இசை நாடகமும் ஈழத்தின் கர்நாடக இசை வரலாறு

இசை நாடகமும் ஈழத்தின் கர்நாடக இசை வரலாறு பற்றிய ஒரு பார்வை.

இசை நாடகமும் ஈழத்தின் கர்நாடக இசை வரலாறு

ஈழத் தமிழர்கள் பெரும்பாலும் தமிழக மக்களின் கலை கலாசாரம் பண்பாடுகளுடன் ஒத்த வாழ்க்கை முறையில் வாழ்பவர்களாயினும், தமிழகத்தில் தோன்றி பெரு விருட்சமாக வியாபித்து நிற்கும் கர்நாடக இசையானது கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன்னரே ஈழத்தில் பரவலாயிற்று. மும்மூர்த்திகள் முதலான இசை வாக்கேயக்காரர்கள் பல நூற்றாண்டுகளிற்கு முன்பே கர்நாடக இசையிலக்கணங்களையும் இசை உருப்படிகளையும் தெய்வீக இசைஞான நுண்ணறிவால் உருவாக்கி இவ்வுலக மாந்தரிடம் தந்துள்ளனர். இவர்கள் இயற்றிய கீர்தனைகளே கர்நாடக இசையை இன்றும் உயிர் வாழச்செய்து கொண்டிருக்கின்றன. உலக இசைகளில் மிக நுட்பமானது கர்நாடக இசையே. இவ்விசையானது தென்னிந்தியாவில் தோன்றி வளர்ந்து இன்று உலகமெங்கும் வாழும் அனைத்து மனிதர்களாலும் விரும்பப்படும் ஒரு சிறந்த இசைக்கலையாகப் பரவி வளர்ச்சி பெற்று வருகின்றது.

ஆனாலும் இக்கலையானது 1920களிற்குப் பிறகே ஈழத்தில் பரவலானதாக அறியமுடிகிறது. அதற்கு முன்னர் எம்மவரின் ரசனைக்குரிய கலைகளாக இருந்தவை நாட்டுப்புறக் கலைகளே. எனினும் இந்த நாட்டுப்புறக் கலைகளுள் கர்நாடக இசையின் தாக்கம் மிகுதியாகவே இருந்துள்ளது. அவ்வாறான கலைகள் மக்களின் பொழுது போக்கிற்கு உரியனவாகவும் வீட்டில் நடைபெறும் மங்கள வைபவத்தின் சந்தோஷ நிகழ்வுகளாகவும் மேலும் ஆலயத் திருவிழாக்களை சிறப்பிப்பனவாகவும் இருந்தன.

கலைகளை மூன்று நிலைகளில் நோக்கலாம்.
1- தொன்மைக்காலம் (Primitire art)
2- நாட்டுப்புறக்கலை (Folk art)
3- திருந்தியகலை (Classial art)

தொன்மைக்கலைகளானது நாட்டுப்புறக் கலைகளாகவும் நாட்டுப்புறக்கலைகள் செம்மைப்படுத்தப்பட்ட பின்னர் சாஸ்திரீயக் கலைகளாகவும் வளர்கின்றன.

இசை நாடகமும் ஈழத்தின் கர்நாடக இசை வரலாறு

ஈழத்தில் கர்நாடக இசையானது பரவுவதற்கு முன் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த கலைகளாக சிலம்பாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், கும்மி, பொய்க்கால் குதிரையாட்டம், வேதாள ஆட்டம், பேயாட்டம், வசந்தன், பாவைக்கூத்து, நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு, இசை நாடகம், என்பவற்றைக் கூறலாம். இவைதவிர எம்மவரின் கிராமிய நடனங்களான குறத்தி நடனம், பொம்மை நடனம், கும்மி நடனம், குரவை நடனம், ஏந்தல் நடனம், உருவேறிய நடனம், முகமூடி நடனம் -என்பனவற்றையும் கூறலாம். அத்துடன் நாட்டார் பாடல் வகைகளான தாலாட்டுப்பாடல், கல்யாணப்பாடல், கப்பற்பாடல், குழந்தைப்பாடல், மருத்துவிச்சி வாழ்த்துப் பாடல், ஒப்பாரிப்பாடல், பள்ளுப்பாடல், குறவஞ்சிப்பாடல், கும்மி, கோலாட்டம், கரகம், காவடிப்பாடல்கள் என்பவற்றையும் குறிப்பிடலாம்.

