ஆவரங்கால் சிவன் கோவில்

ஆவரங்கால்
https://www.facebook.com/AvarangalSivan/

வலிகிழக்குப் பகுதியிலுள்ள வரலாற்று தொன்மை வாய்ந்த தலமாகவும், வயலும் வயல் சார் பகுதியான மருதநிலதில் அருள்பாலிக்கும் சிறப்பினதாகவும் ஆவரங்கால் பர்வதவர்த்தனி அம்பாள் சமேத நடராஜா இராமலிங்க சுவாமி ஆலயம் திகழ்கிறது. இது யாழ் பருத்தித்துறை வீதியில் சிவசக்தி மணிமண்டபத்திற்கு கிழக்குப் புறமாக அமையப் பெற்றுள்ளது.

இலங்கையில் போத்துக்கையரின் ஆக்கிரமிப்பு காலத்தில் கூட அழிவிற்குள்ளாகது டச்சுக்காரரின் காலத்தில் வரலாற்றுப் பதிவானது. டச்சுக்காரரால் தோம்பு எழுதிய காலத்தில் இத் தலத்தின் பெயரில் “பல்வினையான் கொய்வளை நெற்பரப்பு நூறு” என்று சொல்லும் தொம்புக்காணியுடமையாக கொண்டிருந்துள்ளது. காசி விசாலட்சியம்மை சமேத விசுவநாதப் பெருமானும் பர்வதவர்த்தனியம்மை சமேத நடராஜா இராமலிங்கேஸ்வரப் பெருமானும் ஒருக்கிணைத்திருப்பது போன்ற சிறப்புடைய தலமாகும். இந் நாம தொடர்பால் தரிசிக்க முத்தி தரும் தலமாகிய சிதம்பரத்து நடராஜப் பெருமானும் இம் மூர்த்திகளுடன் சேர்ந்துள்ளார். எனவே இராமேஸ்வரம், சிதம்பரம், காசி ஆகிய மூன்று சிறந்த தலங்களிலும் உள்ள மூர்த்திகள் மூவரும் சங்கமமாகி ஒரு மூர்த்தியாக எழுந்த்தருளி இருக்கும் மூர்த்தி விசேடமும் ஆலய சூழலெங்கும் உவர் நீரேயிருக்க கோவிலின் தீர்த்தக் கேணியும் ஆலயக்கிணறும் நன்னீரா திகழ்கின்றமை தீர்த்த விசேடமாகும்.

ஆலய அமைவிட சிறப்பென்ற வகையில் நோக்கினால் இலங்கையின் வேறெந்தத சிவன் கோவிலிலும் அமையப் பெறாத தனித் தன்மையுடையது. காசிக்கும் சுடுகாட்டுக்கும் எவ்வளவு நெருங்கிய தொடர்பும் சிறப்பும் உள்ளதோ அவ்வாறு இவ்வாலய மூலஸ்தானமும் சுடுகாட்டினை நோக்கியுள்ளது.

HA/S/JA/82 என்ற பதிவிலக்கத்தில் 96 பரப்பு காணி ஆலய சொத்தினதாகவுள்ளது. ஆலயம் தொடர்பில் யாழ் மாவட்ட நீதிமன்றின் 1964ம் ஆண்டு இலக்க வழக்கின் தீர்ப்புப் பிரகாரம் 43 பேர் உரிமையாளர்களாவுள்ளனர். இவ் உரிமையாளர்கள் இணக்கத்தில் 5 பேர் கொண்ட ஆலய தர்மபரிபாலன சபை ஆலயத்தை நிர்வகித்து வருகிறது முதலாவது சபையில் தலைவராக க.சின்னத்தம்பி, செயலாளராக அ.தில்லைநாதன் பொருளாளராக த.கனகசபை, உறுப்பினர்களாக ச.சுப்பிரமணியம், த.துரைசிங்கம் போன்றவர்கள் அங்கம் வகித்தனர். 1977 முதல் பண்டிதர் ச.சுப்பிரமணியம் தலைமையில் தர்மகர்த்தா சபை இயங்கியது. நாட்டிலேற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் 1997 முதல் விதானையார் திரு ச.சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் தர்மகர்த்தா சபை 1999 வரை இயங்கியது.

தற்போது 1999 முதல் தலைவராக அ.தில்லைநாதனும் செயலாளராக க.இராசதுரையும், உறுப்பினராக நீ.மயில்வாகனமும் செயற்பட்டு வருகின்றனர்.

ஆரம்ப காலத்தில் சுண்ணாம்புகலவையினால் நிர்மாணிக்கப்பட்டிருந்த்ததினை மாற்றியமைக்க 1977ம் ஆண்டு திருப்பணிசபை தெரிவு செய்யப்பட்டு விதானையார் ச.சோமசுந்தரம் தலைமையில் அடியவர்களின் நிதி உதவியினால் 1982 இல் புணருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் இடம் பெற்றது.

1995 இல் புதிய சித்திரத்தேரும், 2003ல் 7 வாசல் கொண்ட இராஜ கோபுரமும் அமையப்பெற்றது. தொடர்ந்து கருங்கல் தூண்களாலான வில்லு மண்டபமும், தீர்த்த மண்டபமும் அமைக்கப் பெற்று 25/04/2012 கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 2003 முதல் திரு அ.தில்லைநாதன் அவர்களை தலைமையாகக் கொண்டு 23 பேர் அடங்கிய திருப்பணி சபை இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தினசரி மூன்று வேளை நித்திய பூசை நடைபெறுவதுடன் ஆனி உத்தர தீர்த்தத்திற்கேற்ப 10 நாட்கள் சிவன் திருவிழாவும், ஆடிப் பூரத்தீர்த்தத்திற்கேற்ப 10 நாட்கள் அம்மன் திருவிழாவும் நடைபெறுகிறது. ஆலயத்தின் பூர்வீக பூசகர்களாக காசி கங்கா பட்டர் வழிவந்த பூசகர் சந்ததியை சேர்ந்த பிரதிஷ்ட வித்தகர் வேதக்குட்டி நடராஜாக் குருக்களும் அவரது ஏக புத்திரன் ந.யோகானந்தேஸ்வர குருக்களும் ஆலய கிரியைகளை சிறப்புற மேற் கொள்கின்றனர்.

மூர்த்தி, தல, தீர்த்த சிறப்புமிக ஆவரங்கால் கொய்வளை பதியில் பர்வதவர்த்தனியம்மை சமேத இராமலிங்க சுவாமிகள் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் எனில் மிகையாகாது.

தர்மபரிபாலன சபையினர்

திரு அ.தில்லைநாதன் (தலைவர்)
திரு க.இராசதுரை (செயலாளர்)
திரு நீ.மயில்வாகனம்

Sharing is caring!

Add your review

12345