இணுவில் சச்சிதானந்த சுவாமிகள்

சிவகாமி அம்பாளுக்கு வழிவழிதொண்டு செய்து வந்த சின்னத்தம்பி சட்டம்பியாருக்கு பிறந்த குழந்தையே சச்சிதானந்த சுவாமிகளாவார். சிறுவயதிலே கோயில் திருத்தொண்டுகள் செய்வதிலும் நண்பர்களுடன் சேர்ந்து ஊர்சுற்றுவதிலுமே அக்கறை காட்டினார். இதனை விரும்பாத மாமனார் இவரினைத் தண்டித்தார். இவர் அம்பாளிடம் சென்று முறையிட்டார். அம்பாளின் திருவருளினால் வேதாந்த மடத்தினை சென்றடைந்தார். இதனை விரும்பாத உறவினர்கள் கொழும்பிலே கடை ஒன்றில் வேலை செய்யுமாறு கூட்டிச் சென்றனர். இவர் வேலையினை விரும்பாது மீண்டும் மடத்தினையே வந்தடைந்தார். இவருடைய பதினாறாம் வயதிலே இவருடைய பக்குவத்தினை அறிந்த குரு இரு நிபந்தனைகளை விதித்து உபதேசம் செய்தருளினார். குருவின் உபதேசத்திற்கிணங்க அந் நிபந்தனையை கடைப்பிடித்தே வாழ்ந்தார். குருவே இவருக்கு சச்சிதானந்தம் என்ற ஞானப்பெயரினை சூட்டினார். சுவாமியவர்கள் தென்மராட்சியின் பல பகுதிக்கு சென்று தன்னை அணுகிவரும் அடியவர்களிற்கு நற்போதனைகளையும் நல்லுரைகளையும் வழங்கி நல்வழிப்படுத்துவார்.

1958 ஆம் ஆண்டு கைதடியிலே செல்லம்மா அம்மையாரின் சகோதரியினால் அன்பளிப்பு செய்யப்பட்ட காணியில் சுவாமிகளின் தரிப்பிட வசதிக்காக  தவக்குடில் ஒன்று அமைக்கப்பட்டது.
சுவாமியவர்கள் தனது உடலானது 1960 ஆம் ஆண்டு தை மாதளவிலே பிரிந்து விடும் என்பதனை 03 மாதங்களிற்கு முன்பே சீடர்களிற்கு தெரிவித்திருந்தார். இவருடைய சமாதி காரைக்கால் சுடலையிலே 1960 ஆம் ஆண்டு தைமாத புனர் பூசநட்சத்திரத்திலே வைக்கப்பட்டது. தவக்குடில் இருந்த இடத்தில் ஒரு மண்டபமும் அமைக்கப்பட்டது.
செல்லம்மாவின் விடாமுயற்சியால் 1967 ஆம் ஆண்டு கிணறும் சுற்று மதிலும் (தவக்குடிலுக்கு) மண்டபமும் அமைக்கப்பட்டது.
சச்சிதானந்த குருபீடத்தினை 1983 ஆம் ஆண்டு வழிநடத்திச் சென்றார். 1996 ஆம் ஆண்டு திரு கு. கங்கைவேணியன் பணியை ஏற்று செம்மையுற நடாத்தி வருகின்றார். இக்குரு பீடத்தில் பாலர் பாடசாலை அமைக்கப்பட்டு ஆரம்பக்கல்வியும் புகட்டப்படுகின்றது. திருமதி அன்னைபூரணியே ஆசிரியையாகவும் குருபீட முக்கிய பணியையும் செய்து வருகின்றார். தியான மண்டபம் புதிதாக வடிவமைக்கப்பட்டு 09-02-1998 இல் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.
சச்சிதானந்தரின் பூதவுடல் பிறந்த மண்ணிலே சமாதி வைக்கப்பட்டதன் காரணமாக சுவாமிகள் இன்றும் கைதடிக்கும் இணுவிலுக்கும் தவஒளியைப் பரப்பிக் கொண்டிருப்பது அவ்வூர் மக்களின் தவப்பேறேயாகும்.

நன்றி: தகவல் – மூ.சிவலிங்கம்
மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

1 review on “இணுவில் சச்சிதானந்த சுவாமிகள்”

Add your review

12345