இவற்றைவிட கர்நாடக இசையின் தாக்கம் வெகுவாகக் காணப்படும் கலைகளான கதாப்பிரசங்கம், இசைச் சொற்பொழிவு, புராண படலம் வாசித்தல், வில்லுப்பாட்டு, இசை நாடகம் என்பனவும் தென்மோடி வடமோடிக் கூத்துக்கள் என்பனவும் கிராமியக் கலைகளாகவே மக்களால் பார்க்கப்பட்டன. இவற்றுள் இசை நாடகமானது முற்றுமுழுதாக கர்நாடக இசையால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கலைவடிவமாகும். 1920களிற்கு முன் இந்து ஆலயத் திருவிழாக்களை அலங்கரித்த பயனைப் பாடல்கள், இசை நாடகங்கள் என்பனவும் முக்கியமானவைகளாகும். இசை நாடகமானது கர்நாடக இசையின் அனைத்து நுட்பங்களும் உள்ளடங்கியதாக அமைக்கப்பட்டிருப்பதால் அக்கலையானது மக்கள் மத்தியில் தூய இசை ரசனையை ஏற்படுத்தியது எனலாம். அழகாக வேடமிட்டு இனிதாகப் பாடிச் சிறப்பாக நடித்து முத்தமிழ் முழக்கமிடும் கலையான இசைநாடகம் மக்களைக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை.

இவ்வாறு மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குப் பெற்ற இசை நாடகமே ஈழத்தில் கர்நாடக இசை பரவுவதற்கும் மக்களால் கர்நாடக இசை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கும் காரணமாக அமைந்தது எனலாம். ஆகவே, ஈழத்தின் கர்நாடக இசையின் பிறப்பும் வளர்ச்சியும் இசை நாடகக் கலையுடன் தாய்சேய் உறவை உடையதாகக் காணப்படுகின்றது. ஏனெனில் ஈழத்தின் இசை முன்னோடிகளுள் ஒருவரான எஸ்.என்.சோமசுந்தரம் அவர்களின் தந்தையார் சிறந்ததொரு இசை நாடகக் கலைஞராவார். புத்துவாட்டி இரத்தினம் என அழைக்கப்படும் இவர் வயலின் மிருதங்கம் ஆர்மோனியம் போன்ற இசைக் கருவிகளை இசைக்கக் கூடியவராகவும் சிறந்த பாடகராகவும் விளங்கினார் என அறியமுடிகிறது.

மேலும் தமிழகத்திற்குச் சென்று கர்நாடக இசையில் முறைப்படி பயிற்சி பெறாமல் ஈழத்தில் வாழ்ந்த இசைமுன்னோடிகளின் வரலாறுகளை உற்றுநோக்கினால், அவர்கள் அனைவரும் இசைநாடகக் கலைஞர்களாகவே காணப்படுகின்றனர். எனினும், அவர்கள் கர்நாடக இசை தெரிந்தவர்களாகவே காணப்பட்டனர். இவர்கள் எப்படி எங்கு கர்நாடக இசை பயின்றனர் என்பதை அறிதல் அவசியமானதாகும்.

தென்னிந்தியாவில் இருந்து இசை நாடகத்திற்காக ஈழத்திற்கு வந்த இசை நாடகக்கலைஞர்கள் ஓய்வாக இருக்கும் வேளைகளில், அவர்களிடம் சென்று ஈழத்தின் இசை ஆர்வலர்களும் இசைக் கலைஞர்களும் கர்நாடக இசையையும் அதன் நுட்பங்களையும் தெரிந்து கொண்டனர் என்பது ஒரு கருத்து. இவ்வாறு இசைகற்கும் முறையானது அவ்வப்போது இசை நாடக நிகழ்விற்காக வரும் கலைஞர்களால் இங்கே அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் கர்நாடக இசையை முறைப்படி பயிலவேண்டும் என்ற ஆர்வம் எம்மவர்களிடையே எழலானது.

