உடுப்பிட்டி மகளிர் கல்லூரி

உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
உடுப்பிட்டி மகளிர் கல்லூரி முகப்பு

யாழ் மாவட்டத்தில் வடமராட்சிப் பிரதேசத்தில் உடுப்பிட்டி எனும் வனப்பு மிகுந்த மண்ணில் வரலாற்றுப் பெருமையுடன் தலை நிமிர்ந்துநிற்கும் யா/ உடுப்பிட்டி மகளிர் கல்லூரி தன்னிகரற்ற தனிப்பெரும் கல்லூரியாகும். அமெரிக்க மிசனரிமாரினால் ஆசியாவில் பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது கல்லூரி என்ற வகையிலும் இதன் தோற்றம் தனித்துவமானது.

1866 ஆம் ஆண்டு ஆடி மாதம் 5 ஆந் திகதி வட்டுக்கோட்டையில் நடந்தேறிய அமெரிக்க மிசனரிமாரின் விசேட கூட்டத்தில் உடுப்பிட்டியில் ஒரு விடுதிப் பெண் பாடசாலையை ஸ்தாபிக்க வேண்டும் என்ற தீர்மானத்தின் பிரகாரம் இப் பாடசாலை ஸ்தாபிக்கப்ட்டது.

1868 ஆம் ஆண்டு அமெரிக்கா மிசனரிமாரான வண ஜெ. சி. சிமித் அவர்களும் அவரது பாரியாரும் வைகாசி மாதம் 07 ஆந் திகதி 17 பிள்ளைகளுடன் உடுப்பிட்டி விடுதிப் பெண் பாடசாலையை ஆரம்பித்தனர். செல்வி. தவுண்சென்ட் அம்மையார் பாடசாலைத் தலைவியாகப் பொறுப்பேற்றார். ( 1868 – 1879 )

இவர்களை அடுத்து Mrs. R.C.N. ஸ்நிங்ஸ் அம்மையார் ( 1882 – 1891) Mrs. Brown (1895 – 1905) சேவையாற்றினார்கள். பின் 1908 – 1911 வரை Mrs. Hitchhack, Mrs. Uward, Mrs. Mouston, Mrs. Miller ஆகியோரின் சேவையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மிசனரிமாரின் அங்கத்தவர்கள் உடுப்பிட்டி விடுதிப் பெண் பாடசாலையின் பொறுப்பை ஏற்றுத் திறம்பட பரிபாலித்தனர். இப்பாடசாலை தொடக்கப்பட்டு முதல் ஐம்பது வருட காலத்தில் அமெரிக்கன் மிசனரிமாரின் தளராத அரவணைப்பினால் மாபெரும் கல்வித் தாபனமாக வளர்த்து எடுக்கப்பட்டது.

இவர்களைத் தொடர்ந்து எமது நாட்டைச் சேர்ந்த பெண்மணிகள் சுதேச அதிபர்களாகச் சேவையாற்றினார்கள். 1934 – 1945 வரையான காலப்பகுதியில் முதல் சுதேச அதிபராகப் பொறுப்பேற்ற செல்வி. கிருபைமலர் மதியாபரணம் அவர்கள் தமது சேவையைச் செவ்வனே ஆரம்பித்து வைத்தார்.

இவர்களையடுத்து செல்வி. லீ. வன்னிசிங்கம் அவர்கள் 1946 – 1959 வரையான காலப் பகுதியில் அதிபராகக் கடமையாற்றினார். இவருடைய காலப் பகுதியிலேயே செல்வி. R.J. Mann அவர்கள் உதவி அதிபராகக் கடமையாற்றினார்.

இவர் 1960 – 1974 வரையான காலப்பகுதியில் அதிபர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இவருடைய காலப்பகுதி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். கல்வியும் ஒழுக்கமும் இரு கண்களாகும். சாரணர் இயக்கம், பான்ட் வாத்தியக்குழு, விளையாட்டு என்பவற்றில் மாணவர்களின் செயற்பாடு சிறப்பிடம் பெற்றது. அக் காலத்திலே க.பொ.த (உயர்தர) வகுப்பில் கலைப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

அடுத்து 1975 – 1978 வரையான காலப்பகுதி திருமதி. க. இரத்தினசாமி அவர்கள் அதிபராகக் கடமையாற்றிய காலப்பகுதியாகும். குறுகிய காலப் பகுதியைத் தமதாக்கிக் கொண்ட அதிபராவார். அவருடைய காலப்பகுதியில் க.பொ.த.(உயர்தர) பிரிவில் விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. பற்சிகிச்சை நிலையம் இக் கல்லூரியில் அமைவதற்கு அத்திவாரமிட்டவர்களில் இவருமொருவராவார்.

