எழுத்தாளர் துவாரகன் – பாகம் 2

தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ‘அம்ருதா’ ஏப்ரல் 2012 இதழில் வெளிவந்த நேர்காணல்
நேர்காணல் – தீபச்செல்வன்

எழுத்தாளர் துவாரகன் - பாகம் 2

ஈழத்தின் போர்க்காலக் கவிஞர்களில் ஒருவரான துவாரகன் வடக்கில் யாழ்ப்பாணம் தொண்டைமானாற்றைச் சேர்ந்தவர். ஈழத்தில் ஏற்பட்ட போர் வன்முறை ஆக்கிரமிப்பு அச்சுறுத்தல்கள் போன்றவற்றின் தாக்கங்களால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவரது கவிதைகள் இயல்பு பற்றிய கனவை அவாவிக் கொண்டிருப்பவை. நளினமும் நகைச்சுவையும் மிஞ்சிய மொழியும் புதிய வகையிலான சொல்லாடல் முறையும் என்று இவரது கவிதைகள் ஈழ போர்க்கால கவிதைகளில் கவனம் பெறுகின்றன. யாழ்ப்பாணத்தின் இருள் படிந்த காலத்தை அச்சம் மரணம் என்பன ஆளுகை செய்த நாட்களை இவரது கவிதைகள் பாடியிருப்பதுவே தனித்த அடையாளமாக தெரிகிறது. ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ என்ற கவிதைத் தொகுப்பும் ‘அலைவும் உலைவும்’ என்ற கட்டுரைத் தொகுப்பும் இதுவரை வெளியாகியுள்ளன. யாழ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்த இவர் தற்பொழுது வன்னியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். இவரை அம்ருதா இதழுக்காகச் சந்தித்து இந்த நேர்காணலைச் செய்திருந்தார்கள்.

 

எழுத்தாளர் துவாரகன் - பாகம் 2

தீபச்செல்வன் :

உங்களுடைய கவிதைகளில் தனித்த கவனத்தைப் பெறுபவை யாழ்ப்பாணத்தின் இருள் படிந்த, அச்சமான மரணங்கள் நிறைந்த காலம் பற்றிய கவிதைகள்தான் என நினைக்கிறேன். அந்த நாட்களின் வாழ்வை உங்கள் கவிதைகளில் முழுமையாகப் பதிவு செய்திருக்கிறீர்களா? அந்த நாட்களில் உங்களுடன் இந்தப் பணியைச் செய்தவர்களைக் குறிப்பிடுங்கள்?

துவாரகன் :
யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கு கிழக்கின் ஏனைய பிரதேசம் மற்றும் எமது மக்கள் செறிந்து வாழும் தென்னிலங்கையுடன் எந்தத் தொடர்புகளும் இல்லாமல் யாழ்ப்பாணம் முழுமையாக மூடுகைக்கு உட்பட்டிருந்த காலங்களில் பல கவிதைகளை எழுதியிருந்தேன். ஆனாலும் சிலவற்றைத்தான் பிரசுர வடிவில் கொண்டுவர முடிந்தது. கவிதைகளை எழுதினாலும் பிரசுரச்சூழல் சாத்தியமின்மை மற்றும் எல்லோருக்குமே உயிர் அச்சுறுத்தல் இருந்த காலம் அது. தினம் தினம் ஆயுதங்கள் மக்களை வேட்டையாடி அலைந்த காலம். அதனால் எழுதவேண்டிய இன்னும் பலவற்றை எழுத முடியவில்லை. ஓரளவு பிரசுரச் சாத்தியத்தை ஏற்படுத்திய கலைமுகம், தாயகம், ஆகிய யாழ்குடாநாட்டு சஞ்சிகைகளிலும் இணைய இதழ்களிலும் தொடர்ந்து எழுத முடிந்தது.

