ஆழிக்குமரன் ஆனந்தன்

ஆழிக்குமரன் ஆனந்தன்

ஆழிக்குமரன் ஆனந்தன் (வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) ஒரு நீச்சல் வீரர் 1943 ம் ஆண்டு வல்வெட்டித்துறையில் பிறந்தார். பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வீரர் ஆவார். ஏழு உலகசாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்கு நீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு ஆழிக்குமரன் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார். சிறு பிள்ளையிலேயே இவர் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். ஒர் ஈருந்து (மோட்டார் சைக்கிள்) தீநேர்ச்சியின் (விபத்தின்) விளைவால் இவரது மண்ணீரல் அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை. இதன் பின்னர் இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார். குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார். ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்த போது குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவினார். குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை என்று தெரிவித்தார். இதுதான் அவர் இறக்கு முன்னர் கூறிய கடைசி வார்த்தை இறப்பு ஆகஸ்து 6, 1984 ஆங்கிலக் கால்வாய். எத்தனை பேர் அறிவோம் இவரை எம் மண்ணின் சாதனை தமிழன் ஒரு முறை நினைத்து பார்போம்.

வல்வை பெருமையுடன் கொண்டாட வேண்டிய ஆண்டுவிழாக்கள் பல உண்டு. அந்தப்பட்டியலில் ஆழிக்குமரன் ஆனந்தனின் நினைவு தினமும் ஒன்று.
ஆனந்தனின் சாதனைகளால் பெருமைப்பட்ட நாங்கள் அவர் இப்பொழுது நேரடியாக தோல்விகளிலும் சமபங்கேற்ற  நண்பர்களான கதிர்காமர், இராமநாதன்,சண்முகானந்தம் போன்றவர்கள் இப்பொழுது உயிருடன் இருந்திருந்தால் ஒருவேளை இந்தத் தவறு ஏற்பட்டிருக்காது என நினைக்கவும் தோன்றுகிறது.

நாம் ஆனந்தனை மறக்கமுடியாமல இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. அவருடைய சாதனைகளை நான் மறந்தாலும், அவருடைய ஊர் அபிமானத்தையும், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர் அதனை வெளிக்காட்டிய பாங்கையும் மறக்கவே முடியாது. இயற்கை விதிகளுக்கமைய ஊர் அபிமானமும் பரந்த மனப்பான்மையும் ஒன்றிற்கொண்டு முரண்பட்ட விடயங்கள். ஓன்று குறுகியது. மற்றது பரந்தது. இந்த இரண்டு குணாதிசியங்களையும் ஒரே மனிதனிடம் காண்பது மிக மிக அபூர்வம், ஒன்றிருந்தால் ஒன்றிருக்காது. ஆனால், ஆனந்தன் இந்த இயற்கை விதிக்கு அப்பாற்பட்டு விளங்கினார் என்பது எத்தனை பேர் அறிவார்கள்? ஊரின் புகழையே சதா பாடிக்கொண்டிருந்த ஆனந்தனுக்கு இளைஞர்களை ஊக்குவிக்கும் விடயத்தில் மாத்திரம் ஊர், சாதி, சமயம், என்னும் வரம்புகள் மறந்துவிடும். இந்த விடயத்தில் ஒரு விதிவிலக்காக விளங்கினார் என்பதை அவரை குருவாகவும் முன்னுதாரணியாகவும் ஏற்று அவருக்குப் பின்னர் பல சாதனைகளைப் படைத்த இஸ்லாமிய , சிங்கள வாலிபர்கள் பத்திரிகைகளுக்கு வழங்கிப் பதிவாகியிருக்கும் நேர் காணல்களில் இன்றும் காணலாம். ஊர் அபிமானம் பரந்த நோக்கத்திற்கும் தேசபக்திக்கும் தடையாக இருக்க வேண்டியதில்லை என்பதற்கு ஒரு உதாரண புருசராக விளங்கியவர் ஆனந்தன்.

