ஈழத்து நாடக வரலாறு

ஈழத்து நாடக வரலாறு

ஈழத்து நாடக வரலாறு (ஆனைக்கோட்டை) அழுத்தமான சுவடுகளைப் பதித்திருக்கிறது. அந்தச் சின்னக் கிராமத்தின் வெளிகளில் நடனமும், கூத்தும், இசையும் நர்த்தனமிட்டிருக்கின்றன. மக்கி மண் கலந்து மணக்கும் ஆனைக்கோட்டை மணல் தரையாகவும் பனங்கூடல்களாகவும் படர்ந்து கிடந்த கீரிமலை போன்ற அந்த அழகிய கிராமங்களை  மறக்க முடியவில்லை.

ஆனைக்கோட்டை
அன்னையின் அரவணைப்பில் இசைக் கலைஞர்களும், கூத்துக் கலைஞர்களும் போஷிக்கப்பட்டார்கள். அந்த அழகிய கிராமத்தை நினைக்கும்போது நினைவு அடுக்குகளில்  சின்ன வயதில் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்த கூத்துக்களும், நாடகங்களும், கச்சேரிகளும் எதிரொலிகளை எழுப்புகின்றன.

அந்தக் கலைப் பாரம்பரியக் குடும்பங்களில் புல்லாங்குழல் வித்துவான் ஜி.எஸ். வசந்தகுலசிங்கம், நடிக கலாமணி எஸ் சிலுவைராஜா, கலைஞர் புளுகு சின்னத்துரை, கலைஞர் தம்பித்துரை, கலைஞர் திரவியம், கலைஞர் எஸ். நவம், ரசிகன் எஸ். லூயிஸ், கலைஞர் எஸ்.அகஸ்தியர் போன்ற அந்த ஊரின் நடிப்புக் கலைஞர்கள் என நினைவில் வட்டமிடுகிறார்கள்.

ஜி.எஸ்.வசந்தகுலசிங்கம்:
ஆனையூரின் மக்கி மண்ணும், குறுணிக் கற்களும் என்னைக் கவர்ந்த விளையாட்டுப் பொருள்கள். தென்னையும், மாவும், வாழையும், கமுகும் நிழல் விரித்து, செவ்வரத்தையும் மல்லிகையும் செழித்துக் கோலம் காட்டும் எங்கள் வீட்டிலிருந்து அந்த ஊரின் ஒழுங்கைகளை நோட்டமிடும் எனக்கு, இடது புறமாக திரும்பி நடக்க வரும் ஒழுங்கை முனையில் மல்லிகை மணம் வீசும் ஒரு மூலை வீட்டைக் கண்டதும் எனது சிறு கால்கள் முடங்கி விடும். அந்த கலைக்கோயிலில் இருந்து வேணுகான இசைமேதை ஜி.எஸ். வசந்தகுலசிங்கத்தின் சங்கீத அங்கதங்களும், அந்த மதுரமான வேங்குழலின் ஓசையும் என்னில் தாவியதை உணர்ந்திருக்கிறேன். வித்துவான் வசந்த குலசிங்கத்தின் காதல் மனைவி ‘மதுரம்’ அந்த ஊர்ப்பெண்களோடு நெடுநேரமாக சல்லாபித்து மகிழ்ந்து புன்னகைத்துக்கொண்டேயிருப்பா.

புல்லாங்குழல் வித்துவான் வசந்த குலசிங்கமோ அதிக நேரம் தன் காதல் மனைவியைக் காணாது தவித்துப்போயிடுவார். மல்லிகை படர்ந்த தனது வீட்டின் முற்றத்தில் நின்று மனைவி மதுரத்தை ‘ மதுரம் எங்கே நிற்கின்றாய்? விரைவாக வந்துவிடு மதுரம்’ என்று வேய்ங்குழலால் இசையெழுப்பி அழைக்கும் ஒரு அற்புதமான கலைஞனைக் கண்டிருக்கிறேன். அந்த வேணுகான இசையைக் கேட்டு எட்டு வீடுகள் தள்ளியிருந்தாலும் நாணமும், புன்னகையும் கமழ மதுரம் அன்ரி ஓடி வருவதையும் பார்த்திருக்கிறேன். இப்படியெல்லாம் அந்த வீதிகளில் ஒலித்த கான இசைகள் இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

