ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயம்

ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயம்
பாடசாலையின் தோற்றம்

1885 ஆம் ஆண்டு கத்தோலிக்க திருச்சபையினால் ஆரம்பிக்கப்பட்ட ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயம் பாடசாலையானது ஆரம்ப காலத்தில் ஆரம்ப வகுப்புக்களை கொண்டிருந்தது. ஆரம்பத்தில் இப்பாடசாலையானது கடற்கரை வீதியும் பாடசாலை வீதியும் சந்திக்கின்ற சந்தியின் வடக்குப்புறமாக கடற்கரை ஓரத்தில் சிறு குடிசை ஒன்றில் ஆரம்பிக்கப்பட்டது.

திரு.A.K. தம்பிராசா என்பவர் முதல் தலைமை ஆசிரியராக இருந்துள்ளார். இவரை ஊர் மக்கள் தம்பிராசா சட்டம்பியார் என அன்பாக அழைத்தனர். 1940களில் திரு. தியாகராசா என்பவர் தலைமை ஆசிரியராக இருந்துள்ளார். தொடர்ந்து 1950களில் திரு. நடராசா என்பவர் தலைமை ஆசிரியராக இருந்துள்ளார். அதனைத்தொடர்ந்து திரு. சி. சின்னையா என்பவரும் பின்னர் 1960 இல் திரு. மு. சிற்றம்பலம், 1986 இல் திரு. து. இராசரத்தினம், 1997 இல் திரு. ச. திரவியராசா என்பவர்கள் அதிபர்களாக இருந்துள்ளனர். 2008 தொடக்கம் இன்றுவரை திரு. க. பாஸ்கரன் அவர்கள் அதிபராக கடைமையாற்றி வருகின்றார்.

ஒரு ஆரம்பக் கல்விப் பாடசாலையாக தொடங்கப்பட்ட இப்பாடசாலையானது 1991 இல் க.பொ.த.சாதாரண வகுப்புக்களை கொண்ட பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. தொடர்ந்து 1997 இல் க.பொ.உயர்தர வகுப்புக்கள் நடாத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டு ஒரு 1C பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.

இப்பாடசாலையானது 1991 இல் க.பொ.த. சாதாரண வகுப்புக்களை கொண்ட பாடசாலையாக தரமுயர்த்தப்பட்ட பொழுதிலும் அக்காலப்பகுதியின் யுத்தச்சூழல் காரணமாக இப்பாடசாலை இடம் பெயர்ந்து யா/செம்பியன்பற்று றோ.க..த.க. பாடசாலை வளாகத்தில் அமைக்கப்பட்ட கீற்றுக்கொட்டகையில் கல்விச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

பாடசாலைச் சமூகத்தினர் பெருமளவான தளபாடங்களை மீட்டு வந்து இயல்பான கல்விச்செயற்பாடுகள் முன்னெடுப்பதற்கு பெரிதும் உதவினர்.

எனினும் கீற்றுக்கொட்டகை விசமிகளால் எரித்து நாசம் செய்யப்பட்டது. மீண்டும் இப்பாடசாலையானது புதிதாக அமைக்கப்பட்ட மற்றுமொரு கீற்றுக்கொட்டகையில் தனது கல்விச்செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கியிருந்தது.

1995, 1996 ஆம் ஆண்டுகளில் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை காரணமாக பாடசாலைச்செயற்பாடுகள் மிகவும் பாதிப்புக்குள்ளானது. 2000 ஆம் ஆண்டு யுத்த நெருக்கடி காரணமாக மாகாணக் கல்வித்திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைய இப்பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டது. எனினும் பாடசாலைச்சமூகமும், இப்பகுதி அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒருமித்து குரல் கொடுத்தமையின் விளைவாக இப்பாடசாலையானது 2001 ஆம் ஆண்டு யா/குடத்தனை அ.மி.த.க. பாடசாலையில் இணைந்த பாடசாலையாக இயங்க ஆரம்பித்தது.