ஆனந்தனின் சாதனைகளை கின்னஸ் புத்தகத்தில் காணலாம். இவற்றை தமிழில் புத்தகமாக வெளியிட்ட பெருமை அயல் ஊரில் பிறந்த திரு .ஈ.கே.இராஐகோபால் அவர்களைச் சாரும். அவர் அந்தப் புத்தகத்தை வெளியிடாமல் இருந்திருந்தால் ஆனந்தனின் சாதனைகள் தொடர்பான பதிவுகள் எவையும் தமிழில் இருந்திருக்காது. அதற்காக இந்தச் சந்தர்ப்பத்தில் தம்பி இராஐகோபால் அவர்களுக்கு ஊர் மக்களின் சார்பாக எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இந்தப் புத்தகங்களில் காணப்படுவதெல்லாம் வெற்றிகரமாக நிறைவேறிய சாதனைகள் மாத்திரமே. அது ஆனந்தனின் பாதிக் கதை. பல சாதனைகள் தோல்வியில் முடிந்தன. பல சாதனைகள் வெற்றியில் முடிந்தாலும், சில நுட்பமான விதிகளின் காரணத்தால் கின்னஸ் நிறுவனத்தினரால் நிராகரிக்கப்பட்டும் உள்ளன. ஏன், முதலாவது முயற்சியே தோல்வியில்தான் முடிந்தது. ஆனந்தனின் தோல்வியில் முடிந்த அந்த முதலாவது முயற்சியே ஆனந்தனுக்குப் பல பாடங்களைக் கற்பித்தன. அதுவே உந்து கோலாகவும் வழிகாட்டியாகவும் விளங்கியதெனக் கூறினால் மிகையாகாது.

அப்படியிருந்தும் சாதனையில் வெற்றி கண்டால் கின்னஸ் நிறுவனத்திற்கு சமர்ப்பித்தாயிற்று. பத்திரிகைகளுக்கு அறிவித்தாயிற்கு என்பதுடன் வேலை முடிந்துவிடும். அது தொடர்பாக சில நாட்கள் கொண்டாடுவோம். பின்பு அடுத்த முயற்சிக்கு ஆயத்தங்கள் ஆரம்பமாகிவிடும். வெற்றி பெற்ற சாதனைகள் மனதிற்கு மகிழ்சியை ஏற்படுத்தினாலும் தோல்வியில் முடிந்த முயற்சிகளே மனதில் கூடிய காலம் நிலைத்திருக்கும். அதற்குக் காரணம் அனுபவித்த கஷ்டங்களும், துன்பங்களும், ஏமாற்றங்களும் மாத்திரம் அல்ல. அப்படியான சில சம்பவங்களை நினைவுகூருவது அவர்களுக்குப் பின்னர் பெரும் பொழுது போக்காகவும் இருந்தது. அனுபவித்த பொழுது கஸ்டமாக இருந்த பல நிகழ்வுகள் பின்பு ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரிப்பதற்கும் நையாண்டி செய்வதற்கும் உதவியதையும் அவர்களுக்கு மறக்க முடியவில்லை. அவற்றை முழமையாக விளக்குவதற்கு ஒரு கட்டுரை போதாது. ஆனபடியால் ஆனந்தனின் முதலாவது முயற்சியின் போது ஏற்பட்ட கஸ்டத்துடன் கலந்து சில சுவையான நிகழ்வுகளை மாத்திரம் இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

குறிப்புகள் ஒன்றும் இப்பொழுது இல்லாததால் சரியான திகதிகளையும் நேரங்களையும் குறிப்பிட முடியவில்லை. ஆனந்தனுடைய முதலாவது நீச்சல் முயற்சி. வல்வை ரேவடிக் கடற்கரையில் மக்கள் கூட்டம் கரைபுரண்டது. ஊரிலுள்ள அத்தனை மக்களும் அங்கு கூடியிருந்தார்கள் எனக் கூறினாலும் அது மிகையாகாது. அதற்கு முன்னர் காலையிலும் தொண்டமானாற்றிற்குச் சென்று முதலாவதாகப் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திரு.நவரத்தினசாமியைச் சந்தித்தார்கள். அவருடைய நல்லாசியைப் பெறுவதற்காக. கால நிலையைப் பற்றியும் அவருடன் பேசினார்கள். அப்பொழுது காலநிலை சீராகவே இருந்தது. நீந்துவதற்குப் பொருத்தமாக இருக்கும் எனவும், ஆனால் அந்த மாதத்தில் காலநிலையானது ஒரு முன்னறிவித்தலும் இல்லாமல் நேரத்திற்கு நேரம் மாறும் சுபாவம் கொண்டதெனவும் அவர்  அறிவுரை வழங்கி அவர்களை வழியனுப்பி வைத்தார்.