இசைநாடக வரலாற்றுப் படிமுறை

இனி ஈழத்தில் கர்நாடக இசையைப் பிரசவித்த இசை நாடகத்தின் சுருக்கமான வரலாற்றை நோக்குதல் முக்கியமானது. 1919ம் ஆண்டுக்கு முன்னரே இந்தியாவில் இருந்து இசை நாடகக் குழுவினர் ஈழத்திற்கு அடிக்கடி வந்து இசைநாடகங்களை நிகழ்த்திச் சென்றனர். இவ்வாறு, 1939ம் ஆண்டுவரை இந்தியக் கலைஞர்கள் வரவு தொடர்ந்தது. அதன் பின்னரும் இந்தியக் கலைஞர்களின் வரவு இருந்ததாயினும் ஈழத்தில் இசை நாடகக் கலைஞர்கள் தோன்றியமையாலும் சில அரசியல் நிலமைகளினாலும் இந்தியக் கலைஞர்களின் வரவு தடைப்பட்டுப் போனது. எனினும், இசைநாடக்கலை சிறப்பான வளர்ச்சியை அடைந்தது.

இசை நாடக்கக் கலை எப்படி கர்நாடக இசைக்கு உதவியாக இருக்கமுடியும் என்பதை சில உதாரணங்களுடன் கவனிப்பது சிறந்ததாகும். தென்னிந்தியாவில் இருந்து இசை நாடக நடிகர்களாக எம்.கே.தியாகராஐ பாகவதர், ரி.ஆர்.மகாலிங்கம், கே.பி.சுந்தராம்பாள், கே.பி.கிட்டப்பா போன்ற சிலர் ஈழத்திற்கு வந்து சென்றனர். இவர்கள் சாதாரணமாக இசை நாடக நடிகர்கள் என்ற வரையறைக்குள் அடங்குபவர்கள் அல்லர். கர்நாடக இசையைச் சுத்தமாகக் கற்றுத்தேறிய சிறந்த பாடகர்களுமாவர். எனினும், இவர்கள் தம்மை இசை நாடகத்துறையிலே இன்பமுடன் ஈடுபடுத்தி பெரும் இசைநாடக மேதைகள் என்னும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பெற்றனர். தமிழகத்திலும், ஈழத்திலும் இவர்கள் இசை நாடகங்களை நடித்து இசைநாடகம் எப்படி அமைய வேண்டும் என்று வரைவிலக்கணத்தையும் தந்துள்ளனர்.

இசைநாடகக் கலைஞர்களுக்கு இருக்கவேண்டிய தகமைகள்

இசைநாடக நடிகர்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்பு கர்நாடக சங்கீதம் தெரிந்திருக்கவேண்டும் என்பது. இல்லையேல் கேள்விஞானத்திலாவது சுருதி லயம் பிசகாமல் பாடத்தெரிந்திருக்க வேண்டும். அப்படியானவர்கள் பிரதான பாத்திரங்கள் தவிர்ந்த – சிறு நடிகராகர்களாகச் சேர்ந்துகொள்ளலாம். இசையால் நடித்துக்காட்டப்படும் நாடகம் இசை நாடகம். கர்நாடக சங்கீதம் தெரியாமல் நடிக்கத்தெரிந்த ஒருவர் தனக்கு நடிப்பு வருகின்றது என்பதற்காக இசை நாடகத்துள் பிரவேசிக்கக்கூடாது. ஆனால், நடிப்பு வராத ஒருவர் சிறப்பாக பாடக்கூடியவராயின் அவரை இசை நாடகத்தில் இணைத்துக் கொள்வது பற்றி யோசிக்கலாம். பாத்திரத்திற்கு ஏற்ற தோற்றமும், பாடும் திறனும், உணர்ந்து நடிக்கும் நடிப்பாற்றலும், அழகு தமிழில் பேசும் ஆற்றலும் ஒருங்கே அமைந்த ஒருவரே இசைநாடகக் கலைஞராக முடியும். அத்துடன், இசை நாடகத்தில் ஹார்மோனியம் தவிர்ந்த வேறு எந்த மேலைத்தேச இசைக் கருவிகளையும் பயன்படுத்துவது முறையன்று. ஹார்மோனியத்துடன் மிருதங்கம், தபேலா போன்ற சுருதி சேர்க்கக் கூடிய தாள வாத்தியக் கருவிகளை உபயோகிப்பதே சிறந்தது.

