என்.கே.பத்மநாதன்

நாதஸ்வரக் கலையில் உன்னத இடம் பிடித்த வித்துவான்களில் ஒருவராகத் திகழ்ந்தார். நா.க.பத்மநாதன் என்பது எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். இவருடைய தந்தையார் கந்தசாமியும் ஒரு நாதஸ்வரக் கலைஞரே. இவர் கும்பழாவளை ஆலயத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஒரு கலைஞர். மகன் பத்மநாதனும் இளம் வயது தொடக்கம் கும்பழாவளைப் பிள்ளையாருக்கு இசைக்கலைத் தொண்டு பேணியவரே. இவருடைய குடும்பமே கும்பழாவளைப் பிள்ளையார் ஆலய சேவையில் மிக்க ஈடுபாடு உடையதாயிருந்தது. பத்மநாதனின் மூத்த சகோதரர் பாரசுப்பிரமணியம் என்பவர் ஆங்கிலங்கற்று அரசாங்க உத்தியோகம் வகித்தவராயினும் பதவியிலிருந்து ஒய்வு பெற்றபின் கும்பழாவளைப் பிள்ளையார் ஆலயலிகிதராகப் பொறுப்பேற்றுத் திறமையுறக் கடமையாற்றியவரென அக்கால ஆலய தர்மகர்த்தாக்கள் சபை கூறுகிறது.
பத்மநாதன் இளவயதிலேயே இசைக்கலையில் ஈடுபாடுள்ளவராக இருந்தார். தமது தந்தையாரையே முதற் குருவாகக் கொண்டு சிட்சையை ஆரம்பித்தார். அவரிடம் பெற்ற பயிற்சியோடு நில்லாது மேலும் பயில்வதற்காக யாழ்ப்பாணம் பி.திருநாவுக்கரசு பிள்ளையைக் குருவாகக் கொண்டு நாதஸ்வர இசைப்பயிற்சி பெற்றார். இவர் மேலும் இசைப்பயிற்சி பெற இவருக்கு உதவியாக இருந்தவர் இவரது மாமனாராகிய கணேசரத்தினம் என்பவரே. கணேசரத்தினம் வெளியூர்களிலிருந்து அழைத்து வந்து தம்முடன் தங்க வைத்திருந்த நாதஸ்வர மேதாவிகளின் வழிகாட்டல் இவருக்குக் கிடைத்ததே இவர் அத்துறையில் மேலும் மேலும் முன்னேற வாய்ப்பளித்தது . அதுமட்டுமல்லாமல் அவ்வித்துவான்களுடன் இணைந்து வாசிக்க வாய்ப்புக் கிடைத்ததும் மேலும் அவர் முன்னேற வழிவகுத்ததென்பது பேருண்மையாகும்.
பத்மநாதன் அவர்களுக்கு கேள்விஞானம் கடினபயிற்சியும் விடாமுயற்சியும் இவர் தமக்கென ஒருவழியை உருவாக்க வழிசமைத்தன. இவர் தாமாகவே ஒரு இளம் இசைவல்லார் குழுவை உருவாக்க எண்ணி பாலகிருஷ்ணன், தட்சணமூர்த்தி, குமரகுரு முதலியவர்களையுந் தம்முடன் இணைத்து ஒரு குழுவை அமைப்பதில் வெற்றி கண்டார். நாளுக்கு நாள் இவர் நாதஸ்வரக்கலையில் முன்னேற்றங்காண இவரைத் தேடிப்பல பட்டங்கள் தாமேயணைந்தன. நாதஸ்வரக் கலாநிதி, இன்னிசை வேந்தன், கலாசூரியர் முதலாய பட்டங்கள் இவரை நாடி வந்து பெருமை பெற்றன. நல்லூர் கந்தன் ஆலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் நாதஸ்வரம் வாசிக்கும் வாய்ப்பு தொடர்ந்தும் பல ஆண்டுகளாக இவருக்குக் கிடைத்து வந்தது இவரின் மனிதாபிமானச் செயல்களுக்கும் நாதஸ்வரக்கலை வன்மைக்குங் கிடைத்த பாராட்டு என்றே கூறலாம். 1979ல் இவர் இங்கிலாந்தில் வாழுந் தமிழர்களால் அழைக்கப்பட்டு அங்கு இசை பரப்பக்கிடைத்த வாய்ப்பினைத் தொடர்ந்து பல நாட்டுத் தமிழர்களிடமிருந்தும் இவருக்கு அழைப்புக்கள் கிடைத்தன. அங்கெல்லாம் இவர் சென்று அந்த நாட்டு மக்களின் பாராட்டினையும் பெற்றார்.
தம்மூரில் நாதஸ்வரக் கலையைப் பரப்பத் தமக்கொரு நிலையான வாரிசு வேண்டுமென்பதால் தமது புதல்வர்களில் ஒருவரான முரளி என்பவரை அக்கலையில் முன்னேற்றி வைக்க விரும்பினார். அதனால் அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். அங்கு கலைவன்மை பெற்று முரளி நாடு திரும்பினார். நாடு திரும்பிய முரளி இந்தியாவில் இருந்து வந்த அமைதி காக்கும் படையினரில் ஒருவனது குறிவைக்கப்படாத கண்மூடித்தனமான தாக்குதலாற் கொல்லப்பட்டார். இது கலைஞர் பத்மநாதனது வாழ்வில் ஆறாத புண்ணாக அமைந்து விட்டது.
அந்த அவலம் சிறிது ஆறிமேலும் தம் கலைப்பணியைத் தொடர்ந்து வந்தார். இங்கிலாந்திலிருந்து இவருக்கு மேலுமொரு அழைப்பு வந்தது. அழைப்பை அனுப்பியவர்கள் அவரது இசை விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தனர். கலைஞர் பத்மநாதனும் செல்வதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். மனிதனின் பிரேரணைகள் எல்லாம் இறைவனால் அனுமதிக்கப்படுவதில்லை என்பதை மெய்யாக்கிக் காட்டியது போல அங்கு செல்வதற்கு முன்னே அவர் மரணத்தைத் தழுவிக் கொண்டார். அவரிடத்தை நிரப்ப அளவெட்டிக் கிராமத்தால் இப்போதைக்கு முடியாதெனவே எண்ணத் தோன்றுகிறது. அவர் புகழ் நீடுழி வாழ்க.

நன்றி – அளவெட்டி இணையம்

 

Sharing is caring!

Add your review

12345