திரும்பி வரும்பொழுதும் ஆனந்தனை தொண்டைமானாற்றில் இருந்து நீச்சலை ஆரம்பிக்குமாறு பலர் கேட்டனர். அப்படிச் செய்தால் நீந்தும் தூரம் மூன்று மைல்களால் குறையும் என்பதே அவர்கள் கூறிய காரணம். ஆனால் ஆனந்தன் அதற்கு மறுத்துவிட்டார். தொண்டைமானாற்றில் இருந்து நீந்தினால் நவரத்தினசாமியுடன் போட்டியிடுவதைப் போலத் தோன்றும் எனவும், அதனால் அதனை தான் விரும்பவில்லை எனவும், அடுத்தது தான் பிறந்த ஊரில் இருந்தே நீச்சலை ஆரம்பிக்க விரும்புவதாகவும் ஆனந்தன் கூறிவிட்டார். அதனால் ரேவடிக் கடற்கரையில் இருந்தே நீச்சல் ஆரம்பமாகியது. அவருடைய உடம்பு பூராவும் கிறீஸ் பூசினார்கள். அந்த நிலையில் ஆனந்தனைப் பார்த்த பொழுது சிரிப்புத்தான் வந்தது.

ஆழிக்குமரன் ஆனந்தன்

வழி அனுப்புவதற்காக வந்திருந்த மக்களுக்கு தன் வணக்கத்தை தெரிவித்து விட்டு ஆனந்தன் நீரில் இறங்கி கழுத்தாழம் வரை நடந்து சென்றுவிட்டு நீந்த ஆரம்பித்தார். ஊரில் உள்ள அத்தனை வள்ளங்களும் கட்டுமரங்களும் அவரைச் சூழ்ந்து புறப்பட்டன. ஆனந்தனுக்கு இடைஞ்சல் செய்யாதவாறு சிறிய சிறிய தூரங்களுக்கு அவருடன் நீந்துவதற்கு பலர் ஆசைப்பட்டனர். அனுமதி வழங்கப்பட்டு நீச்சல் நிம்மதியாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர்களது குழுவைச் சார்ந்த கதிர்காமர், இராமநாதன், சண்முகானந்தம் ஆகியோர் ஒரு கட்டுமரத்தில் ஆனந்தனைத் தொடர்ந்த வண்ணம் அவருக்கு நேரத்திற்கு நேரம் சிறிய புட்டிகளில் அடைக்கப்பட்ட brand’s essence of chicken என்னும் திராவகத்தை ஊட்டியவாறு மாறி மாறி அவருடன் இயன்றளவு தூரத்திற்கு நீந்திப் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தார்கள்.

சூரியன் மறையும் நேரத்தில் திடீரென வானம் கறுக்கத்தொடங்கியது. இருட்டு அதிகரிக்க அதிகரிக்க ஆனந்தனுடைய உள்ளங்கால் வெள்ளை வெளீரென காட்சியளித்தது. அப்பொழுது அவர்களுடன் வந்த ஒரு கடலோட்டி அப்படி தெரிவது கூடாது. அது பெரும் ஆபத்தான விடயம், அப்படியான வெள்ளையைப் பார்த்துத்தான் சுறா மீன் மனிதர்களைத் தாக்கும் எனக் கூறினார். அது பிரச்சினை இல்லை எனக் கூறிவிட்டு அவர்களுடன் வந்த ஒரு வள்ளத்திலிருந்து சிறிதளவு கிறீஸ் பூச ஆரம்பித்தார்கள். அந்த நிகழ்ச்சியை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்புத்தான் வருகின்றது. ஈரமான உடம்பில் கிறீஸ் பார்த்தீர்களானால் எதற்காக சிரிப்பு வந்ததென உங்களுக்குத் தெரியவரும். அவர்களுடன் வந்த ஒரு புத்திஐீவி உரு ஸொக்ஸ் மாட்டினால் நல்லது எனக் கூறினார். எல்லோருமே வெறுங்காலுடன் இருக்கையில் அப்படி அறிவுரை வழங்கினால் எப்படி இருக்கும்?. அடி செருப்பாலென அவருக்குக் கூறிவிட்டு அவர்களுடைய வேலையைத் தொடர்ந்தார்கள்.