யாழ்ப்பாண வரலாற்று ஆய்வுகளில் அக்கறை கொண்ட என் தந்தை அகஸ்தியர் சங்கிலி மன்னனைப் பற்றி எனக்குக் கூறியதைக் கேட்டிருக்கிறேன். அந்தச் சங்கிலி மன்னனைக் கண் முன் நிறுத்தி ‘. மதத்தைக் காட்டி ஆதிக்கம் புரிய வந்த அந்நியர்களே! சதிகாரர்களின் சூழ்ச்சியால் என்னை மண்டியிட வைக்க முடியும் என்று கனவு காணாதீர்கள். சங்கிலியன் சரணாகதி அடைய மாட்டான். பேடிகள் போல் மக்களைக் காட்டிக் கொடுக்கும் கேடியாகவும் மாற மாட்டான். நான் இறந்தாலும். எனது மக்கள் உன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி உன்னை விரட்டியே தீருவார்கள். இது உறுதி’ என்று வீராவேசத்தோடு மேடையில் சங்கிலி மன்னனாகிக் கர்ஜித்தவர் எனது பெரிய தந்தை எஸ்.சிலுவைராஜா. இத்தகைய கலைஞர்களுக்கு மத்தியில் வெள்ளை வேட்டியும், கை நீட்டிய வெள்ளைச் சேட்டும், கழுத்தில் ஒரு அழகிய சால்வையும் போட்டுக் கொண்டு ஒரு பொல்லோடு ஒரு பெரியவர் வீர முகத்தோடு வீற்றிருப்பார். இவர்தான் ‘பெரியவர் நவீன நாடகத்தின் தந்தை கலையரசு சொர்ணலிங்கம்’ என்று என் தந்தை அகஸ்தியர் கூறியது இன்றும் என் காதில் எதிரொலிக்கின்றது.

யாழ்ப்பாணக் கூத்து வடிவங்கள் பற்றி அதாவது வடபாங்கு, தென்பாங்கு, மன்னார் கூத்து வடிவங்கள், மட்டக்களப்புக் கூத்து, காத்தவராயன், மலையக வடிவங்கள், கண்டிய நடனங்கள் என்று தேசிய நாடக வடிவின் கூத்தாட்டங்களின் சிறப்புக்களைப் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்கள்.

ஷேக்ஷ்பியர் நாடகங்கள்:
யாழ் சென் யோண்ஸ் கல்லூரியில் கலையரசு சொர்ணலிங்கம் பயின்ற போது நாடக மேடையேற்றங்களுக்கான ஆர்வத்தை பாடசாலைக் காலங்களிலேயே அவர் கொண்டிருக்கிறார். நாடகத்திற்கு அவ்வளவு அங்கீகாரம் கிடைத்திராத ஒரு கால கட்டத்தில் நாடக சங்கம் ஒன்றை நிறுவி தமிழ் நாடகங்களை மேடையேற்றிய முன்னோடி நாடகராக கலையரசு திகழ்ந்தார். ஆங்கில நாடக மேதை ஷேக்ஷ்பியரின் நாடகங்களில் ஈடுபாடு மிகுந்த ‘வெனிஸ் நகரத்து வாணிபன்’ (Merchant of Venice) என்ற நாடகத்தில் வரும் ‘Shyloc’ என்ற யூத கதா பாத்திரத்தை அற்புதமாக நடித்துக் காட்டியிருக்கின்றார். சில காலம் பள்ளி ஆசிரியராகக் கடமையாற்றிய கலையரசு சொர்ணலிங்கம் பின் அத்தொழிலைக் கைவிட்டு காப்புறுதித் தொழிலில் இறங்கினார்.

லோட்டன் கனகரட்ணம்:
கலையரசு சொர்ணலிங்கம் வழமான நாடகப் பின்னணியிலே வளர்க்கப்பட்டவர். யாழ்ப்பாணத்தில் புகைப்படக் கலையின் முன்னோடியான லோட்டன் கனகரட்ணத்தின் புதல்வராகத் திகழ்ந்த சொர்ணலிங்கம் தனது நாடக உந்துதலை தன் தந்தையின் வளர்ப்புச் சூழலிலே பெற்றிருக்கின்றார். புகைப்பட நுட்பத்தில் கைதேர்ந்த லோட்டன் கனகரட்ணத்தின் வீட்டில் கூத்தும் நாடகமும் இடம் பெற்றிருக்கின்றன. கூத்துக் கலைஞர்களையும், நாடகக் காட்சிகளையும் தனது தந்தையார் புகைப்படம் பிடித்திருப்பதை கலையரசு சொர்ணலிங்கம் நினைவு
கூர்ந்திருக்கிறார்.

1950 களில் கரலயரசு சொர்ணலிங்கம், பேராசிரியர் கணபதிப்பிள்ளை ஆகியோர் கூத்தாகப் பாடி நடிப்பதை விடுத்து வசனம் பேசி நடிப்பதின் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். வசனம் பேசி நடிப்பதுதான் நவீன நாடகம் என்று வலியுறித்தியவர்கள் இவர்கள். நவீன நாடகத்தின் தந்தையாக கலையரசு சொர்ணலிங்கம் திகழ்ந்தார்

இவரது நடிக்கும் திறமையின் முக்கிய குணம் என்னவென்றால் வெவ்வேறு விதமான பலவிதமான பாத்திரங்களை நடித்ததேயாம். இதுவுமன்றி தான் எந்த வேடம் பூண்டாலும் தானே மற்றொருவர் உதவியின்றி தக்கவாறு வேடம் பூணுவதில் மிகவும் நிபுணர் என்று பம்பல் சம்பந்த முதலியார் குறிப்பிட்டிருப்பது கலையரசு சொர்ணலிங்கத்தின் நடிப்பின் உச்சத்தைப் புரிய முடிகிறது.

