ஆசிரியை திருமதி செல்லம்மா கனகசுந்தரம்

ஆசிரியை திருமதி செல்லம்மா கனகசுந்தரம். அவர்கள் ஊருக்கு உழைத்த உத்தமர்களின் வரிசையில் சேர்க்கப்பட வேண்டிய மற்றொரு பெரியவராக, காலஞ்சென்ற திருமதி செல்லம்மா கனகசுந்தரம் ஆசிரியை அவர்களைப் பார்க்கிறோம். தன்னலமில்லாத் தனித்தொண்டாற்றியதன் மூலம் தன்னூர்ப் பள்ளிப்பிள்ளைகளை அறிவியற் சிந்தனையாளர்களாக்கிய பெருந்தகை செல்லம்மா ரீச்சர் ஆவார்.

ஆசிரியை திருமதி செல்லம்மா கனகசுந்தரம்

தமிழ்மொழிப்புலமையும் ஆங்கிலமொழிக் கல்வியறிவும் ஒருங்கே சேரப்பெற்றவர் இவர். 01.01.1970 ம் ஆண்டு தொடக்கம் 31.12.1990 ம் ஆண்டு வரையான இருபது வருட காலங்களாக, தனது சொந்த ஊரான குரும்பசிட்டியில் பொன் பரமானந்தர் மகாவித்தியாலயத்தில் ஆசிரியப்பணியில் ஈடுபட்டவர் இந்த நல்லிதயப் பண்பாளர். குருவாக உருவாகி அறிவுக்கருவாகிப் பலருக்கும் விலையிலா நிலையான கல்விச் செல்வத்தை உருவாக்கி இந்நிலையிலா வாழ்வில் பலருக்கும் ஒளியானவர்.

கந்தர் நன்னிக்குட்டி–சுப்பிரமணியம் தெய்வானை தம்பதிகளுக்கு 21.05.1933 அன்று மூத்த மகளாகப்பிறந்த இவருக்கு, லக்சுமி (இராசமணி) சின்னத்துரை – கனடா, சிவபதி பாலகிருஷ்ணதாசன்- பிரான்ஸ் மற்றும் காலஞ்சென்றவர்களான நாகம்மா அரசகேசரி, நடராசா ஆகிய நால்வரும் சகோதரங்களாவர். பிறிதொரு குரும்பசிட்டிக் கோமகனாம் திருவாளர் சின்னத்தம்பி கனகசுந்தரம் ஆசிரியப்பெருந்தகை அவர்களை 17.01.1954ம் தினத்தன்று மணமுடித்துக் குடும்ப சமேதரானார். திருவாளர் கனகசுந்தரம் அவர்கள் தலைமையாசிரியராகக் கடமை புரிந்து இளைப்பாறியபின் அவுஸ்திரேலியா-சிட்னியில் வசித்துவருகிறார். இவ்வாசிரியத் தம்பதியினருக்குக் கிடைத்த இரு பிள்ளைச் செல்வங்கள் ஜெயசீலன், ஜெயராணி ஆவார்கள். ஜெயசீலன் அவர்கள் விஜயலக்சுமி அவர்களையும், ஜெயராணி அவர்கள் ரகுநாதன் அவர்களையும் திருமணம் முடித்து, தற்பொழுது அவுஸ்திரேலியா-சிட்னியிலும் கனடா-வன்கூவரிலும் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள். திருமதி செல்லம்மா ரீச்சரின் பேரப்பிள்ளைகள் அறுவர் லக்ஷி, நிகாசன், லக்சுமி, ஹரி, ஐங்கரன், மயூரமி ஆகியோராவர்.

மதிப்புக்குரிய திருமதி செல்லம்மா கனகசுந்தரம் ஆசிரியை அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை குரும்பசிட்டி பொன் பரமானந்தர் பாடசாலையில் படிக்கத்தொடங்கி எட்டாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.சி வரை மயிலிட்டி தெற்கு ஞானோதயா வித்தியாசாலையிலும் கற்றுக்கொண்டார். எஸ்.எஸ்.சி வரையான ஆங்கிலமொழிக் கல்வியை வசாவிளான் மகாவித்தியாலயத்திற் சேர்ந்து படித்துத் தேர்ச்சிபெற்றார். 1951 ம் ஆண்டு மாத்தறையிலுள்ள முஸ்லீம் பாடசாலையொன்றில் தற்காலிக ஆசிரியராகப் பணிபுரியத்தொடங்கினார். 1952 ம் ஆண்டு கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையிற் சேர்ந்து இருவருட கால தமிழாசிரியப் பயிற்சியைப் பெற்றுக்கொண்டபின், தனது கணவர் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த கேகாலை-அம்பே என்ற ஊரின் முஸ்லீம் பாடசாலையில் ஆசிரியப்பணியைத் தொடர்ந்தார். 1957-1958 ஆகிய இரண்டு வருடங்களும் இரத்தினபுரியில் தமிழ்ப் பாடசாலையொன்றில் கற்பித்து, பின்னர் சிறிதுகாலம் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியிலும் 1959 ஜனவரி முதல் வசாவிளான் மத்திய மகாவித்தியாலயத்திலும் தன் இனிய ஆசிரியப்பணியைத் திறம்படச்செய்தார். அதன் பின்னதாக, முன்னதாக யான் குறிப்பிட்டதுபோல், குரும்பசிட்டி பொன் பரமானந்தர் மாவித்தியாலயத்தில் தான் ஓய்வுபெறும் காலம்வரை, இருபது வருடங்களைத் தன் பிறந்த ஊருக்காகச் சேவைசெய்த பெருமையைப் பெற்றவர் இவ்வாசிரியத் தாயாராவர். 1994 ம் வருடம் இவர் தன் கணவருடன் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா-சிட்னி சென்று ஈஸ்ற்வூட், நோர்த் பரமற்றா நகரங்களில் வாழ்ந்து வந்தார். தன் இறுதிக் காலங்களிற்கூட அப்பகுதியிலுள்ள இந்து சமூக வீட்டுத்திட்டங்களின் நிர்வாகங்களுக்கான சமூக சேவகியாகத் தொண்டாற்றினார்.

அவர் கடும் சுகவீனம் காரணமாகவும் மூப்படைந்த நிலையிலும் கடந்த 08.11.2011 அன்று காலமாகிப்போனார்.

By – Shutharsan.S

நன்றி – ஆக்கம் – சி.கிருஷ்ணகாந்தன் – கனடா

Sharing is caring!

Add your review

12345