என்ன நடந்ததென்பதே தெரியாது. ஒரு பதினைந்து நிமிடங்களுக்குள் வானம் முகில்களால் மூடிமறைக்கப்பட்டது. காற்றின் வேகம் அதிகரித்தது, அலைகள் பத்தடி பதினைந்து அடிக்கு உயர்ந்து மோதியது. சற்று நேரத்தில் மழையும் கொட்டத் தொடங்கியது. ஒவ்வொரு அலையும் அவர்கள் சென்றுகொண்டிருந்த கட்டுமரத்தை தூக்கியடித்தது. சம்மாலி கோலிக்கொண்டிருந்தவர் தூக்கி கட்டுமரத்தில் அடிக்கப்பட்டார். வலியோ அடியில் இருந்து முதுகெலும்பு வாயிலாக உச்சிக்கு சென்றது. எழுந்து நிற்கவும் முடியவில்லை.அப்படியான அலைகள். முழங்காலில் நின்று கட்டுமரத்தின் இருபக்கங்களையும் இறுகப் பிடித்துக் கொண்டார். அடுத்து வந்த அலை தூக்கியடித்ததில் அவருக்கு முழங்கால் சில்லுப் பறந்ததைப் போல் இருந்தது.
அவர்கள் உடைகள் எல்லாம் தெப்பமாக நனைந்த நிலையில் அந்த மழையாலும் காற்றாலும் ஏற்பட்ட குளிரைத் தாங்க முடியவில்லை. அவருடன் வந்த வள்ளங்களில் பணிஸ், கதலி வாழைப்பழக்குலை, ஒரேஞ் பார்லி, எள்ளுப் புண்ணாக்கு, கப்பல் வாழைப்பழச் சீப்பு ஆகிய உணவுப் பொருட்கள் குறைவில்லாமல் இருந்தன. அவற்றைப் பற்றி கதைக்கும் நிலையில் கூட ஒருவரும் இருக்கவில்லை. இப்படி அவதிப்பட்டுக் கொண்டிருக்கையில் ஏதோ ஒரு வள்ளத்தில் இருந்து இரண்டு சாராயப் போத்தல்களை இக் கட்டுமரத்தில் இருந்தவர்களிடம் கொடுக்கப்பட்டன. வாழ்க்கையிலேயே சாராயம் குடிக்காதவர்களும், குடிப்பதனால் கிளாஸ் வேணும் எனக் கேட்டவர்களும், கிளாஸ் மட்டும் போதாது கலந்து குடிப்பதற்கு ஒரேஞ் பார்லி வேணும் எனக் கேட்டவர்களும் போத்தலில் இருந்து சாராயத்தை நேராகத் தொண்டைக்குள் விட்டனர். அவர்கள் இருந்த நிலையில் ஒருவரையுமே குறைகூற முடியாது. நாக்கு, தொண்டை, குடல் எல்லாவற்றையுமே எரித்துக் கொண்டு போனது சாராயம். உடம்பில் சூடேறியதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. ஆனால் அந்த உணர்வு ஒரு பதினைந்து நிமிடங்களுக்குத் தானும் நின்று பிடிக்கவில்லை. அப்படியான குளிர்.

ஓரு திசையில் போய்க்கொண்டிருக்கும் கட்டுமரம் அலை தூக்கியடித்ததும் வேறு திசையை நோக்கி நிற்கும். இருளோ இருள். கணிப்பதற்கு ஒரு நட்சத்திரம் கூட வானத்தில் தெரியவில்லை. அவர்களுக்கு வழிகாட்டிகளாக வந்த கடலோட்டிகளுக்கும் குழப்பம் ஏற்பட்டு விட்டது. ஆனந்தனுக்கு இருபக்கங்களிலும் இரண்டு கட்டுமரங்கள் போய்க்கொண்டிருந்தன. ஒரு கட்டுமரத்தில் இருந்த டோச் லைற் அடித்த புயலினால் கடலுக்குள் விழுந்துவிட்டது. ஒரு டோச் லைற்றின் உதவியுடன் ஆனந்தனை கண்காணித்து வந்தார்கள். ஆனால் சற்று நேரத்தில் கட்டுமரம் சுழன்று அடித்ததினால் ஆனந்தனைத் தவறவிட்டுவிட்டார்கள். அந்த உயரமான அலைகளுக்குள் மத்தியில் கும்மிருட்டில் ஒரு தேங்காய் அளவிலான தலையை ஒரேயொரு டோச் லைட்டைக் கொண்டு தேடுவதில் உள்ள கஷ்டத்தை அனுபவித்தால்தான் தெரியும்.