நாடகத் துறையில் அவர் கொண்டிருந்த வீச்சு நவீன நாடகத் துறையை யாழ்ப்பாணக் கிராமங்களில் கலையரசு சொர்ணலிங்கம் அவர்களினால் மேற்கொண்டு செல்ல உதவியது. நீண்ட காலமாக யாழ்ப்பாணத்தில் பாடசாலை மட்டத்தில் மேடையேறிய இலக்கிய நாடகங்களும், சரித்திர நாடகங்களும் கலையரசு சொர்ணலிங்கத்தின் பாணியிலேயே அமைந்திருந்தன. மத்தியதர வர்க்கப் பார்வையாளர்களுக்காக கலையரசு சொர்ணலிங்கம் முன்னெடுத்த நவீன நாடகங்கள் ஈழத்துத் தமிழ் நாடக வளர்ச்சியில் தோற்றுவாயாகத் திகழ்ந்தது. கலையரசு சொர்ணலிங்கம் பம்பல் சம்பந்த முதலியார் நாடகங்களைப் பின்பற்றி நவீன நாடகங்களைத் தயாரித்திருந்தார்.

கூனியின் வாய்ச்சப்பல், சிரிப்பு, பேச்சு அத்தனையும் பல கிழவிகளிடமிருந்து தான் கற்றதாக அவர் கூறியுள்ளார். நடிப்பில் அவர் எவ்வளவு தூரம் கவனமும், முயற்சியும் எடுத்தார் என்பது அதனால் விளங்குகிறது என்று அக்கால கலை ஆர்வலரும், யாழ் வீரசிங்க மண்டபத்தை உருவாக்கியவருமான திரு. பொ. செல்வரத்தினம் கூறியிருப்பது கலையரசு எவ்வளவு தூரம் நடிப்பின் நுட்பங்களை அவதானித்துச் செயற்படுத்தியிருக்கிறார் என்பது புலப்படுகிறது.

புராணக் கதைகளயும், இதிகாசங்களையும், வடமொழி நாடகங்களையும், ஆங்கிலத் தழுவல் நாடகங்களையும் அடிப்படையாகக் கொண்டு கலையரசு சொர்ணலிங்கத்தின் நாடகங்கள் அமைந்தன. நாடகம் என்பது யாழ்ப்பாணத்தில் அங்கீகரிக்கப்படாத ஒரு கலையாக இருந்த காலத்தில் கிராமிய மட்டத்தில் கலையரசு சொர்ணலிங்கம் மேற்கொண்ட நாடக முயற்சிகள் ஈழத்து நாடக அரங்கியலுக்கு வலுவான தளத்தைத் தீர்மானித்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இ;ல்லை. ஈழத்தில் இலக்கிய நாடக அரங்கொன்றினைத் தீர்மானித்ததில்
கலையரசு சொர்ணலிங்கம் அவர்கள் தனியிடம் வகிக்கிறார்.

ஆனைக்கோட்டையில் எமது இல்லத்தில் வாய் சிவக்க பாக்குச் சாப்பிடும் இம் மாபெரும் கலைஞரோடு ஆனையூர் கலைஞர்களும், கலாநிதி பூந்தான் யோசேப்பு, அருங்கலைஞர் இன்ஸ்பெக்டர் நாதன் போன்றோர் சேர்ந்து பாடுவதையும், புகைப்படங்கள் எடுத்ததையும் அவதானித்திருக்கிறேன்.

ஆனைக்கோட்டையில் அடைக்கலமாதா கோயிலுக்கு அருகாமையில்தான் கூத்துக்கள் நடைபெறும். பிடாரி கோயிலுக்குப் பக்கத்தில் பெரிய ஆலமரம். அதனோடு சேர்ந்து பெரிய வெளி. அங்கும் அதிகமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். கலைஞர் புளுகு சின்னத்துரையின் வீட்டிற்கு அருகாமையிலும் ஒரு சோடாத் தொழிற்சாலையை அண்டி பெரிய வெளி இருந்தது. அங்கும் நாடகங்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு.

