எழுத்தாளர் சு. இராசநாயகன்

சு. இராசநாயகன்

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் உள்ள திருநெல்வேலியை வாழ்விடமாகக் கொண்ட அமரர் எழுத்தாளர் சு. இராசநாயகன் ஈழத்து சிறுகதைக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் ஒருவர். எழுத்தாளர் சம்பந்தனைக் குருவாகக் கொண்டு எழுத்துலகை நேசித்தவர். நாவல்கள், கட்டுரைகள் எழுதுவதிலும் ஆற்றல் மிக்கவராக விளங்கியவர். நாற்பதுபளின் நடுப்பகுதியில் ஈழகேசரி பத்திரிகை மூலம் படைப்புத் துறைக்குள் நுழைந்த சு. இராசநாயகன்  அவர்கள் ”அந்தக்காலம்”, ”முதலிரவு”, ”இதயத்துடிப்பு”, ”வேதனைச்சுடர்” ஆகிய சிறுகதைகளை அப்பத்திரிகை வாயிலாக வெளிக்கொணர்ந்தவர். இவர் எழுதத் தொடங்கிய காலத்தில் ஈழகேசரி, மறுமலர்ச்சி பத்திரிகைகள் ஈழத்தில் பிரபல்யம் பெற்று விளங்கின. மறுமலர்ச்சியில் ”அவள்”, ”உலகக்கண்கள்” ஆகிய சிறுகதைகளை இவர் எழுதியிருந்தார்.

கலைச்செல்வி” என்னும் ”சிற்பி” சரவணபவனை ஆசிரியராகக் கொண்ட சஞ்சிகையில் ”பொத்தல்”, ”நாகதோசம்” என்னும் இரு சிறந்த சிறுகதைகளையும் இவர் எழுதியுள்ளார். சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்த முற்போக்குச் சிந்தனை மிக்க எழுத்தாளராக இம்மண்ணில் இலக்கியம் படைத்த சு. இராசநாயகன் தெரிந்த சொற்களைப் பயன்படுத்தி நனவோடை உத்தியில் சிறுகதைகளை எழுதியவர். அறுபதுகளில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் வெளிவந்த ஈழநாடு பத்திரிகை நிறுவனம் நடாத்திய நாவல் போட்டியில் முதற்பரிசினை இவரது ”பிரியாணி” எனும் நாவல் பெற்றது. இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ”சொந்தமண்” என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது. இவ்வெழுத்தாளர் சிறுகதையைக் கூறுகின்ற தன்மை மற்றைய எழுத்தாளர்களை விட சற்றுத் தனித்துவமானது. வாசகர்களின்எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் வுறுபட்ட நோக்கில் இவரது சிறுகதைகள் அமைந்திருந்தன.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடு

Sharing is caring!

Add your review

12345