பத்தை நிறைவேற்ற இலங்கை முழுவதிலும் ஐக்கிய பண்டகசாலைச் சங்கங்கள் தாபிக்கப்பட்டன. அளவெட்டியிலும் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, மத்தி என பல ஐக்கிய பண்டகசாலைகள் முளைத்தன. கோணத் திசைகளிலும் சில அரும்பின. சில தனியார் கடையை நடத்தி வந்தோர் கூட தமது கடைகளை அழியவிடாது பாதுகாப்பதற்காக அவற்றை ஐக்கிய பண்டகசாலைகளாக மாற்றினர்.

அளவெட்டியில் ஆரம்பித்த ஐக்கிய பண்டக சாலைகளில் சில நாளடைவில் நட்டத்தில் இயங்கின. சில நிர்வாகத்தால் நடத்தமுடியாத அளவுக்குப் பண நெருக்கடிக்கு உள்ளாகின. இந்நிலை கூட்டுறவுத்துறை உத்தியோகத்தர்களுக்குப் பெரும் தலையிடியைக் கொடுத்து வந்தது.

அளவெட்டி மத்தி ஐக்கிய பண்டகசாலை மட்டும் இலாபத்தில் இயங்கியதோடு யாழ்ப் பாணத்திலிருந்த முன்மாதிரியான ஐக்கிய பண்டகசாலைகளில் ஒன்றாகவும் மேலதிகாரிகளால் கணிக்கப்பட்டு வந்தது.
இப்பண்டகசாலையை மேலும் வலுப்படுத்த விரும்பிய அரசாங்கம் இதனை ஒரு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமாகப் பதிவு செய்தது. பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமாக அமைத்தபின் அச்சங்கம் அளவெட்டி விவசாயிகளின் வெங்காயத்தைக் கொள்வனவு செய்து கொழும்புக்கு அனுப்பி சந்தைப்படுத்தும் வாணிபத்தையும் செய்து வரலாயிற்று. இதன் மூலம் வெங்காயக்கூடு இழைக்கும் தொழிலும் விருத்தியாயிற்று. இந்நிலையில் அளவெட்டி மேற்கு ஐக்கிய பண்டகசாலையும் இலாபத்தில் இயங்கியமையினாலும் அச்சங்கப்பகுதியே வெங்காய உற்பத்தியாளரின் வாழ்விடமாக இருந்தமையாலும் அளவெட்டி மேற்கு ஐக்கிய பண்டகசாலை நிர்வாகம் தங்கள் சங்கத்தையும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கமாக்கும்படி கூட்டுறவு உதவி ஆணையாளருக்கு நெருக்குதல் கொடுத்தது. அவர்கள் கொடுத்த புள்ளி விபரங்கள் அவர்களது கோரிக்கைக்குச் சாதகமாக இருந்தமையால் உதவிஆணையாளர் செய்வதறியாது திண்டாடினார். அவர் ஒரு தந்திரோபாயமாக இப்போதுள்ள ப.நோ.கூ. சங்க நிர்வாகத்திடம் தங்கள் சங்கத்தையும் ஓர் ப.நோ.கூ. சங்கமாக மாற்ற சம்மதிப்பதாக ஓர் தீர்மானம் நிறைவேற்றி அதனை உறுதிப்படுத்தும் கடிதத்தைக் கொண்டுவரும்படி கேட்டுக்கொண் டார். அளவெட்டி மேற்கு ஐக்கிய பண்டகசாலை நிர்வாகமும் அதற்கு உடன்பட்டது.

