இணுவில் மஞ்சத்தடி அருணகிரி நாதசிவசுப்பிரமணியர் திருக்கோவில்

இத்திருக்கோவில் இணுவில் கிராமத்தின் கிழக்கின் தெற்கெல்லையாகவும் கோண்டாவில் கிராமத்தின் வடமேற்குப் பகுதியில் தெற்கெல்லையின் இறைமையுடையதாகவும் அமைந்துள்ளது.

கி.பி1902 இல் இணுவில் பெரிய கந்தசாமி கோயிலில் நிற்கும் திருமஞ்சத்தின் அடித்தளம் காலம் சென்ற சந்நியாசியாரால் கட்டுவிக்கப்பட்டதால் மஞ்சத்தடி எனும் காரணப்பெயரும் உருவாயிற்று. மஞ்சத்தடியின் சிறப்புக்கு காரணமாக அமைந்தவர்கள் சந்நியாசியாரும் அவரது பரம்பரையுமாகும். சந்நியாசியாரை பெரிய கோயில் மீதான அன்பு கிழக்கே வரவிடாது தடுத்தது. மிகுதி உள்ளக்கிடக்கையை அறிந்தமுருகன் ஒருநாள் அவரது சொர்ப்பனத்தில் தோன்றி “நான் அருணகிரிக்கு உபதேசித்தவன் என்னை நினைத்து எனது வடிவேலை வணங்கு” என்று சொல்லி மறைந்தருளினார்.

சந்நியாசியார் கனவில் கேட்டதற்கிணங்க மறுநாட் காலை தான் வசிக்கும் அரசோலை வளவில் வடிவேலைவைத்து பூசிக்கலானார். வடிவேல் பிரதிஸ்ட்டை செய்த இடத்தில் ஒரு சிறு குடிலும் அமைத்து தானே விளக்கேற்றி, அபிடேகம் செய்து, மலர்மாலை சாத்தி, அமுதுபடைத்து, தூபதீபம் காட்டியும் வழிபாடு ஆற்றினார். அவரின் பின் வேலாயுதரும், வேலாயுதர் மகன் ஆறுமுகம், சந்நியாசியார் சமாதியான பின் அவரின் மகன் கந்தையா போன்றோர் ஆலயத்தை பரிபாலித்து வந்தனர். கந்தையா அவர்களின் காலத்தில் பரிபாலனத்தில் தொய்வு ஏற்பட அடியவரின் உதவியுடன் ஒருசபை அமைக்கப்பட்டது. இச்சபையின் மூலமும் போதிய திருப்தி காணப்படவில்லை. கந்தையா அவர்களைத் தலைவராக கொண்டு பிறிதொரு அறக்காவற்குழு செயற்படத் தொடங்கியது. அடியவர்களின் நிதி சேகரிப்பினால் கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றை கட்டுவித்தனர்.

விவேகானந்தா கிராம முன்னேற்ற உறுப்பினர் சிரமதான மூலம் பல தொண்டுகள் நிறைவேற்றின. சிறிது காலம் சென்ற பின் உள்வீதி புற மதிலும் அமைக்கப்பட்டது. மேலும் சில கால எல்லைக்குப் பிறகு உள்வீதி முழுவதும் மேற் கூரை வேலையும் செய்யப்பட்டது. அடுத்தடுத்து இருசித்திரத்தேர்களும் செய்யப்பட்டது. சென்றவருடம் அடியவர்களின் உதவியால் வசந்த மண்டபத்தையும் இணைந்த மண்டபத்தையும் வடிவமைத்தனர். வாசற் கோபுரத்திற்கு அடித்தளம் அமைத்து கட்டிட மேல் மட்டம் பஞ்சதளத்தின்  அடிப்பகுதி கட்டுவேலை மட்டத்தில் நிறைவு பெற்றுள்ளது.

இவ்வருடம் நவக்கிரக மண்டபமும் பூர்த்தியாகி மூர்த்திகளுக்கான குடமுழுக்கும் நடந்து நிறைவுபெற்றுள்ளன. மூலமூர்த்தியாக வடிவேலும், பரிவார மூர்த்தங்களாக ஆறுமுகப்பெருமானும், நடேசப் பெருமானும் தனித்தனியாக அர்த்த மண்டப அமைப்புக்களிலும் மேலும் விநாயகர், அம்பாள், சந்தான கோபாலர், வைரவர். நவக்கிரக மண்டலம் ஆகியனவும் உள்ளன. வசந்த மண்டபத்தில் ஐம்பொன்னால் ஆக்கப்பட்ட வள்ளிதெய்வயானை சமேதராக முருகப் பெருமானும், விநாயகரும் எழுந்தருளி விக்கிரகங்களாக உள்ளன. வருடாந்தத்திருவிழா  சித்திரை திருவோணத்தினை தீர்த்தமாக கொண்டு 12 தினங்கள் நடைபெறுகின்றன. திருக்கல்யாணத்திருவழா சிறப்பாக இடம்பெறும். நவராத்திரி, கந்தசஸ்ட்டி, திருவெம்பாவை போன்றனவும் சிறப்பாக இடம்பெறும்.

பெரிய சந்நியாசியரின் சீடரான தவில் மேதை விசுவலிங்கம் அவரின் மகன் உருத்திராபதியும் அவரின் மகன் சுந்தர மூர்த்தி அவர்கள் அறக்காவல்குழுவில் அங்கம் வகித்தும் அரிய பணியாற்றிவருகின்றனர்.

நன்றி : வை.க.சிற்றம்பலம்
சீர் இணுவைத்திருவூர்

Sharing is caring!

Add your review

12345