பயமும் அச்சமும் இயலாமையும் நிறைந்த காலம் அது. நண்பர்களுடன் கதைக்கும்போது எழுதிய பல கவிதைகளைப் பற்றி பிரதியில்லாமலே கவிதையாகச் சொல்வதுண்டு. கவிதைகளை எழுதிய அந்த வேகம் தணிவதற்கு முன்னரே நானே கிழித்தும் எறிந்திருக்கிறேன். பிரசுரமான பல கவிதைகளால் வீட்டாரிடமே ஏச்சு வாங்கியும் இருக்கிறேன். கலைமுகத்தில் வெளிவந்த கவிதைகள் அந்தக் காலகட்டத்தின் உக்கிரத்தை வெளிக்கொண்டு வருவதாக நண்பர்கள் குறிப்பிடுவார்கள். எனது “கோழி இறகும் காகங்களும், பல் நா சுவையறியாது, புணர்ச்சி, மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள், எல்லாமே இயல்பாயுள்ளன, மீளவும் மரங்களில் தொங்கி விளையாடலாம், குப்பைமேட்டிலிருந்து இலையான் விரட்டும் சொறி நாய் பற்றிய சித்திரம்” போன்ற பல கவிதைகளில் அந்தக் காலத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.

எழுத்தாளர் துவாரகன் - பாகம் 2

இன்னும் செய்திருக்க வேண்டும். ஆனால் மரணம் முன்னால் வந்து எல்லோரையும் காரணமில்லாமலே அச்சுறுத்திக் கொண்டிருந்ததால் ஓரளவுதான் எழுத முடிந்திருக்கிறது.
அப்போதைய காலகட்டத்தை கவிதை வடிவமாகப் பதிவு செய்தவை மிகக் குறைவு என்றே நினைக்கிறேன். பதிவு செய்தவர்களுள் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் ஹரிகரசர்மா ‘யாழ்ப்பாண நாட்குறிப்பு’ என்ற தலைப்பில் முரண்வெளி வலைப்பதிவில் தொடராக அக்கால இருண்ட வாழ்வை எழுதியிருந்தார். இராகவன் சில புனைவுகளில் அவற்றை வெளிக் கொண்டு வந்துள்ளார். தவிரவும் சித்தாந்தன், தீபச்செல்வன், ந. சத்தியபாலன், அஜந்தகுமார் மற்றும் வேறு பல கவிஞர்களும் எழுதியிருந்தார்கள். பிரசுரவாய்ப்பு மற்றும் தணிக்கை நிலையில் பத்திரிகையாளர்கள் அதிக கவனம் செலுத்தியதால் பிரசுரமான பல படைப்புக்களும் உயிர் வேறு உடல் வேறு போலத்தான் வெளிவந்தன.

தீபச்செல்வன் :
ஈழத்துக் கவிதைகளின் தனியான அடையாளம் என்பது போரும் வாழ்வும், அதன் தவிப்பு நிலைகளும் எதிர் வினைகளும், விமர்சனங்களும் என்று விரிகின்றன. ஈழத்துக் கவிதைகள் தட்டையானவை என்று குறிப்பிடும் ஜெயமோகன் போன்றவர்களது கருத்தை போர்ச்சூழல் அழுத்தங்களில் வாழ்ந்து வரும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

துவாரகன் :
ஈழத்துக் கவிதைகளை அப்படி தட்டையானவை என்று கூறி சாதாரணமாக ஒதுக்கி விட முடியாது. 80 களில் இருந்து ஈழக்கவிதைகள் போருக்குள் இணைந்த வாழ்வை துயரத்துடன் வெளிப்படுத்துகின்றன. அதுவே எங்கள் மக்களின் தலைவிதியாகிப் போனதால் ஈழக்கவிஞர்களிடம் கவிதைகள் அவர்களின் உண்மையான வாழ்வனுபவத்தினூடாகவே வருகின்றன.

80 களில் இனவுணர்வுச் சூழலில் அகப்பட்டு அந்த அனுபவங்களுடன் கவிதை படைக்கின்ற புலம்பெயர்ந்து சென்ற படைப்பாளிகள் தவிர அந்த அனுபவம் இல்லாமல் கேள்வி ஞானத்துடன் கவிதை செய்பவர்களின் படைப்புக்கள் தட்டையானவையாக இருக்கலாம். உண்மையான படைப்பென்பது எப்போதும் காலம் கடந்தும் வாழக்கூடியதே. சேரன், செழியன், ஜெயபாலன், இளவாலை விஜயேந்திரன், சோலைக்கிளி, பா. அகிலன், எஸ்போஸ், கருணாகரன் போன்றவர்களின் கவிதைகள் ஒரு கட்டத்தில் இந்த வாழ்க்கையை மிக நுண்மையாகச் சொன்னவைதான். இன்று அவர்களின் கவிதைகளின் இயங்குதளம் வேறுபட்டிருந்தாலும் அந்தக் காலப்பதிவுகள் தட்டிக் கழிக்க முடியாதவைதானே.