1978 – 1993 காலப்பகுதியில் ஆளுமைமிக்க ஒரு அதிபராகக் கடமையை ஏற்றவர் திருமதி. பா. இராஜேந்திரசிங்கம் ஆவார். இவருடைய காலப் பகுதியிலே க.பொ.த (உயர்தர) மாணவர் ஒன்றியம் ஒன்றை நிறுவி அவர்களின் தலைமைத்துவம், ஆளுமைத் திறன்களை வளர்ப்பதில் முன்னின்றார். அத்துடன் இவர் காலத்திலேயே (1987) பாடசாலை பல இன்னல்களைச் சுமந்தது. அத்தோடு கல்லூரியின் பழைய மாணவர் சங்கப் போசகராக விளங்கியவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக விளங்கிய அமரர் பேராசிரியர் அ. துரைராசா அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

1993 – 2010 வரையான காலப் பகுதியிலே கல்லூரியின் அதிபராகப் பொறுப்பேற்று ஆளுமைமிகு அதிபராக விளங்கியவர் திருமதி. இ. குட்டித்தம்பி அவர்கள் ஆவார். கிறிஸ்தவ அதிபர்களின் வரிசையில் வயதில் குறைந்த அதிபராகக் காணப்பட்டார்.

2010 இல் திருமதி. இ. குட்டித்தம்பி அவர்கள் பதவி உயர்வு பெற்று வடம ராட்சி கல்வி வலயத்திற்குச் செல்ல பிரதி அதிபராக இருந்த திருமதி. L.N. யோசெப் அவர்கள் அதிபராகக் கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.

பழைய மாணவர் சங்கத்தின் சுவிஸ் கிளையினரால் இக் கல்லூரியின் நுழைவாயில் அமைத்துத் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. திருமதி. L.N. யோசெப் அவர்களின் ஆண்டவன் கிருபையுடன் கூடிய அன்பான சேவை 13.11.2012 உடன் நிறைவு பெற 19.11.2012 திருமதி. கௌரி சேதுராஜா (SLPS II), B.A(Hons), M.Ed அவர்கள் கல்லூரியின் அதிபர் பணியினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் கல்வி அபிவிருத்திக்காக ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றுடன் கலந்துரையாடி கல்லூரியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறையுடன் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவருடைய காலத்தில் சாரணீயம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. 16.06.2014 அன்று முதல் திருமதி. நவமணி சந்திரசேகரம் (SLPS 1) அவர்கள் அதிபராக பாடசாலையைப் பொறுப்பேற்றுள்ளார்.

பாடசாலைக் கீதம்

இராகம் – சிந்து பைரவி
தாளம் – ஆதி
இயற்றியவர் – பொலிகண்டி நவசிவாயகம்பிள்ளை
இயற்றிய ஆண்டு –

பல்லவி

எங்களது கல்லூரி வாழ்க, உடுப்பிட்டி
பெண்களது கல்லூரி வாழ்க, வாழ்க
எங்களது கல்லூரி வாழ்க

சரணம்

சீலம் செழிக்கும் உயர் தெய்வ சிந்தனையோடு
ஞாலம் புகழ் கற்பு நாற்குண நலங்களும்
காலம் கடந்து வளர் கலைகளும் பயிலவே
கருணையே அவதாரமாய் வந்த கடவுளே
எங்களது கல்லூரி வாழ்க

நல்லார் இணக்கமொடு நற்போத ஞானமும்
சொல்லிலே வாய்மையும் தூய்மை பொலி சாந்தமும்
எல்லா அறங்களிலும் ஏற்றமும் வளரவே
இறைவனின் திருநாமம் இதயத்தில் மிளிரவே
எங்களது கல்லூரி வாழ்க

ஆனந்த மயமான அன்பு நிறை சூழலில்
அகில குலசிறு மணிகள் அனைவோரும் இசைவுகொள
எளிமையுணர் இளமை செறிகலைகள் அழகுவிரி
ஒளியெங்கணும் காண ஒளியையே ஈகின்ற
எங்களது கல்லூரி வாழ்க

உடுப்பிட்டி மகளிர் கல்லூரி இலச்சினை
உடுப்பிட்டி மகளிர் கல்லூரி இலச்சினை

மேலதிக தகவல்களுக்கு – http://www.udupiddygc.sch.lk/web/index.php/home இணையம்

Sharing is caring!

Add your review

12345