இசை நாடகங்களில் கையாளப்படும் இசை நுட்பங்கள்

இசை நாடகமும் ஈழத்தின் கர்நாடக இசை வரலாறு

கர்நாடக இசையை நன்கு தெரிந்த நடிகர்கள் இசை நாடகங்களை நடித்தமையாலும் கர்நாடக இசை அறவு மிகுந்தவர்கள் இசை நாடகங்களையும், இசை நாடகப் பாடல்களையும் உருவாக்கியமையாலும் இசை நுட்பம் மிகுந்த கலையாக இசை நாடகம் உருப்பெற்றது. ஒரு இசைக் கச்சேரியில் பாடுபவர் பக்கவாத்தியகாரர் ஆகியோருக்கிடையில் ஏற்படும் வித்துவ வெளிப்பாடுகளும் இசை நாடகங்களில் சக கலைஞர்களுக்கிடையேயும் – பக்கவாத்திய கலைஞர்களுக்கிடையேயும் – மேடைகளில் சர்வசாதாரணமாக நடைபெறும்.

இசைநாடக இசை நுட்பங்கள்

 – எல்லாவகையான தாளங்களிலும் பாடல்கள் அமைந்துள்ளன.
(ஆதி, ரூபகம், மிஸ்ர சாப்பு, ஆதி திஸ்ர நடை, சௌக்ககாலம், கண்டநடை)
– நுட்பமான எடுப்புக்கள் நிறைந்த பாடல்கள். (சம எடுப்பு, அனாகத எடுப்பு, அதீத எடுப்பு)
– தெம்மாங்குப் பாணியில் அமைந்த பாடல்கள்.
– ஹிந்துஸ்தானி இசை முறையில் அமைந்த பாடல்கள்.
– ரசங்களுக்கு ஏற்றவாறு நுட்பமான ராகங்கள். (தோடி, பைரவி, மோகனம், நட பைரவி, சிந்து பைரவி, ஹம்சத்வனி, சாமா, அடானா, கானடா, ஹாபி, தேஷ், சங்கராபரணம், காவேரி, புன்னாகவராலி, முகாரி, காம்போதி, செஞ்சுறுட்டி, கல்யாணி, கேதாரகௌளை, பந்துவராளி, கன்னியாசி, ஆரபி, பிலஹரி என்பன சில உதாரணங்கள்)
– கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் மனோதர்ம முறைகள் பின்பற்றப்படுகின்றன. (நிரவல் பாடும் முறை)
– நுட்பமான இசை உருப்படிகளை சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சேர்த்துக்கொள்ளல்.
– லயநுட்பம், நடைபேதம் நிறைந்த பாடல் அமைந்துள்ளன.
– திருப்புகழ் போன்ற சந்தப் பாடல்களும் கையாளப்படுகின்றன (ஐமன் பாடல்கள்)

இவ்வாறான இசை நுட்பங்கள், அனைத்தும் இசை நாடகங்களில் கண்டிப்பாகக் கையாளப்பட வேண்டியனவாகவே காணப்படுகின்றன. இந்த இசை நுட்பங்கள் தெரியாத அல்லது விளங்காத ஒருவரால் இசைநாடக நடிகராக முடியாது.

தென்னிந்தியாவின் பிரபல இசைநாடக மேதைகள் இசை தெரிந்தவர்களாக விளங்கி இசை நாடத்தை மேடையேற்றினர். இரண்டு பிரதான பாத்திரங்களில் நடிக்கும் இருவரும் சிறந்த பாடகராயின் அந்தக் காட்சி மிகவும் சிறப்பாக அமைந்து விடும். இராக லய நுட்பங்களை இருவரும் பகிர்ந்து கொள்வர். பார்ப்போரும் மகிழ்ந்து கொள்வர்.