தட்டையான படைப்புக்கள் எங்கும்தான் இருக்கின்றன. ஏன் தமிழகத்தில் இல்லையா? புகலிடத்தில் இல்லையா? ஆனால், நின்று நிலைக்கும் படைப்புக்களை நாம்தான் சரியாக இனங்காணவேண்டும். வெகுஜனச் சூழலிலும் பிரசுர வாய்ப்பு உள்ளதென்பதால் வருகின்ற எல்லாவற்றையும் கணக்கில் எடுத்து அப்படிக் கூறமுடியாது.
எங்களுக்கு போருக்குள் வாழ்வது ஒரு வாழ்வாகிப் போனது. அந்த வாழ்வை ஒரு கவிதை வெளிப்படையாகச் சொன்னாலும்கூட அதில் இரத்தமும் சதையுமான எங்கள் வாழ்வுள்ளது. உணர்வுள்ளது. அவை எங்கள் மக்களின் இரத்த சாட்சியங்களாக வருகின்றன. சேரனின் ‘எல்லாவற்றையும் மறந்து விடலாம்’ இன்றும் ஒரு சாட்சியாக இல்லையா? பஹீமா ஜஹான், அனார், அலறி, சித்தாந்தன், தீபச்செல்வன் என்று அடுத்த தலைமுறைகள் நன்றாகத்தானே எழுதுகிறார்கள். இந்நிலையில் ஈழக்கவிதைகள் தட்டையானவை என்று கூறுபவர்களின் கூற்றை எவ்வாறு ஏற்கமுடியும்.

எழுத்தாளர் துவாரகன் - பாகம் 2தீபச்செல்வன் :

ஈழத்தில் சமகாலத்தில் கவிதைகள் எழுதி வருபவர் என்ற அடிப்படையில் கேட்கிறேன். தற்காலத்துக் கவிதைகளின் எழுச்சிகள், நிலைமைகள், போக்குகள் எவ்வாறிருக்கின்றன? ஈழத்து வாழ்வைப் பதிவு செய்வதில் அவை முழுமை பெறுகின்றனவா?

துவாரகன் :
தற்கால வாழ்வை பலர் எழுதி வருகிறார்கள். ஆனால் எழுதும் வேகம் போதாது என்று நினைக்கிறேன். காலம் நேரம் புரியாமல் இன்றும் சீசன் கவிதை எழுதுபவர்களைத் தவிர்த்துப் பார்த்தால் பலர் காத்திரமாகச் செயற்படுகிறார்கள். தீபச்செல்வனின் கவிதைகள் கடந்த ஐந்தாறு வருட நெருக்கடிக் காலத்திலிருந்த மக்களின் துயர்கள் குறித்துப் பேசுவது அதிகம்தான்.

தற்கால வாழ்வு பற்றி எழுதுபவர்களுள் யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் பா. அகிலன், ந. சத்தியபாலன், தா. ஜெயசீலன் என்று ஏற்கனவே அறியப்பட்ட கவிஞர்களும்; சித்தாந்தன், யாத்திரிகன், தானா விஷ்ணு, அஐந்தகுமார், தேஜஸ்வினி, மருதம் கேதீஸ், பெரிய ஐங்கரன், மயூரரூபன், தபின், வேல் நந்தன், நெடுந்தீவு முகிலன், கு.றஜீபன்,இன்னும் பலர் தொடர்ந்து எழுதுகிறார்கள். ஆர்வம் காட்டுகிறார்கள்.

சமகாலக் கவிதைகளில் எழுச்சிகள் என்று கூறமுடியாது. மக்களின் வீழ்ந்த வாழ்வு பற்றி மிக அமைதியாகவே பலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இதனை நாங்கள் கூட்டம் போட்டு சுவரொட்டி ஒட்டிக் கொண்டாட முடியாது. ஏனென்றால் இன்னமும் பிரசுரச் சூழல் அச்சம் தரும் நிலையில்தான் உள்ளது. அதனால்தான் எழுத வேண்டிய பலர் மெளனம் சாதித்து வருகிறார்கள்.