ஆனந்தனைக் காணவில்லை. தவறவிட்டு விட்டோம் தேடுங்கள் என அந்த இருட்டில் அவருடன் வந்த வள்ளங்களை நோக்கி கூக்குரலிட்டார்கள். இப்படி அவர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கையில் அவர்களுடன் வந்த வள்ளமொன்று ஊருக்குத் திரும்பிப் போய் ஆனந்தனைக் காணவில்லை எனக் கூறிவிட்டனர். அது எப்படியான குழப்பத்தை ஏற்படுத்தியது என்பதை அவர்கள் ஊரக்குத் திருப்பிய பின்னரே அறிந்து கொண்டார்கள். வெகு நேரம் கஷ்டப்பட்டு ஆனந்தனைக் கண்டுபிடித்தார்கள். அவரை மறுபடியும் கண்டுபிடித்த இடம் கட்டுமரத்திற்கு வெகு தொலைவில் இருக்கவில்லை. இருட்டும், புயலும், மலை போல வீசிய அலைகளுமே அவரை அந்த நேரம் கண்டுபிடிக்க முடியாமல் இருந்ததிற்கான காரணம்.
இரவு பூராவும் இப்படிக் கஷ்டப்பட்ட பின்னர் கிழக்கு வானம் ஒருவாறு வெளிக்கத் தொடங்கியது. ஆனந்தன் நீந்திக் கொண்டே இருந்தார். நன்றாக வெளித்த பின்புதான் ஆனந்தன் அணிந்திருந்த swimming goggles அவருடைய முகத்தில் இல்லை என்பதை கண்டார்கள். அடித்த கடலுடன் அது போய்விட்டது. கண்ணை மூடிக்கொண்டும் நீந்த முடியாது. அப்படி கண்களைத் திறந்து கொண்டு நீந்திய ஆனந்தனுடைய கண்களில் 45 மைல் வேகத்தில் அடித்த கடல் உப்பு நீர் அவருடைய கண்களைக் கொவ்வைப் பழங்களைப் போலச் சிவக்கச் செய்திருந்தன. அத்துடன் கண்களும் வீங்கிக் காணப்பட்டன. அத்துடன் புயலிலும், காற்றிலும் அலையிலும் மழையிலும் இரவு வெகுநேரம் பிழையான திசையில் நீந்தியிருக்கலாம் என்னும் எண்ணமும் தோன்றியது. அவை எல்லாவற்றிற்கு மேலாக இரவு பூராவும் அடித்த புயலின் காரணமாக ஆனந்தன் பெருமளவு கடல் உப்பு நீர் அருந்தியிருக்க வேண்டும். அடிக்கொரு தடவை சத்தி எடுக்கத் தொடங்கி விட்டார். தண்ணி தண்ணியாகத்தான் சத்தி எடுத்தார். ஆனால் இரத்தம் கலந்திருப்பதைப் போல தெரிந்தது. அது உண்மையாக இரத்தம் தானா அல்லது நினைவிற்கு அப்படித் தோன்றிற்றோ திட்டவட்டமாகக் கூறமுடியாது. ஆனால் அது அவர்கள் மனதைப் பெரிதும் குழப்பியது.

