ஈழத்துச் சோமு

ஈழத்துச் சோமு

கரணவாய் தெற்கு, வடமராட்சியில் பிறந்து நல்லூரில் வாழ்ந்த நாகேந்திர ஐயர் சோமகாந்தன் என்ற இயற் பெயருடைய ஈழத்துச் சோமு (14.01.1934 – 28.04.2006) அவர்கள் ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேசுவராக் கல்லூரியிலும், உயர் கல்வியை தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியிலும் கற்றுத்தேறினார். தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் இவர் கற்ற காலம் பொற்காலமாக அமைந்தது. அதிபர் ஜெயரட்ணம், புலவர் சிவபாதசுந்தரனார், கவிஞர் கதிரேசபிள்ளை, கலையருவி த. சண்முகசுந்தரம் முதலிய இலக்கிய ஜாம்பவான்களின் அரவணைப்பில் செல்லப்பிள்ளையாக விளங்கியமையாலும், அங்கு அருமையான நூலக வசதி இருந்தமையாலும் இவரின் இலக்கிய ஆர்வம் மேலோங்கி நின்றது.

வைதீக குடும்பத்தில் பிறந்த ஈழத்துச் சோமு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சாதிபேத வலுவுற்ற காலத்தின் கொடுமைகளை, ஒடுக்கப்பட்ட மக்கள் படும் துன்பங்களைச் சகிக்காமல் சோமசுந்தரன், கலாமதி என்ற புனை பெயர்களில் ஆவேசப் பாணியில் கவிதை, சிறுகட்டுரைகளை சுதந்திரன் சிறுவர் பகுதியிலும் ஈழகேசரி மாணவர் பகுதிகளிலும் ஐம்பதுகளுக்கு முன்னர் எழுதி வந்தார். முதுபெரும் பத்திரிகையாளர் எஸ். டி. சிவநாயகம், இவரது பன்முக ஆளுமையைக் காட்டக்கூடிய வகையில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் சுதந்திரனில் களம் அமைத்துக் கொடுத்தார். சோமகாந்தன், கருணையூர்ச்சோமு, புதுமைப் பிரியன், ஈழத்துச் சோமு என்ற புனை பெயர்களில் இவர் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தினார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட ஈழத்துச் சோமு 1960 களில் நூறுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கலைஞர்களை ”சுதந்திரன்” பத்திரிகைஅமூலமாக அறிமுகம் செய்து வைத்தார். ஈழத்துச் சோமு அவர்களின் பதினைந்து சிறுகதைகள் ”ஆகுதி” என்ற பெயரில் சிறுகதைத் தொகுதியாக வெளிவந்தன.

1987 ல் ”விடிவெள்ளி பூத்தது” என்ற நாவல் வெளிவந்தது. இவரது இலக்கியப் பங்களிப்பினைப் பாராட்டி ”இலக்கிய குரிசில்” (1993), தமிழ் மாமணி (1994), தமிழ் ஒளி (1994) ஆகிய பட்டங்கள் இலக்கிய நிறுவனங்களால் வழங்கப்பட்டன. இலங்கை அரசினால் 2008 ம் ஆண்டில் ”கலாபூசணம்” பட்டம் வழங்கப்பட்டது. பல எழுத்தாளர்கள் மாநாடு, இலக்கியக் கூட்டங்கள், கருத்தரங்குகள், இலக்கியப் பெரு விழாக்கள் என்பவற்றில் கலந்து நல்ல ஆக்கபூர்வமான கருத்தக்களை ஈழத்துச் சோமு முன்வைத்துள்ளார். நல்லூரில் ஆறுமுக நாவலருக்கு சிலை வைப்பதில் இவர் செயற்பட்டு வெற்றியும் கண்டார்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

Add your review

12345