இணுவில் செகராச சேகரப்பிள்ளையார் கோவில்

இணுவில் செகராச சேகரப்பிள்ளையார் கோவில்ஆரியச் சக்கரவர்த்திகள் எனப்படும் தழிழரசர்கள் ஈழத்தில் ஆட்சிபுரிந்த காலத்தில், அவர்களுள் சிங்கை நகரில் (வல்லிபுரத்தில்) இருந்து ஆட்சிபுரிந்த செகராய சேகரன் என்னும் மன்னனால் இற்றைக்கு 700 ஆண்டுகளுக்கு முன்  ஈழத்தில் பல ஊர்களில் விநாயகர் ஆலயங்கள் நிறுவப்பட்டன. அவ்வாறு இணுவில் மேற்குப்பகுதியில் செகராய சேகரினால் நிறுவப்பட்டு வழிபடப்பட்ட கோவில்தான் இணுவில் செகராச சேகரப்பிள்ளையார் கோவில் என்பது வரலாறு.

இவ்வாலயத்தை பருத்தியடைப்புப் பிள்ளையார் கோவில் எனவும் அழைப்பர். இணுவிலில் குளக்கரை என இன்றும் அழைக்கப்படும், கந்தசாமி கோவிலை அண்டிய ஒரு குளமும், அதன் தென்கிழக்குப் பகுதியில் இன்றைய நாலாம் கட்டையடியில் இன்னொரு குளமும் இருந்தன என்றும், இதனால் இந்த இணை “வில்கள்”(குளங்கள்) அமைந்திருந்த காரணத்தினால் இவ்வூர் இணைவில் என அழைக்கப்பட்டு இணுவில் என மரூஉப் பெயர் பெற்றதென்றும் செவிவழிக் கதைகள் கூறுகின்றன.

பரமானந்த வல்லி அம்மன் கோயில் இக்குளங்களில் ஒன்றிலிருந்து தெற்கே அமைந்த வயல்களுக்கு நீர்ப்பாசனம் நடந்ததென்றும், மறுகுளத்திலிருந்து வடக்கே இருந்த பருத்தித் தோட்டங்களுக்கு நீர் பாச்சப்பட்டதென்றும் வாய்மொழி வரலாறுகள் மூலம் அறியப்படுகின்றது. இக்கூற்றை மெய்ப்பிக்கும் புறச்சான்றாக இன்றும் பரமானந்த வல்லி ஆலயம் முன்பாக வீதியில் மதகு ஒன்று(பருத்தித் தோட்டங்களுக்கு நீர்பாச்சிய மதகு) மண்ணுள் புதைந்து காணப்படுகின்றது. இதிலிருந்து அறியப்படுவன அன்று பருத்திச்செய்சை பண்ணப்பட்டிருந்த ஒரு பிரதேசத்தில் தான் இப்பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்தது என்பதும் அதனாலேயே பருத்தியடைப்புப் பிள்ளையார் என இவ்வாலயம் பெயர் பெற்றது. ஒருகாலத்தில் யாழ்ப்பாணத்தில் பருத்திப் பயிர்ச்செய்கை நடந்தமைக்குச் சான்றாக இன்றும் குடாநாட்டு ஊர்கள் பலவற்றில்  பருத்தியடைப்பு என்ற பெயரால் பல குறிச்சிகள் அழைக்கப்படுகின்றன.

இணுவில் செகராசப் பிள்ளையார் பிள்ளைத்தமிழ் நூலின் முன்னுரையில் சைவத்தை தூய நெறியில் வளர்த்துப் பேணிய கிராமங்களில் இணுவில் சிறப்புப் பெறுவதாகும். இங்கு செகராய சேகரப்பிள்ளையார், கரணாகரப்பிள்ளையார் (உரும்பிராய் கிழக்கு எல்லையில்) என்ற பழமைமிக்க இரு பிள்ளையார் கோயில்கள் உள்ளன. இச்செகராயசேகரப்பிள்ளையார் தலத்தில் பல அற்புதங்கள் நிகழ்ந்தன என்று ஆன்றோர் கூறுவர். சிங்கை செகராய சேகரமன்னனின் ஆணைப்படி அக்கோயில் கட்டப்பட்டதென அறியப்படுகின்றது. என்று கலாநிதி பாலசுந்தரம் பிள்ளை குறிப்பிட்டமை நோக்கற்பாலது.

இணுவில் செகராச சேகரப்பிள்ளையார் கோவில்போர்த்துக்கேயர் ஆண்ட காலத்தில் இலங்கையில் சைவக்கோயில்கள் அழிக்கப்பட்ட வரலாறுகளும் அச்சந்தர்ப்பங்களில் அவர்களே  அழிக்கப்பட்டதும் தோற்கப்பட்டதுமான வரலாறுகளும் நாமறிந்தவை. அந்த நிகழ்வுகள் அணுகக்கூட முடியாதபடி அருள் பொழிந்த இவ்வாலயம் சைவத்தழிழ் வளர்க்கும் நிறுவனமாக விளங்கி வந்துள்ளது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சி மறைந்து ஆங்கிலேயர் ஆட்சி நிலவிய காலத்திலே கிறிஸ்தவ மதத்தின் வேகமான பரம்பலையும் ஆங்கிலக்கல்வி செல்வாக்கையும் தடுத்தி நிறுத்தித் தழிழகத்திலும் ஈழத்திலும் புயல்வேகத்தில் பரப்பிய தமிழ்சைவக்காவலன் ஆறுமுக நாவலரின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து தேசமெங்கும் தமிழ்சைவ இலவசக்கல்வி கற்பிக்கும்  திண்ணைப்பள்ளிகள் நடாத்தியவர்களில் நாவலரின் மாணாக்கர் இணுவில் சுப்பிரமணியச்சட்டம்பியார் என்பவர். இவர் செகராய சேகரப்பிள்ளையார் ஆலயப்பராமரிப்புடன் வீட்டிலும் திண்ணைப் பள்ளி நடாத்தினார். இவரின் மகளின் கணவர்  சங்கரப்பிள்ளையும் அவரைத்தொடர்ந்து மகன் சின்னத்துரையும் இப்பொழுது மகன் சி.சுந்தரலிங்கமும் பரிபாலித்துவர ஆலயம் வளர்ந்து வருகின்றது.