தீபச்செல்வன் :
தமிழகத்தில் உள்ள பல நண்பர்கள் என்னிடம் ஈழத்து இதழியற் சூழலைப் பற்றிக் கேட்பார்கள். ஒரு நல்ல இதழைக் கொண்டு வருவதில் தடைகள், அச்சுறுத்தல்கள் என்று பாரிய போராட்டங்கள் காணப்படுகின்றன. இன்றைய உலகச் சூழலுக்கு ஏற்ப வாழ்வைப் பேசும் பகிரும் பதிவு செய்யும் இதழ்கள் ஈழத்தில் வருகிறதா?

துவாரகன் :
பல இதழ்கள் வருகின்றன. சில இதழ்கள் காலம் தவறியேனும் வருகின்றன. இவற்றில் அவரவர் அரசியலுக்கு ஏற்ப விடயதானத்திலும் கவனஞ் செலுத்துகின்றன. ஈழத்தில் தொடர்ந்து நாற்பதாண்டுகளாக வெளிவருகின்ற ‘மல்லிகை’யில் மூத்தவர்கள் தொடர்ந்து எழுதிவருகிறார்கள். ஆனால் அது ஒரே தடத்திலேயே தொடர்ந்தும் பயணித்துக் கொண்டிருக்கிறது. மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத் தயக்கம் காட்டுகிறது. ‘ஞானம்’ சஞ்சிகையில் நிரம்ப புதியவர்கள் எழுதுகிறார்கள். விவாதங்களுக்கு இடங்கொடுக்கிறது. ஆனால் அதிகமான சந்தர்ப்பங்களில் அந்த விவாதங்கள் மேலோட்டமான வாசகர் கடிதங்களாகவே அமைந்து விடுவதுதான் துரதிஷ்டமாக உள்ளது. இதேபோல் தொடர்ந்து வெளிவருகின்ற இன்னொரு சஞ்சிகைதான் ‘ஜீவநதி’ மூன்றாண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகிறது. ஞானம், மல்லிகையில் எழுதியவர்கள் தவிர புதியவர்களும் இதில் எழுதி வருகிறார்கள்.

இம்மூன்று சஞ்சிகைகளும் தொடர்ந்து மாதம் தவறாமல் தொடர்ச்சியாக வெளிவந்து ஈழச் சூழலுக்குத் தம்மாலான இலக்கியப் பணியைத் தொடர்கின்றன. அத்தோடு ஈழத்தில் வெளிவரும் ஏனைய சஞ்சிகைகளைவிட விற்பனையிலும் ஓரளவு சாத்தியத்தை எட்டிக் கொண்டிருப்பவை என்று நினைக்கிறேன். இது ஈழச்சூழலைப் பொறுத்தவரையில் தொடர்ந்து பேணப்படவேண்டிய நல்ல அம்சமாகும். அதேவேளை இச்சஞ்சிகைகளில் வெளியாகும் கணிசமான படைப்புக்களின் தரம் மற்றும் வடிவமைப்பு என்பன பற்றி என்னைப் பொறுத்தவரையில் விமர்சனங்கள் உண்டு.

கலைமுகம், அம்பலம் , மறுகா, பெருவெளி ஆகிய இதழ்கள் பற்றி கொஞ்சம் குறிப்பிடலாம். இவ்விதழ்கள் ஒருவிதத்தில் நவீன இலக்கியத்தின் வெளிகளைத் திறந்துவிடுவதில் ஆர்வம் காட்டுகின்றன. இன்றைய உலகப் போக்குக்கு ஏற்ப வாழ்வைப் பேசும் படைப்புக்களை எதிர்பார்த்த அளவில் தராவிட்டாலும் அவற்றின் விடயதானங்கள் கவனத்திற் கொள்ளத்தக்கனவாக உள்ளன. ஈழச்சூழலில் மூன்றாவது மனிதன், மற்றும் ‘சரிநிகர்’ ஆகியவை விட்ட இடத்தை நிரப்பவல்ல படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கின்றன. இதழ்களின் வடிவமைப்பிலும் படைப்புக்களின் தரத்திலும் மிகுந்த அக்கறை செலுத்துகின்றன.

