அழகு சுப்பிரமணியம் – இலக்கியம்

அழகு சுப்பிரமணியம் – இலக்கியம் – ஆங்கில இலக்கியத்துறையில் உலகப்புகழ் பெற்ற ஈழத்தவர். பரிஸ்டர் பட்டம் பெற்றவர். நீண்டகாலமாக இங்கிலாந்தில் வாழ்ந்த இவர் “இன்டியன் றைற்றிங்” என்ற காலாண்டுச் சஞ்சிகையின் இணையாசிரியராக இருந்தவர். தனது கடைசிக் காலத்தை யாழ்ப்பாணத்தில் கழித்தவர். பல சிறுகதைகளை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். ‘The Mathematician’ என்ற சிறுகதை ‘உலக இலக்கியத்தின் உன்னத சிறுகதைகள்’ என்ற ஆங்கிலத் தொகுப்பில் (ஹைடல்பேர்க் நகரில் வெளியானது) இடம்பெற்றுள்ளது. இவரது “மிஸ்டர் மூன்” நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு மல்லிகையில் வெளியானது.
புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் பால்ரர் அலன் அழகு சுப்பிரமணியத்தைப்பற்றி இவ்வாறு கூறுகிறார்: “இவருடைய படைப்புகள் பெரும்பாலும் இலங்கைப் பின்னணியிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. இதே போன்று ஆங்கில வாழ்க்கைப் பகைப்புலத்தில் ஆங்கிலேயர்களுக்கே சவால் விடக்கூடிய முறையில் இவர் கதைகளை எழுதியுள்ளார்.”
இலக்கிய விமரிசகர் கா. சிவத்தம்பி இவ்வாறு கூறுகிறார்: “1920 – 30 களிற் காணப்படும் இன்னொரு முக்கிய பண்பு இக்காலத்தில் முற்றிலும் ஆங்கிலத்திலேயே யாழ்ப்பாண வாழ்க்கையின் வளத்தைச் சித்தரிக்கும் ஆற்றலுடையவர்கள் தோன்றியமையாகும். அழகு சுப்பிரமணியம், தம்பிமுத்து ஆகியோர் இதற்கான உதாரணங்களாவர். தம்பிமுத்துக்கவிஞர், அழகு சுப்பிரமணியத்தின் எழுத்துத்திறன் காரணமாக யாழ்ப்பாண வாழ்க்கையின் செழுமை ஆங்கில இலக்கியத்தின் ஆற்றலுடன் பொறிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேனாட்டுச் சூழலில் வாழ்ந்தே, இந்த இலக்கியச் செயற்பாட்டினில் ஈடுபட்டனர் என்பதும் உண்மையாகும்.”
1915 மார்ச் 15 யாழ்ப்பாணத்தில் பிறந்த அழகு சுப்பிரமணியம் 1973 பெப்ரவரி 15 இல் உடுப்பிட்டியில் காலமானார்.
இவரின் 12 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து தமிழில் மொழிபெயர்த்து “நீதிபதியின்மகன்” என்ற பெயரில் வெளியிட்டவர் மறைந்த ராஜ ஸ்ரீகாந்தன் அவர்கள். அந்நூலில் இருந்து ஒரு சிறுகதையை எனது நட்சத்திர வாரத்தில் ஒரு பதிவாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
Leave a Reply