ஆசிரியமணி பஞ்சாட்சரம்

பண்டிதமணி அவர்களின் படைப்புகளிலே தலையாயது தஷகாண்டம் உரை. ஈடிணையற்ற அந்தப் பணி நிறைவுற்றதும் பண்டிதமணி நன்றிப் பெருக்குடன் எழுதிய வாசகங்களில் ஒன்று இது “ ஆசிரியமணி அ.பஞ்சாட்சரம் படிக்கிற காலம் தொடக்கம் நிழல் போலப்பிரியாது தொடர்ந்து பல துறையிலும் உதவி வருவது யாவரும் அறிந்தது

பண்டிதமணியை நன்கு அறிந்திருப்பவர்களுக்கு ஒன்று மிக நன்றாகவே தெரிந்திருக்கும். பூனையை யானை என்று அவர் ஒரு போதும் சொல்லவேமாட்டார். பூனை யானை வேசம் போட்டு வந்தாலும் ஏமாந்து விடமாட்டார். வே ஷத்தை பிய்த்து உதறிவிடுவார். அவர் வசிட்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றுவிடலாம். தோடஞ்சரான கண்டனம் எழுதிக் காய்ப்பேறிய கையினரான பண்டிதமணியின் பாராட்டுப்பெறுவது எளிதான காரியமன்று. பண்டிதமணியின் பாராட்டென்ன அன்புக்கே பாத்திரமானவர் பஞ்சாட்சரம்.
திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் பயின்று பண்டிதமணியின் அன்புக்கு பாத்திரமானவர் பலர் இருக்கலாம். ஆனால் பண்டித மணியின் மறைவு வரை அணுக்கத்தொண்டராக இருக்கும் அரிய பேறு பஞ்சாட்சரம் ஒருவருக்குத்தான் வாய்த்தது. “ அவன் தவம் செப்பற்பாற்றோ “ என்ற கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள் திருவாக்கை நினைத்துக் கொள்கிறோம்.
ராஜாஜி ராமன் என்றால் கல்கி லட்சுமணன் நான் அநுமன்” என்று ம.பொ.சி தமது “செங்கோல்” இதழொன்றில் கூறியதுண்டு ராஜாஜி என்றுமே கூறியதில்லை. பஞ்சாட்சரம் விஷயமே வேறு. “பஞ்சாட்சரம் எனக்கு வாய்த்த அனுமன்” என்று பண்டிதமணி வாயாலே போற்றப்பட்டவர்.
“எனது அன்பு மாணவன் அ.பஞ்சாட்சரம் அத்வைத சிந்தனையை புத்தக வடிவில் அமைத்திருக்கிறார்” என அத்வைத சிந்தனை நூலில் வரும் பண்டிதமணியின் நன்றி உரைக்குறிப்பு, நூல் வெளியீட்டுச் சபையென ஒன்றிருந்தாலும் பஞ்சாட்சரம் ஒருவரே பண்டிதமணியின் நூல்கள் வெளிவர சூத்திரதாரியாய் இருந்தார். அசைவிலா ஊக்கமுடையவரான பஞ்சாட்சரத்திடம் பண்டிதமணியின் ஆக்கம் அதர்வினாச் சென்றதில் வியப்பேதும் இல்லை.

Sharing is caring!

Add your review

12345