அமரர் சங்கரப்பிள்ளையவர்கள் பிடியரிசி தண்டி சாந்துக்கட்டிடமாக இருந்த ஆலயக்கருவறையை பொழிகற்களாளேயே அர்த்த மண்டபம், மகாமண்டபம் என்பவற்றை பொழிகற்களாளேயே மீளாக்கம் செய்தார். மகன் சின்னத்துரை ஊர்மக்களின் உதவியுடன் வசந்தமண்டபம் முதலான மண்டபத்தை அமைத்தார். இப்பொழுது அவர் மகன் சுந்தரலிங்கம் மூலமூர்த்தியை பாலஸ்தாபனம் செய்து மக்களின் உதவியுடன் மண்டபங்களை புனருத்தாரனம் செய்து திருப்பணிகளை நிறைவேற்றியதையடுத்து 11.02.2004 இல் மங்கல கரமான கும்பாபிடேகம் நிகழ்ந்தது.

இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் சித்திராப் பௌர்ணமியன்று தீர்த்தவுற்சவம் நிகழும் மகோற்சவமும், மாதந்தோறுமான விநாயகர் சதுர்த்தி விழாவும் 21 நாட்கள் நிகளும் விநாயகர் சட்டிவிழாவும் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. அத்துடன் மாதாந்த கார்த்திகை திருவிழா, நவராத்திரிவிழா, திருவெம்பாவை போன்றனவும் பக்திபூர்வமாக இடம்பெறுகின்றன

இவ்வாலயத்திற்கு புதிய சித்திரத்தேரும், சப்பறமும், வாகனங்களும், கண்டாமணியும் செய்து வழங்கப்பட்டுள்ளன. இவ்வாலய பரிவார மூர்த்தங்களாக சந்தான கோபாலரும்,   வள்ளிதெய்வயானை சமேத சுப்பிரமணியரும் வைரவரும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். பஞ்சமுக விநாயகரும், இலக்குமியும், நடராஜரும் இங்கு வழிபடப்பெறும் பிற மூர்த்தமாகும்.

இவ்வாலயத்தில் குறிப்பிடவேண்டிய மகிமை எதுவெனில் இங்கு மாதப்பிறப்பு நாட்களில் விநாயகர் அடியார்கள் நடாத்தும் பொங்கல் வழிபாடாகும்.

இவ்வாலயத்தின் திருவூஞ்சற்பாடலைத் தேர்த் திருவிழா உபயகார குடும்பத்தைச்சேர்ந்த பண்டிதர் வித்துவான் சைவப்புலவர் இ.திருநாவுக்கரசு பாடியுள்ளார். நான்(ச.வே.பஞ்சாட்சரம்) பாடிய செகராசப்பிள்ளையார் பிள்ளைத்தமிழ் நூலை இணுவில் கந்தசாமி கோவில் இளந்தொண்டர் சபை வெளியிட்டுச் சேர்த்த நிதியைத் தேர்த்திருப்பணிக்கு வழங்கியது.
இவ்வாலயத்தில் மூன்றுகால நித்தியபூசைகள் நிகழ்ந்து வருகின்றன. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றும் அமைந்த பழம்பெரும் வரலாற்றுப் பெருமை மிக்க இந்த ஆலயம் மூர்த்தி சிறிதாயினும் வேண்டுவார் வேண்டுவன ஈர்ந்தருளும் அருட்கீர்த்தி மிக்கது.

இவ்வாலய மகோற்சவத் தொடர் பிரசங்கங்களை திருப்பணியாளர் இ.பொன்னம்பலம் அவர்களின் ஏற்பாட்டில் பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமையில் திருமதி வசந்தா வைத்திய நாதன், அதிபர் கு.சண்முகநாதன், சிவத்தமிழ் வித்தகர் மகாலிங்கம். கவிஞர் சோ.பத்மநாதன், செஞ்சொற் செல்வன் ஆறுதிருமுகன், அவர் மாணவன் ச.பாலசண்முகன் முதலியோர் இதுவரை நிகழ்த்தியுள்ளனர்.

இத்திருத்தலம் அயலிலுள்ள அடியார்களின் குறிப்பாக இளைஞர்களின் பேராதரவில் மிகப்புனிதமாகப் பேணப்படுவதுடன், மகோற்சவங்களில் கோவில் உள்வீதி, வெளிவீதி பெருக்கல், சுவாமி காவுதல், பண்ணிசை பாடல் போன்ற பல தொண்டுகளும் நிகள்கின்றன. பெருவிழாக் காலங்களில் தேர், தீர்த்த நாட்களில் தண்ணீர்ப் பந்தல்களும் அன்னதானங்களும் தொண்டிளைஞர்களால் நடாத்தப் படுகின்றன. விநாயகப் பெருமானின் அருள் வேண்டி நாடிவரும் அனைவருக்கும் எம்பெருமான் இன்னருள் பாலித்து நற்பேறு வழங்குகின்றார்.

By -‘[googleplusauthor]’

 

நன்றி : பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம்
உசாத்துணை நூல்கள் – சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், பஞ்சவர்ணத்தூது

Sharing is caring!

Add your review

12345