யாழிலிருந்து காலம்தப்பியேனும் ‘தாயகம்’ தேசிய கலை இலக்கியப் பேரவையினால் வெளிக்கொண்டு வரப்படுகிறது. இவ்விதழ் வாசிப்பைப் பரவலாக்கும் நோக்கில் சில கிராமங்களில் வாசகர் வட்டங்களை உருவாக்கி செயற்பட்டு வருகின்றது.

இவை தவிர வேறும் சில சஞ்சிகைகள் துறை சார்ந்து, நிறுவனம் சார்ந்து வெளிவருகின்றன. திருகோணமலையிலிருந்து ‘நீங்களும் எழுதலாம்’, என்ற கவிதை இதழ் வருகின்றது. மேலும் ‘தவிர, செங்கதிர், படிகள், பூங்காவனம், வெள்ளிமலை ஆகிய இதழ்களும் வெளிவருகின்றன.

ஆனந்த விகடன், குமுதம் பாணியிலான வெகுஜன இதழ் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அவற்றின் விற்பனை நிலையோ படுமோசமாகத்தான் இருக்கிறது. முன்னர் ‘வேடிக்கை’ என்றொரு இதழ் வந்தது. தற்போது ‘இருக்கிறம்’ என்ற இதழைக் கொண்டு வருகிறார்கள்.

இங்குள்ள இதழியற் சூழல் தமிழ்நாட்டைப் போன்றல்ல. அங்கு நிறுவனம் சார்ந்து பல சஞ்சிகைகள் பெரியளவு முதலீட்டுடன் இயங்குகின்றன. விநியோகம் மற்றும் எழுத்துத் துறை சார்ந்து அங்கு இயங்குபவர்கள் அதிகம்.இன்னமும் ஈழப் படைப்பாளிகளின் படைப்புக்களில் ஒரு தொகுதியையோ அல்லது வெளிவருகின்ற சஞ்சிகைகளையோ அரசு சார்ந்து கொள்வனவு செய்வதிலே ஒர் ஒழுங்கான முறைமை இன்னமும் பேணப்படவில்லை. சில பெரிய நூலகங்கள் மாத்திரம் இலங்கையில் வெளிவரும் நூல்களை அல்லது சஞ்சிகைகளை வாங்குகின்றன. இந்த நிலையில் இதழியற் சூழலும் அன்றிலிருந்து இன்றுவரை ‘ஓரளவு’ என்ற நிலையில்தான் உள்ளது.

தீபச்செல்வன் :

எழுத்துக்களைப் பிற சமூகத்துடன் பகிருவதில், பல்வேறு தொடர்புகளைச் செய்வதில் காலத்திற்கு ஏற்ற விரைவான பணிகளைச் செய்ய இணையங்கள், வலைப்பதிவுகள் எந்தளவு உதவுகின்றன? ஈழத்து எழுத்துக்களுக்கான உரையாடல்களைச் செய்ய அவை உதவுகின்றனவா?

துவாரகன் :
அண்மைக்காலங்களில் இணையம் மற்றும் வலைப்பதிவுகளின் ஊடான தொடர்புகள் படைப்பாளிகள் மத்தியில் பெருகி வருகின்றன. தமிழகம் மற்றும் புகலிடத்தில் இவற்றுக்கூடான உரையாடல்கள் நிகழ்ந்தவாறுள்ளன. அங்கு வாழ்ந்துவரும் ஈழத்தமிழரின் செயற்பாடுகள் அதிகமும் இணைய வழியானதாக மாறிவிட்டதால் அவர்களுடன் ஏனையவர்கள் உரையாடுவதற்கு காலத்திற்கு ஏற்ற சாத்தியமான வழியாக இணையவழித்தொடர்புகள் மாறிக்கொண்டிருக்கின்றன.

ஈழத்தைப் பொறுத்தவரையில் இணையத்தினூடான இலக்கியச் செயற்பாடு சொற்பமாகத்தான் உள்ளது. எங்களது எழுத்துக்களை ஏனைய சமூத்தினர் மத்தியில் கொண்டு செல்வதற்கு இந்தக் களத்தை நன்றாகப் பயன்படுத்த முடியும். குறிப்பிட்டுக் கூறக்கூடிய சில தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளைத் தவிர எல்லாமே காத்திரமான ஆழமான உரையாடல்களுக்கு வழிவகுக்கின்றன என்று கூறமுடியாது. சிலர் பொழுதுபோக்குக்காக தாங்கள் அன்றாடம் நாட்குறிப்பு எழுதுவதைப்போல் மிகச் சாதாரணமாக எழுதுவதைக்கூட இணையத்தில் உலாவ விடுகின்றனர். மற்றபடி பரபரப்புக்காகவும் பிரபல்யம் பெறவேண்டும் என்பதற்காகவும் சிலர் வருகின்றார்கள். இவையெல்லாவற்றையும் இலக்கியச்செயற்பாடு என்ற கணக்கில் எடுக்க முடியாது.

