எழுத்தாளர் சிவராசா

எழுத்தாளர் சிவராசா

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நீராவியடியைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டு வாழ்விடமாகவும் கொண்டு வாழ்ந்த எழுத்தாளர் சிவராசா (சேனாதிராசா சிவராசா – 28.05.1935) இன்றில்லை. ஆனாலும் அவர்தன் எழுத்துக்களால் இன்றும் இம்மண்ணில் வாழ்கிறார். இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் கற்றுத் தேறி சென்னை பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பை முடித்து விஞ்ஞானப் பட்டதாரியானதுடன் பட்டப்பின் படிப்பான கல்வி டிப்ளோமாவை பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் பெற்று ஆசிரிய சேவையில் இணைந்து தான் கல்வி கற்ற யாழ் இந்துக் கல்லூரியின் பிரதி அதிபராகச் சேவையிலிருந்து இளைப்பாறியவர்.

ஐம்பதுகளின் பிற்பகுதியில் இருந்தே சிறுகதை, கட்டுரை, கவிதைகளை ஈழத்தின் பல்வேறு சஞ்சிகைகளிலும், பத்திரிகையிலும் எழுதி வந்தவர். நாற்பதிற்கும் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ள  எழுத்தாளர் சிவராசா பல சிறுகதைப் போட்டிகளிலும் பங்குபற்றி பரிசில்களை வென்றுள்ளார். யாழ் இலக்கிய வட்டத்தினதும், இலங்கை இலக்கியப் பேரவையினதும் செயலாளராக இருந்து செயற்பட்ட எழுத்தாளர் சிவராசா கல்வி, சமூக செயற்பாடுகளிலும் முன்னின்றுழைத்தவர். இவரது புனை பெயர்கள் சிவகவி, முக்கண்ணன், ஊடாடி, வண்ணைவராஜன் என்பனவாகும். இவரது மனைவி விமலநாயகி, இவரின் இலக்கிய செயற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்து ஊக்கம் அளித்தவர். தான் வாழ்ந்த சமூகத்தின் வாழ்க்கை முறைமையையும், ஆசிரிய வர்க்கத்தின் பின்புலத்தில் மறைந்து கிடக்கும் சிக்கல்களையும் தன் பேனா முனையின் மூலம் இவர் புனைகதை இலக்கியங்களாகத் தந்துள்ளார். இறுதி ஆசை, நீர்க்குமிழி, போட்டி, காதலன், செய்த காரியம், நெறி என்பன இவரின் சிறுகதைகளில் கனதியானவை. பதினாறு சிறுகதைகளை உள்ளடக்கி இவர் ”சிவாவின் சிறுகதைகள்” என்ற தொகுப்பினை நூலாக வெளியிட்டுள்ளார். இந்நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. யாழ் பல்கலைக் கழகத்தில் முதுகலை மாணவனாக இருந்த போது 1980 களின் முற்பகுதியில் கல்வித் துறையின் சஞ்சிகையான ”கலைஞானம்” ஆசிரியராகவும் எழுத்தாளர் சிவராசா இருந்துள்ளார்.
By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

Add your review

12345