சிவஸ்ரீ ஐ. இரத்தினசாமிக்குருக்கள்

சிவஸ்ரீ ஐ. இரத்தினசாமிக்குருக்கள்

சுதுமலைப் பதியிலே ஐயாத்துரைக்குருக்களுக்கும் நாகரத்தினம்மாளுக்கும் மூத்த மகனாக 03.02.1912 இல் சிவஸ்ரீ ஐ. இரத்தினசாமிக்குருக்கள் பிறந்தார். தமது பெற்றோருடன் அம்மன் ஆலயத்துடனமைந்த தமது பரம்பரைச் சொத்தாகிய சிவன் கோவிலில் பூஜை, திருத்தொண்டில் ஈடுபட்டு வந்தார். சுன்னாகம் வித்துவான் சி.கணேச ஐயா், சுதுமலை பொன்னுச்சாமிக்குருக்கள் ஆகியோரிடம் வேதசிவாகமங்களை முறைப்படி பயின்று வேதசாஸ்திரங்களிலும் ஆலயக்கிரியைகளிலும் விற்பனரானார்.

மானிப்பாய் மருதடி விநாயகருக்கும் பூஜை புரியும் குருத்துவப் பெரும்பேற்றில் திளைத்தும் பசித்து வந்த சிவனடியார்களுக்கும் அலைந்து வந்தடைந்த அபலைகளுக்கும் அருள் கனியும் நெஞ்சோடும் அன்பு கனிந்த முகத்தோடும் ஆதரவளித்து அறுபசி தீா்த்து அனுப்பும் இல்லறச்சுவை நுகா்ந்தும் மங்கலம் மிக்க மனைமாட்சியோடு நன்கலமான நன்மக்கட்பேறும் பெற்றும் பெருவாழ்வு வாழ்ந்தார்.

தமது சொத்தாகிய சுதுமலை விசாலாட்சி சமேத விஸ்வநாதா் ஆலய ஆதினகா்த்தாவாகவும் பிரதம குருவாகவும், மானிப்பாய் மருதடி விநாயகா் ஆலய பிரதம குருவாகவும், நல்லூா் கந்தசாமி கோவில், சுதுமலை புவனேஸ்வரி அம்மன் கோவில் போன்ற ஈழவளநாட்டின் பிரபல தேவஸ்தானங்களில், நவாலி, சண்டிலிப்பாய், இணுவில், தாவடி, உடுவில், ஆனைக்கோட்டை ஆகிய அயல்கிராமங்களில் உள்ள ஆலயங்களிலும் கும்பாபிஷேகம், துவஜாரோகணம் முதலிய பணிகளை முன்னின்று நடாத்தி பெரும் பாராட்டுக்களைப் பெற்றார்.

லோகோபகார சிந்தனையோடு மந்திரம், பார்வை என்பவற்றின் மூலம் சுதுமலைக் கிராமத்தின் சைவப்பெருங்குடி மக்களின் பிணிக்குறைகளை தீா்த்தும் அவா்தம் சமய வாழ்வில் ஒளி காட்டும் கலங்கரை விளக்காகவும் விளங்கினார். இவா் திருகோணமலை வில்லூன்றி கந்தசாமி கோவில் ஆதினகா்த்தாவும், பிரதம குருவுமாகிய காலஞ்சென்ற சிவஸ்ரீ.இ.கு.பூா்ணானந்தேஸ்வரக்குருக்களின் ஆத்ம நட்புடையவராக இருந்து வந்தார்.

29.04.1985 இல் தனது ஜனன நட்சத்திரமாகிய மக நட்சத்திரத்தில் சிவனது திருவடிகளை சென்றடைந்தார்.

By – Shutharsan.S

நன்றி – தகவல் மூலம் – http://www.suthumalai.com இணையம்.

Sharing is caring!

Add your review

12345