ஈழத்தைப் பொறுத்தவரையில் கூடுதலாக இளைய படைப்பாளிகளுக்கு இணையவழித் தொடர்புகள் பரவலான வாசிப்புக்கும் சமகால விடயங்களை உடனுக்குடன் விவாதிப்பதற்கும் நிரம்ப சாத்தியத்தை ஏற்படுத்தி வருகிறது. அ. முத்துலிங்கம், உமா வரதராஜன், மேமன்கவி, கே.எஸ் சிவகுமாரன் போன்ற சிலரைத் தவிர ஏனைய மூத்தவர்கள் இது ஏதே ஆகாத காரியம் போலத்தான் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் இவ்வாறான இடைவெளி மிகக் குறைவென்றே நினைக்கிறேன்.

இணையத்தில் உலாவருகின்ற உரையாடல்கள் மற்றும்படைப்புக்கள் நூல் வடிவம்பெற்றிருக்கின்றன. உதாரணத்திறகு ஜெயமோகனின் ‘எதிர்முகம் இணைய விவாதங்கள்’ மற்றும் உயிரோசை வெளியீடுகளைக் குறிப்பிடலாம். இவ்வாறான தொடர் பணிகள்தான் எங்கள் எழுத்துக்களை எல்லோரிடமும் கொண்டு சேர்க்கவல்லதாக இருக்கும். மேற்குலகில் நூலகங்களின் பயன்பாடு குறைவடைந்து இணையவழித தொடர்பே மேன்மை பெற்றிருக்கின்ற சமகாலச் சூழலில் தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரையில் நூலகங்களுக்கும் நூல்களுக்கும் சஞ்சிகைகளுக்கும் உள்ள பெறுமதியை இணைய வழித்தொடர்புகளால் இன்னமும் குறைத்துவிட முடியவில்லை என்பது ஓரளவு ஆறுதலான செய்திதான்.

தீபச்செல்வன் :

ஈழத்து மக்களின் வாழ்கை இப்பொழுது என்ன நிலையில் இருக்கிறது. பாரிய அழிவுகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்த அவர்கள் இன்றும் பல சூழ்ச்சிகளுக்கும் அதிகாரங்களுக்கும் இடையில் சிக்கி தவிக்கிறார்கள் என நினைக்கிறேன். இந்த மனிதர்களின் காலத்தையும் வழிகளையும் பற்றி குறிப்பிடுங்கள்?

எழுத்தாளர் துவாரகன் - பாகம் 2துவாரகன் :
உலகத்தில் எத்தனையோ மாற்றங்கள் காலத்திற்குக் காலம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், எங்கள் மக்களின் வாழ்வு மட்டும் மீண்டும் மீண்டும் பழைய நிலைகளுக்கே திரும்பி விடுகிறது. ‘கிறிஸ்’ கம்பத்தில் ஏறுபவன் மீண்டும் வழுக்கிக் கீழே வந்து கொண்டிருக்கும் நிலைதான் அது. இவ்வளவும் இழந்த பின்னரும் இன்னமும் ஏமாற்றுபவர்களும் சூழ்ச்சிக்காரர்களும் இந்த மக்களைச் சுற்றிய வண்ணமே இருக்கிறார்கள். இதுதான் ஏன் என்று தெரியவில்லை. கடவுளால் சபிக்கப்பட்டவர்களின் வாழ்வுபோல் எல்லாமே நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. முதலாளித்துவமும் உலகமயமாக்கலும் எங்களிடம் இருக்கும் சொற்ப அடையாளங்களையும் அடித்துச் சென்று கொண்டிருக்கின்றன. பிள்ளைகளின் எதிர்காலம் என்பதோ எங்கள் மக்களின் வளர்ச்சி என்பதோ எந்த வகையில் என்பது தெரியவில்லை.