அதன் பிரகாரம் அளவெட்டி மேற்கு ஐக்கிய பண்டகசாலைத் தலைவரினால் பிரேரணை ஒன்று ப.நோ.கூ. சங்கத்திற்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் சங்க நிர்வாகம் அப்பிரேரணையை பொதுக்கூட்டத்தில் சமர்ப்பிப்பதில்லையெனத் தீர்மானித்தது. கூட்ட நாளும் வந்தது. அளவெட்டி மேற்கு ஐக்கிய பண்டகசாலைத் தலைவர் அக்கூட்டத்தின் ஆரம்பத்தில் தான் கொடுத்த பிரேரணை கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இல்லாததால் கூட்டம் செல்லுபடியற்றதென ஆட்சேபனை எழுப்பினார். இருந்தும் ப.நோ.கூ. சங்கத் தலைவர் ஆட்சேபனையை நிராகரித்து கூட்டத்தைத் தொடரமுற்பட்டபோது அங்கத்தவர் பலர் கிளர்ச்சியில் ஈடுபட்டதால் கூட்டம் குழம்பியது. கூட்டம் குழம்பியபின் ப.நோ.கூ. சங்க நிர்வாகம் அங்கத்தவர் ஒருவரின் பிரேரணை நிராகரிக்கப்பட்டது சரியானதா என கூட்டுறவு ஆணையாளரைக் கேட்டுக்கொண்டது. அதற்கு அவர் பிரேரணை எதுவானாலும் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்படவேண்டுமென பதிலளித்தார். தமது தவறினை உணர்ந்த ப.நோ.கூ. சங்க நிர்வாக சபை உறுப்பினர் அனைவரும் இராஜினாமாச் செய்தனர்.

அதன்மேல் கூட்டுறவு உதவி ஆணை யாளரால் பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு இயக்குநர் சபை தெரிவு செய்யப்பட்டது. அளவெட்டி மேற்கு ஐக்கிய பண்டகசாலை சார்பானவர்களே நிர்வாக சபைக்குத் தெரிவாகினர். வெங்காயம் கொள்வனவு செய்யும் பொறுப்பும் அளவெட்டி மேற்கு ஐக்கிய பண்டகசாலையின் கைக்கே வந்துவிட்டது. புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட நிர்வாக சபை நட்டத்தில் இயங்கிய சங்கங்களுடன் கலந்து பேசி அச்சங்கங்களை அளவெட்டி ப.நோ.கூ. சங்கத்துடன் சேர்ப்பதில் வெற்றிகண்டது. இதன் பிரகாரம் ஒரேயொரு பண்டகசாலையைத் தவிர அளவெட்டி மேற்கு ஐக்கிய பண்டகசாலையும் ப.நோ.கூ. சங்கத்துடன் இணைக்கப்படலாயிற்று. 1969ம் ஆண்டு சங்கத்தின் வெள்ளிவிழா அளவெட்டியின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. மேல்மாடியுடன் கூடிய புதிய கட்டடம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.

கிராமிய வங்கி ஒன்றும் அதே காலப்பகுதி யில் அளவெட்டி ப.நோ.கூ. சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் பல கிளைச் சங்கங்களையும் தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து செயற்பட்டமை கூட்டுறவுத் துறையினர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. கூட்டுறவுத்துறை அதிகாரிகள் இச் சங்க நடைமுறைகளைக் கவனிக்க கொழும்பி லிருந்து வந்தனர். 1971இல் கூட்டுறவுப் புனரமைப்பு நடைபெற்ற போது அளவெட்டி ப.நோ.கூ. சங்கத்தின் நடைமுறைக்கு அமைவாகவே இலங்கை முழுவதிலும் ப.நோ. கூ. சங்கங்கள் அமைக்கப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்க உண்மையாகும். அளவெட்டி, மல்லாகம் பகுதிகளிலிருந்த பண்டகசாலைச் சங்கங்களை தெல்லிப்பழை, சுன்னாகம் ப.நோ.கூ. சங்கங்களுடன் இணைக்கக்கூடிய வசதியும் வாய்ப்பும் இருந்தும் அளவெட்டி மல்லாகம் ஆகிய இரு கிராமங்களை மட்டும் இணைத்து ஓர் ப.நோ.கூ. சங்கத்தை அமைத்தது அளவெட்டி ப.நோ.கூ. சங்கத்தின் நற்பெயரைக் காக்கவே எனக் கொள்ளத்தகும். அளவெட்டி மத்தி ஐக்கிய பண்டகசாலை அளவெட்டி ப.நோ.கூ. சங்கமாக உருப்பெறவும் பின்னர் அது அளவெட்டி – மல்லாகம் ப.நோ.கூ. சங்கமாக மலரவும் காரணராக இருந்தவர் அளவெட்டி மத்தி ஐக்கிய பண்டகசாலைப் பொது முகாமையாளரான க. கணபதிப்பிள்ளை அவர்களே என்பது பேருண்மையாகும்.