இவ்வாறு தென்னிந்திய கலைஞர்களின் இசை நாடகங்கள் ஈழத்தில் மேடையேற்றப்பட்டபோது இவ்வாறான இசை இன்பங்களை மக்கள் பார்த்து இன்புற்றனர். கால ஓட்டத்தில் தென்னிந்திய கலைஞர்களுடன் ஈழத்துக் கலைஞர்களும் சேர்ந்து ஒரே மேடையில் நடிக்கும்  வாய்ப்புக்களும் நிலைமைகளும் ஏற்பட்டபோது ஈழத்தின் இசைநாடக கலை வளர ஆரம்பித்தது. ஈழத்தின் இசைநாடக கலைஞர்கள் இசை நாடக நுட்பங்களையும், இசை நுட்பங்களையும் அவர்களிடம் இருந்து அறிந்து சேர்ந்து நடித்துப்பெருமை அடைந்தனர்.

தொடர்ந்து இந்தியக் கலைஞர்களின் வரவானது முழுமையாக தடைப்பட்டபோது ஈழத்தின் இசைநாடக் கலைஞர்கள் ஆங்காகே சபாக்களையும் குழுக்களையும் அமைந்து நாடகங்களை மேடையேற்றினர். இவ்வாறு இசை நாடகங்களில் தென்னிந்திய கலைஞர்களுடனும் தாமாகவும் நடித்த எம்முன்னோர் வரலாற்றில் முக்கியமானவர்கள். ஏனெனில், ஈழத்தில் கர்நாடக இசைக்கு தொண்டாற்றிய பெருமை அவர்களைச் சாரும். இன்று ஈழத்தின் சங்கீத வித்துவான்களாக திகழும் பலரின் வாழ்க்கை வரலாறுகளை புரட்டிப்பார்த்தால் அவர்களுக்கு இசை நாடகத் தொடர்பு நிச்சயமாக இருக்கும்.

ஈழத்தின் இசை நாடக வரலாற்றிலே தென்னிந்திய கலைஞர்களின் வரவு தடைப்பட்டதன் பின்னர். இங்கே பலர் இசை நாடகங்களை மேடையேற்றி இருந்தாலும் முன்னர் குறிப்பிட்டது போன்று இசைநாடகக் கலைஞர்களுக்கு இருக்க வேண்டிய முழுமையான பண்புகளை உடையவராக திகழ்ந்த இசை நாடக கலைஞர்களுள் நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்கள் முதன்மையானவர். நடிகமணி அவர்கள் முறைப்படி கர்நாடக சங்கீதம் படித்த ஒருவர். இசை நுட்பங்கள் விளங்கக்கூடிய ஒருவர். கல்பித, மனோதர்ம இசையை நன்கு அறிந்த ஒருவர். அத்துடன், ஆர்மோனியம், மிருதங்கம், புல்லாங்குழல் போன்ற இசைக் கருவிகளையும் சிறப்பாக வாசிக்கக் கூடிய ஒருவர். இசை நாடகக் கலைஞர்களுக்கு இருக்க வேண்டிய அனைத்து தராதரங்களும் உடைய ஒருவராக இருந்தமையால், இவரது வசந்தகான சபாவின் நாடகங்கள் இசை நாடக வரன்முறைகளைக் காப்பாற்றத் தவறவில்லை. இவரின் சிஷ்யர்கள் இவருடன் நடிக்கும் போது பயபக்தியுடனும், நிதானத்துடனும், ஒழுக்கத்துடனும் சிறந்த இசைநாடக கலைஞர்களாக விளங்கினர். ஆனால், இவரது மறைவிற்குப் பின் ஈழத்தின் இசை நாடக்க கலையானது பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. மூத்த அனுபவம் மிக்க ஒருவர் இல்லாததால் அனைவரும் தம்மைப் பெரியவர்களாக எண்ணி இசை நாடகக் கலையை தவறான வழியில் இட்டுச் சென்றனர்.

இசை நாடகத்தின் இன்றைய நிலை

ஈழத்தின் இசை நாடகத்தின் இன்றைய நிலை என்ன என்னபது பற்றி சிந்திப்பது சாலவும் பொருத்தமாகும்.