2002 ஆம் ஆண்டு இலங்கை அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான யுத்த நிறுத்தத்தின் பயனாக மீண்டும் சொந்த இடத்தில் பாடசாலை இயங்க ஆரம்பித்தது. இக்காலப்பகுதியில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் இணைபாடவிதானச் செயற்பாடுகளும் வளர்ச்சியடைய ஆரம்பித்தன. ஆயினும் 2004 டிசம்பர் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தம் காரணமாக பாடசாலை பெருமளவில் சேதமடைந்தது. பாடசாலையின் ஆவணங்கள் அழிவடைந்தன. இங்கு கல்வி கற்ற 35 மாணவர்கள் சுனாமியால் காவு கொள்ளப்பட்டனர். இப்பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர்களும் உறவுகளின் இழப்புக்களையும், சொத்திழப்புக்களையும் எதிர் கொண்டனர். இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் உளநெருக்கீடுகளுக்கு உள்ளாயினர். இதன் விளைவாக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகள் இப்பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டன. மேலும் இப்பாடசாலை கடற்கரையில் இருந்து 300 மீற்றர் எல்லைக்குள் இருந்தமையால் பாடசாலையின் அமைவிடத்தை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது.

இவ்வகையில் தற்போதைய பாடசாலை காணப்படுகின்ற இடத்தில் இருந்து தென்மேற்கே 300 மீற்றர் தூரத்திற்கு அப்பால் பாடசாலை அமைப்பதற்கு 4 ஏக்கர் காணி அரசினால் ஒதுக்கப்பட்டிருந்தது. ஜய்க்கா நிறுவனம் புதிய பாடசாலை அமைப்பதற்கு 8.5 கோடி ரூபாவை ஒதுக்கி வேலைகளை ஆரம்பித்தது. ஆனால் கற்றல் செயற்பாடுகள் பழைய பாடசாலை அமைந்த இடத்திலேயே நடைபெற்றுக்கொண்டு இருந்தது. எனினும் 11.08.2006 ம் திகதி மீண்டும் யுத்தம் வெடித்ததன் காரணமாக பாடசாலை வன்னிப் பகுதிக்கு இடம் பெயர வேண்டி ஏற்பட்டது. அப்போது பாடசாலையின் அதிபர் திரு. ச. திரவியராசா பருத்தித்துறையில் தனது வதிவிடத்திற்குச் சென்ற காரணத்தாலும் வன்னிப்பகுதிக்கும் யாழ்குடாநாட்டுக்கும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தமையினால் உப அதிபராக இருந்த திருமதி ச. கிருஸ்ணலிங்கம் பாடசாலைப் பொறுப்புகளை ஏற்று நடத்தினார். கிளிநொச்சி வலயத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் பாடசாலை இயங்கியது. கிளி/புன்னை நீராவி அ.த.க. பாடசாலையில் இணைந்த பாடலையாக இப் பாடசாலை இயங்கியது. எனினும் இப் பிரதேச மக்களில் அனேகமானவர்கள் தொழிலின் நிமிர்த்தம் சுண்டிக்குளம் பகுதியில் வாழ்ந்து வந்தமையினால் அவர்களின் தேவை நலன் கருதி கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளரின் பேரில் 2007ம் ஆண்டு சுண்டிக்குளம் பகுதியில் கீற்றுக்கொட்டகைகள் அமைத்து கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற்றன. ஆழியவளையில் இருந்து மாணவர்களுக்கான தளபாடங்கள் எடுத்து வரப்பட்டு பயன்படுத்தப்பட்டன. ஏறக்குறைய 175 மாணவர்கள் அப்போது கல்வி கற்றனர். 19.03.2007 அன்று விமானக்குண்டு வீச்சுக்காரணமாக பாடசாலை அழிக்கப்பட்டது. இப்பாடசாலையில் கற்பித்த செல்வி. கே. சத்தியவதி என்பவரும் வேறு மாணவர்கள் நால்வரும் காயமடைந்தனர். இத்தகைய பாதிப்புக்காரணமாக இப் பாடசாலை கிளி/கல்லாறு தமிழ் வித்தியாலயத்தில் இணைந்த பாடசாலையாக இயங்க ஆரம்பித்தது. ஆனாலும் 2007 ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப்பரீட்சையின் பொழுது இரண்டு மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று கற்பதற்கு தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது. 02.01.2008 தொடக்கம் திரு. க. பாஸ்கரன் அவர்கள் அதிபராக கடமையாற்றி வருகின்றார். கட்டைக்காட்டுப் பகுதியில் வாழ்ந்த தரம்-10, 11 இல் கல்வி கற்ற மாணவர்களை கருத்தில் கொண்டு யா/கட்டைக்காடு றோ.க.த. பாடசாலையில் இணைந்த பாடசாலையாக இப்பாடசாலை இயங்க ஆரம்பித்தது. 2009 இல் வன்னி யுத்தம் அதிகரிக்க இப்பகுதியில் வாழ்ந்த அனைவரும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் பல மாதங்கள் வாழ்ந்தனர்.

யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வடமராட்சி கிழக்கு பகுதியில் மீள் குடியேற்றங்கள் இடம்பெற்றன. 28.09.2010 அன்று இப் பாடசாலையும் நிலையான முகவரியில் மீள ஆரம்பிக்கப்பட்டது. 40 X 20 அடி தகரக்கொட்டகையில் ஆரம்பக்கல்வி வகுப்புக்களை மட்டும் கொண்டதாக 8ஆசியர்களுடனும், 35மாணவர்களுடனும் இப்பாடசாலை மீள ஆரம்பிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு 60 x 20, 50 x 20 பரப்புடைய இரண்டு வகுப்பறைக்கட்டடங்களும், 65 x 10 பரப்பளவைக்கொண்ட மல சல கூடத்தொகுதி ஒன்றும் திருத்தி தரப்பட்டது. 2010 இறுதிப்பகுதியில் தரம் 10-11 வரையான வகுப்புக்கள் தொடங்கப்பட்டன.

2011 ஆம் ஆண்டு யுனிசெப் நிறுவனத்தால் 100 x 25 பரப்பளவைக்கொண்ட இரு கட்டடங்கள் திருத்தியமைக்கப்பட்டன. இதை விட 40 x 20 பரப்பளவைக்கொண்ட மற்றொரு கட்டடம் திருத்தியமைக்கப்பட்டது. 500 Gallon நீர் கொள்வனவு உடைய நீர்தாங்கி ஒன்றும் அமைத்து தரப்பட்டது. 2012 இல் சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தால் 60 x 25 நீளமான மற்றொரு கட்டடம் அமைத்து தரப்பட்டது. 2012 இல் க.பொ.த. உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

2013 இல் SDMG வேலைத்திட்டத்தின் மூலம் தற்காலிக வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளதோடு பழைய வகுப்பறைகளின் தரைகள் சமூகப்பங்களிப்போடு திருத்தி அமைக்கப்பட்டன

மகுடவாசகம்

கல்வியே கண்

இலக்கு (Vision)

நவீன சமூக இசைவாக்கததிற்குப்பயனுடைய நற்பிரஜைகளை உருவாக்கக்கூடிய பாடசாலையாக மிளிர்தல்

குறிக்கோள் (Mission)

மாணவர்கள் விழிமியத்துடன் கூடிய சிறந்த தேர்ச்சி மட்டத்தினை பெற்றுக்கொள்வதை அடிப்படையாககொண்டு பாடசாலையை சிறந்த களமாக்கி வாண்மைமிகு ஆசிரியவளத்தினூடாக வினைத்திறனும் விளைதிறனும் கொண்ட முன்மாதிரியான பாடசாலையை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு செயற்படல்

பாடசாலைக்கீதம்

இறையருள் நிறைதரும் எம்தமிழ் வாழ்க

எழிலுறும் எங்கள் வித்தியாலயம் வாழ்க

ஆழியவளையில் அமைந்துள்ள-எம்

வித்தியாலயம் என்றும் மேலோங்கி வாழ்க

அறிவுகள் செறிந்திடும் கலைகள்

அவைகள் அளித்திடும் முறைகள்

நெறியினில் கற்றுமே நேர்மை

நிறைகுண சீலராய் வாழ்வோமே

(இறையருள்)

ஒற்றுமையான நல்வாழ்வு

உலகினில் உயரிய எம் வாழ்வு

வெற்றியே எம்மவர் குறிக்கோள்

வீரமே நிறைந்திடும் எம் வாழ்வு

(இறையருள்)

அரசினர் ஆற்றிடும் நல்லுதவி

அகிலத்தில் வெல்லுமாம் மறவோமே

தரணியில் தமிழ் மொழியும் விழியே

தரணியை காத்திடுவோம் அவ்வழியே

(இறையருள்)

அதிபர் ஆசிரியர் வாழ்கவே

அனைத்து மாணவர் வாழ்கவே

புதிய நற்கலையோடு தமிழும்

புகழுடன் வாழும் எம்வித்தியாலயமே

(இறையருள்)

ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயம்
ஆழியவளை சி.சி.த.க வித்தியாலயம்

மேலதிக தகவல்களுக்கு – http://www.aliyawalai.sch.lk/web இணையம்.

Sharing is caring!

Add your review

12345