எதிர்காலம் என்பதே கேள்விக் குறியாகத்தான் உள்ளது. இனங்களுக்கிடையில் சரியான புரிந்துணர்வு ஏற்பட்டால் ஓரளவு சாத்தியமான வாழ்வுக்கு இடமிருக்கும் என்று நினைக்கிறேன். தவிரவும் ‘எரியிற வீட்டில் பிடுங்குபவர்கள்போல’ த்தான் நாம் சந்திக்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள்.

தீபச்செல்வன் :

வன்னியில் மீள்குடியேற்றம் செய்ய பகுதியில் ஆசிரியராக பணியாற்றுகிறீர்கள். வாரத்தில் ஐந்து நாட்கள் அங்குதான் தற்பொழுது தங்கியிருக்கிறீர்கள். அந்த மாணவர்களின், மக்களின் மனநிலைகள் எப்படி உள்ளன? அவர்கள் எப்படியான வாழ்வை அங்கு தொடங்கியிருக்கிறார்கள்?

துவாரகன் :
மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பின்னர் நாங்கள் பாடசாலைகளுக்குச் சென்றபோது எங்களுக்கு வெறும் கட்டடங்கள்தான் மிஞ்சியிருந்தன. சில இடங்களில் அவையும் இல்லை. ஓரிரண்டு வாரங்களிற்குள் தளபாடம் மற்றும் பாடநூல்கள், சீருடைகளைத் தருவித்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் முதலிலிருந்தே ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.

இங்கு சாதாரணமாக வேலை செய்ய முடியாது. கொஞ்சம் அர்ப்பணிப்புடனும் பொறுமையுடனும்தான் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. எல்லாருமே எங்கள் பிள்ளைகள். அவர்கள் இழந்தவை அதிகம். அவர்களின் வாயிலிருந்து வரும் கதைகளை அவர்களின் அனுபவங்களை பொறுமையுடன் கேட்க வேண்டியிருக்கிறது. பிள்ளைகளைப் படிக்கும் நிலைக்குக் கொண்டு வருவதற்கு பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. மீளவும் எல்லா வகையிலான கற்றல் கற்பித்தல் முறைகளையும் மீட்டவேண்டியிருக்கிறது.

அதிகாரத்தையும் அடக்குமுறையையும் இங்கு நிர்வாகம் சார்ந்த நிலையில் கூட நினைத்துப் பார்க்கமுடியாது. கொஞ்சம் எல்லா நிலைகளிலும் விட்டுக் கொடுப்பு, சமூகப் பெறுமானம் குறித்து சிந்தித்தே காரியம் செய்ய வேண்டியுள்ளது. வேறு பிரதேசத்தில் கற்கும் மாணவர்களுக்குரிய எல்லா அளவுகோல்களையும் இந்தப் பிள்ளைகளிடம் செயற்படுத்த முடியாது. வழிப்படுத்தல், வளப்படுத்தல் இரண்டுமே மிக அவசியமாக உள்ளன.

போக்குவரத்துப் பிரச்சினை, குடிநீர், இருப்பிடம், எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தித் தருகிறார்கள். மனிதாபிமானம் இன்னமும் செத்துவிடவில்லை என்பதற்கு சாட்சியாக மக்கள் தங்களுக்குள் உதவி வருகிறார்கள். சில இடங்களில் இராணுவத்தினரும் பொலிஸ்படையினரும் மக்களின் வாழ்விடங்களைத் துப்பரவு செய்து கொடுத்து வருகிறார்கள். நான் வேலைசெய்யும் பிரதேசத்தில் பாடசாலை வளவுகளை துப்பரவு செய்து கொடுப்பது முதல் மீள் பணிகளில் பலர் இணைந்து செயற்படுகிறார்கள். இவை கொஞ்சம் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன. ஆனால் எல்லாவற்றுக்கும் பின்னால் ஓர் அரசியல் இருப்பதுதான் மீளவும் அச்சத்தைத் தருவதாக உள்ளது.

தீபச்செல்வன் :

புலம்பெயர் இலக்கியத்தில் உங்களது கவனத்தை செலுத்தி வருகிறீர்கள். இதழ்கள் கவிதைகள் கதைகள் என்று பல வாசிப்புக்களை நிகழ்த்தியிருக்கிறீர்கள்? அந்த இலக்கியச் சூழலையும் வாழ்வையும் பற்றிக் குறிப்பிடுங்கள்?