  ¨  ஈழத்தில் இசை நாடகம் தந்த கர்நாடக இசை வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால், இசை நாடகம் இறந்து கொண்டிருக்கின்றது.
¨  கேள்வி ஞானத்தில் கூட சுருதியுடனும் லயத்துடனும் பாடமுடியாதவர்கள் பிரபல இசை நாடக்கக் கலைஞர் ஆகும் துர்பர்க்கிய நிலை ஈழத்தின் இசை நாடகக் கலைக்கு ஏற்பட்டுள்ளது.
¨  இசை நாடகக் கலையின் செம்மையை தூய்மையை அதன் கற்பைப் பாதுகாக்க வேண்டிய சில கலைஞர்கள் பணத்திற்கும் செல்வாக்கிற்கும் அடிமையாகி விலைமாதர் போலாகி விட்டனர்.
¨  காப்பாற்ற வேண்டியவர்கள் கைகழுவி விட்டார்கள்.
¨  சில இடங்களில் இசை நாடகம் நவீனமயம் என்ற பெயரால் சீரழிக்கப்பட்டுள்ளது. அதன் தன்மையே மாற்றப்பட்டுள்ளது.
¨  இசை நாடகங்கள், முறையான இசை தெரிந்தவர்களின் மேற்பார்வையின்றி கேள்வி ஞான அண்ணாவிமாரினால் தவறுதலான முறையில் நெறியாள்கைகள் செய்யப்படுகின்றன.

இவ்வாறு அழிவின் பாதையில் சென்றுகொண்டிருக்கும் இசை நாடகக் கலையானது காப்பாற்றப்படவேண்டும். இன்றைய நவீன மயமான காலகட்டத்தில் இக்கலையானது தகமையில்லாதவர்களினால் முறைகேடாக நிகழ்த்தப்படுவதனால் இக்கலையானது வரும் சந்ததியால் வெறுத்து ஒதுக்கப்படப்போகும் நிலைமையும் ஏற்படலாம். அல்லது தரம் குறைந்த கலையாக மதிக்கப்படலாம். கர்நாடக இசையானது அதற்குரிய முறையிலே பேணப்படுவதால் இன்றும் உயர்ந்த நிலையில் உள்ளது. அதுபோல் இசை நாடகத்திற்குரிய முறையிலே இக்கலையானது முன்னெடுக்கப்பட்டால் இக்கலை நிலை பெறும்.

ஆசைப்படும் எல்லோரும் இசை நாடகம் நடிக்கும் நிலையை மாற்றி எதற்கு எவர் தகுதியோ அவரைத் தெரிந்து இக்கலைக்கு உயிர் கொடுக்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். ஆகவே நாம் செய்ய வேண்டியது என்ன? இசை நாடகக் கலைஞர்களையும் இசை நாடக ஆர்வலர்களையும் அழைத்து கர்நாடக இசை தெரிந்தவர்களின் உதவியுடன் தகுந்த பயிற்சி அளித்து அவர்களை புனர் நிர்மானம் செய்ய வேண்டிய வரலாற்றுத் தேவை எமக்குள்ளது. நடிகமணி அவர்களின் வாரிசுகளாக உருவாகி இன்று இசைநாடகத்துறையில் நீண்ட அனுபவம் மிக்கவர்களாக இருக்கின்ற இசைநாடகக் கலைஞர்களான வ.செல்வரட்ணம், ம.தைரியநாதன் ஆகியோருக்கு இக்கலையின் செம்மையாகப் பேணவேண்டிய வரலாற்றுக் கடமை உள்ளது. இல்லையேல் மீண்டும் நடிகமணி அவர்கள் அவதரித்தால் அன்றி இசைநாடகக்கலையை எவராலும் காப்பாற்ற முடியாது.

நன்றி- மூலம்- கூத்தரங்கம் இணையம்

Sharing is caring!

1 review on “இசை நாடகமும் ஈழத்தின் கர்நாடக இசை வரலாறு”

  1. Mathi mathi says:

    ஈழத்து இசை கலைஞர்

Add your review

12345