அளவெட்டி – மல்லாகம் ப.நோ.கூ. சங்கத்தின் தலைவராக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர் அக்கால அரசாங்கத்தின் அங்கமாக இருந்த பொதுவுடமைக் கட்சி உறுப்பினரான வி. பொன்னம்பலம் அவர்களே. அதன்பின் சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்த ரி.பி. முருகையா என்பவர் அளவெட்டி மல்லாகம் ப.நோ.கூ. சங்கத்தின் தலைவரானார். கூட்டுறவுத் துறையில் அக்காலகட்டத்திலும் அரசியல் சாயம் பூசப்பட்டிருந்ததை இந்; நியமனங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. 1978ம் ஆண்டு ப.நோ.கூ. சங்கங்களுக்கு இயக்குநர் சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பு அவ்வச் சங்கம் அமைந்துள்ள தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அளவெட்டி – மல்லாகம் ப.நோ.கூ. சங்கம் அமைந்த பகுதி காங்கேசன்துறை தொகுதியாதலால் அத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அ.அமிர்தலிங்கம் அவர்களே இயக்குநர் சபை உறுப்பினரையும் தலைவரையும் நியமித்தார். பின்னர் சங்க உறுப்பினர்களால் இயக்குநர் சபையும் தலைவரும் தெரிவு செய்யப்படும் முறைமை நடைமுறைக்கு வந்தது. அளவெட்டி – மல்லாகம் ப.நோ.கூ. சங்கம் அமைக்கப்பட்ட பின் முதல் தலைவராக திரு. வி. பொன்னம்பலமும் அவரையடுத்து திரு.ரி.பி. முருகையாவும் தொடர்ந்து பண்டிதர் நாகலிங்கம் ஆகிய மூவருமே அரசாங்கத்தினால் நியமனம் செய்யப்பட்ட தலைவர்கள் ஆவார்கள். அதன் பின்னர் சங்க உறுப்பினர்களின் தெரிவே தலைவர்களைத் தீர்மானித்தது.

ப.நோ.கூ. சங்கங்களிற்கு இயக்குநர் சபைகளை தாமே தெரிவு செய்யும் உரிமை 1979இல் கிடைத்தது. அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட முதலாவது தலைவர் பண்டிதர் க.நாகலிங்கம் ஆவார். அளவெட்டி – மல்லாகம் ப.நோ.கூ. சங்கம் அமையக் காரணமாக இருந்து அதன் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்களில் வி.பொன்னம்பலம் மிக முக்கியமானவர் ஆவார். இவர் மல்லாகம் கிராமசபைத் தலைவராகவும் இருந்தவர். மல்லாகம் கிராமசபையால் நடாத்தப்படும் வாசிகசாலை ஒன்றையும் இவர் அமைத்திருந்தார். இவை நல்லமுறையில் செயற்பட்டு வருகின்றமை வி.பொன்னம்பலத்தின் நினைவுகளுக்குச் சான்றாக இருந்தபொழுதும் அளவெட்டியில் வி.பொன்னம்பலத்தின் நினைவாக இதுவரை எதுவித மண்டபங்களோ படிப்பகங்களோ இயங்காமை வருந்தத்தக்கதே. இவ்வருத்தம் எதிர்காலத்தில் திருத்தமாகுமென நம்புவோம்.

அளவெட்டி – மல்லாகம் ப.நோ.கூ. சங்கத்தின் தலைவர்களாக இருந்தோர்.
 வி.பொன்னம்பலம்
 ரி.பி. முருகையா
 பண்டிதர் க.நாகலிங்கம்
 எஸ். ஜெகதீசன்
 எஸ். விவேகானந்தன்
 எஸ். கனகரட்ணம்
 சி.விஜயரட்ணம்
 எஸ்.கந்தசாமி
 செ.சிவயோகநாதன்

 

நன்றி – தொகுப்பு -பண்டிதர் க.நாகலிங்கம்

தகவல் மூலம்-http://www.alavay.com, இணையம்

Sharing is caring!

1 review on “அளவெட்டி – மல்லாகம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம்”

  1. அகராயே தெரியாதவர்களுக்கு அரிதான ஒரு தகவல்

Add your review

12345