துவாரகன் :
ஈழத்தமிழரின் புலம்பெயர்வு நிகழ்ந்து கால்நூற்றாண்டு கடந்து விட்டது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஆறு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தற்போது வாழ்ந்து வருகிறார்கள். பலர் இலக்கியத்தளத்தில் தம்மை இனங்காட்டியிருக்கிறார்கள். ஈழத்து வாழ்வு, புகலிட வாழ்வு, கலாசார முரண்பாடு குறித்தெல்லாம் எழுதியிருக்கிறார்கள்.

150 ற்கு மேற்பட்ட இதழ்கள் வெளிவந்திருக்கின்றன. கவிதை சிறுகதை நாவல் நாடகம் ஊடகம் ஆகிய துறைகளில் காத்திரமாக பலர் செயற்பட்டு வருகிறார்கள். குறிப்பிட்டுக் கூறக்கூடிய பல படைப்பாளிகளைப் புகலிச் சூழல் உருவாக்கியிருக்கிறது. ஷோபாசக்தி, சக்கரவர்த்தி, திருமாவளவன், கலாமோகன், பார்த்திபன், நிருபா, சுமதி ரூபன், றஞ்சினி, ஆழியாள் என்று இன்னும் பலர் தம்மை அடையாளப் படுத்தியிருக்கிறார்கள். தனித்தனியாக துறைகள் குறித்தும் ஆளுமைகள் குறித்தும் பேசவேண்டியிருக்கிறது.
அங்கிருந்து வெளிவரும் படைப்புக்களில் அகதிநிலை பற்றியும் அடையாள இழப்புப் பற்றியும் அதிகமாகப் பேசப்படுகின்றது. தவிரவும், அந்நியம், பண்பாட்டுக் கலப்பு, இரட்டை வாழ்வு, அடுத்த தலைமுறைப் பிள்ளைகளின் நிலை, மொழிக்கலப்பு ஆகியவை குறித்தும் வெளிவருகின்ற படைப்புக்கள் கவனத்தைக் குவிக்கின்றன. நல்ல பல படைப்புக்களை புகலிடச் சூழல் தந்திருக்கிறது. இவையெல்லாம் ஈழப்படைப்புக்களின் இன்னொரு கட்டத் தொடர்ச்சியாகத்தான் உள்ளன.

தீபச்செல்வன் :
இறுதியாக வேறு எதையாவது பகிர விரும்புகிறீர்களா?

துவாரகன் :
எங்களைப் புரிந்து கொள்ளுங்கள், எங்கள் வாழ்வை எங்களிடம் தாருங்கள் என்றுதான் எல்லோரிடமும் கேட்கவேண்டியுள்ளது. ஒரு குடிலில் வாழும் சாதாரண மனிதனின் சொற்ப கால வாழ்வுகூட மண்ணில் அநியாயமாக மாண்டுபோக இனியும் யாரும் காரணம் ஆகக் கூடாது. தமிழ் இலக்கியத்தில் தலை நிமிர்ந்து நிற்பதுபோல் நாங்கள் எங்கள் வாழ்விலும் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். நூற்றாண்டு கால அடிமைச் சமூக வாழ்வு இனி யாருக்கும் தேவையில்லை. எங்களுக்குத் தேவையானதெல்லாம் எங்கள் வாழ்வு ஒன்றுதான் என்பதை மட்டுமே இப்போது சொல்ல விரும்புகிறேன்.

By – Shutharsan.S

நன்றி – அம்ருதா, ஏப்ரல் 2012

பாகம் 1 வாசிக்க

 

Sharing is caring!

2 reviews on “எழுத்தாளர் துவாரகன் – பாகம் 2”

  1. kuneswaran says:

    எனது நேர்காணலை இணைத்தமைக்கு மிக்க நன்றி. எழுத்துப்பிழை உள்ளது. ‘தொண்டைமானாறு’ என வரவேண்டும் திருத்திக் கொள்ளுங்கள். படங்களுக்குப் பதிலாக கறுப்புப்பெட்டி உள்ளது. அதையும் கவனியுங்கள்.

  2. நிச்சயமாக. தங்களின் கருத்துக்கு நன்றி

Add your review

12345