அப்படியாக நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் வேளைகளில் துண்டுப் பிரசுரங்கள் அடித்து ‘லவுட்ஸ்பிக்கர்’ போட்டுக் கட்டிய காரில் மானிப்பாய், கொக்குவில், நவாலி போன்ற கிராமங்களுக்கு சென்று அறிவிப்பார்கள். சனங்கள் திரள் திரளாகச் சென்று கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்துக் கொள்வார்கள். உண்மையில் மறக்க முடியாத மகிழ்வான நாட்கள் அவை.

கலையரசின் ரசனை:
கூத்துக்கள் நடைபெறும்போதெல்லாம் பெரியவர் கலையரசு சொர்ணலிங்கம் தனது உடற் பலவீனங்களையும் கருத்திற் கொள்ளாது சமூகம் அளிப்பார். கூத்து நடைபெறும்போது மேடைக்கு மிக அண்மையில் வசதியான கதிரையில் இருந்து பார்வையிடுவதைக் கண்டிருக்கிறேன்.

எனது பெரிய தந்தை சிலுவைராஜா கண்டியரசன், சங்கிலியன், வலேந்திரியன் போன்ற அரச பாத்திரங்களைத்தான் ஏற்று நடிப்பார். கூத்துப் பாடல்களுக்கிடையில் சில நறுக்கான வசன அமைப்புக்களை எனது தந்தை எழுதிக் கொடுப்பார். வசனக்கோவைகளை எனது தந்தை கலையரசு சொர்ணலிங்கத்தோடு ஆலோசிப்பதையும், சில வேளைகளில் சீனுக்குப் பக்கத்தில் நின்று வசனங்களை நினைவு படுத்தி சொல்லிக் கொடுப்பதையும் பார்த்திருக்கிறேன்.

இளவாலைக் கன்னியர் மடத்தில் நான் கல்வி பயிலுவதற்காக கீரிமலையில் வசித்த வந்த போது கீரிமலைச் சிவன் கோயில் தேர்த்திருவிழாக்கள், நவராத்திரி விழாக்கள் என்று கோயில் வைபவங்கள் கோலாகலமாக நடைபெறுவதுண்டு. பல்வேறு கிராமங்களிலிருந்தும் பாட்டுக் கோஷ்டி, நாடகக் கோஷ்டி என்று வந்து சிறப்பிப்பார்கள். கீரிமலைக் கிராமத்து கலைஞர்களும் கலைநிகழ்ச்சிகளைச் செய்வார்கள். சங்கிலியன் என்ற நாடகத்தை நாட்டுக்கூத்துப் பாணியில்லாமல் நவீன நாடக முறையில் நடித்திருந்தார்கள். நான் அதில் நடனமும் ஆடியிருந்தேன் என்பதை நினைவு கூருகையில் மனம் மகிழ்ச்சி அடைகிறது.

கீரிமலைச் சிவன் கோயில் விழாக் காலங்களில் கலைஞர் வைரமுத்துவின் காத்தவராயன் கூத்து, இலக்கிய நாடகங்கள், சமய நாடகங்கள் என்று நடிப்பார்கள். இவ்விதமான கலைநிகழ்ச்சிகளை மிகுந்த வாஞ்சையோடு எல்லோரும் சென்று பார்ப்பார்கள். நானும் சென்று பார்த்திருக்கிறேன். எனது அம்மம்மா திரேசம்மா எனக்கு எல்லா விளக்கங்களும் தந்துகொண்டிருப்பா.

வேங்கையின் மைந்தன்:
இப்படியான கலை ஆர்வமும் அரச நாடகங்களின் பரீட்சயமும் ஏற்பட்டதன் விளைவோ என்னவோ கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் நான் பயிற்சி பெறுகின்ற ஆசிரியையாக இருந்தபோது ‘ஜீவமணி’, அகிலனின் ‘வேங்கையின் மைந்தன்’ போன்ற நாடகங்களில் அரசியாகவும், இளவரசியாகவும் நடித்து அப்போது ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபராக இருந்த திருமதி.ஆனந்தக்குமாசுவாமி அவர்களின் பாராட்டையும் பெற்றுக் கொண்டேன்.

1889 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி மானிப்பாயில் பிறந்த பெரியவர் கலையரசு சொர்ணலிங்கத்தை எமது வீட்டில் நேரில் காணும் அருமையான பாக்கியம் பெற்ற நான் இன்றைய தலைமுறையினர் மத்தியில், குறிப்பாகப் புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் மிகவும் பெருமிதம் கொள்கின்றேன். அவர் மறைந்த 25 வது வருடத்தில் அவரது கலைப்பணிகளை நாம் நினைவு கூருவது ‘கலையரசு’ என்ற அந்த கலை உச்சகனுக்கு நாம் கொடுக்கும் மிக உயர்ந்த மரியாதை என்று எண்ணுகிறேன்.

By – Shutharsan.S

நன்றி – ஆக்கம்,தகவல் மூலம் – ஆசிரியர், www.anaicoddai.com இணையம்.

Sharing is caring!

Add your review

12345