இவை எல்லாவற்றையும் யோசித்துவிட்டு நீந்தும் முயற்சியைக் கைவிட்டு விட்டு கட்டுமரத்தில் ஏறிக் கொள்ளுமாறு ஆனந்தனிடம் கெஞ்சினார்கள். ஆனால், ஆனந்தனோ உயிர் போனாலும் பரவாயில்லை முயற்சியைக் கை விட முடியாது என அடித்துக் கூறிவிட்டார். அன்று மாலை வரை பொறுத்திருந்து பார்த்தார்கள். புயலோ சற்றேனும் குறைவதாகத் தெரியவில்லை. முன்னதைப் போன்ற இன்னொரு இரவை அப்படியான சூழ்நிலையில் கழிப்பதற்கு ஒருவரும் தயாராக இல்லை. ஆனந்தனைக் கட்டாயமாக கட்டுமரத்தில் தூக்கிப் போடுவதற்கும் முயற்சித்தார்கள். அப்படி செய்வதற்கு முயன்றால் நீரில் மூழ்கி இறப்பதற்கு தான் தயங்கமாட்டேன் என ஆனந்தன் பிடிவாதம் பிடித்தார். ஒருவர் கத்தின கத்துதலில் கட்டுமரத்தில் இருந்தவர்கள் ஆனந்தனை மடக்கி கட்டுமரத்தில் தூக்கிப் போட்டுவிட்டார்கள். அவர் என்ன சொல்லிக் கத்தினார் என்பது அவருக்குத் தெரியாது. ஆனால் பல நாட்களாக அவருடன் வந்தவர்கள் அவர் தூஷணத்தில் கத்தியதாக சொல்லி நையாண்டி செய்தார்கள். ஒரு காலமும் தூஷணமான வார்த்தைகளைப் பேசிப் பழக்கமில்லாத அவர்  அப்படியான வார்த்தைகளை உபயோகித்தது அவர்களுக்கே ஆச்சரியமாய் இருந்ததாம். அப்படியான வார்த்தைகள் உபயோகித்தாக அவருக்கு ஞாபகம் இல்லை. ஆனால் அப்படியான ஒரு மனநிலையில் அப்பொழுது இருந்தார் என்பது ஓரளவு உண்மைதான்.

ஊர் வந்து சேரும் வரை அழுது கண்ணீர் வடித்தபடியே இருந்தார். அவருக்குக் கிட்டபோகவே இவருக்கு தைரியம் வரவில்லை. அடுத்த முயற்சியில் ஆனந்தன் வெற்றிபெற்றார் என்பதை கூறத் தேவையில்லை. அத்துடன் அந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதானால் இந்த மலரில் இடம் போதாது. ஆனால் ஒன்றை மாத்திரம் குறிப்பிடாமலும் இருக்கமுடியவில்லை. முன்னதைப் போலவே ரேடிக் கடற்கரையில் சகல ஒழுங்குகளும் முடிந்து ஆனந்தன் கடலில் இறங்குவதற்கு ஆயத்தம். இவரை நோக்கி வந்த ஆனந்தன் தனது கையில் அடித்து ஒரு சத்தியம் தரவேண்டும் என  கேட்டார். அவர் எதைக் கேட்கப்போகிறார் என்பது தெரியாது. அப்படியிருந்தும் அவருடைய கையில் அடித்து எதைக் கேட்டாலும் செய்வேன் எனக் கூறினார். ஆனந்தன், முன்னர் நடந்ததைப் போன்ற நிலை ஏற்பட்டால் தன்னை வலுக்கட்டாயமாக கடலில் இருந்து தூக்கக்கூடாது எனக் கேட்டுக் கொண்டார். ஆனால் அப்படியான நிலைமை திரும்பவும் ஏற்பட்டால் முன்பு செய்ததைப் போலவே செய்து இவர் சத்தியத்தைக் காற்றில் பறக்கவிட்டிருப்பார் என்பதும் உண்மை. கடவுளின் கிருபையால் இரண்டாவது முயற்சி ஒரு பிரச்சினையும் இல்லாமல் வெற்றியில் இனிதாக முடிந்தது. அவரின் சத்தியமும் காப்பாற்றப்பட்டது.

ஆனந்தனின் மனத்திடமும் விடாமுயற்சியும் எமது இளைஞர்களுக்கு மாத்திரம் அல்ல, வருங்காலச் சந்ததியினருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும். அதனால் எமது சமூகம் நிச்சயமாக பயன் அடையும் என்பது திண்ணம். அந்த உதாரண புருஷனுக்கு என்றும் நாம் தலை வணங்குவோம்.

By – Shutharsan.S

Sharing is caring!

1 review on “ஆழிக்குமரன் ஆனந்தன்”

  1. jana says:

    விதைத்தவன் உறங்கினாலும்
    விதை ஒருபோதும்
    உறங்குவதில்லை!

Add your review

12345