எழுத்தாளர் நாவேந்தன்

நாவேந்தன்

புங்குடுதீவினைப் பிறப்பிடமாகவும் இல 71/1 வைமன் வீதி, நல்லூர் யாழ்ப்பாணம் என்ற இடத்தை வாழ்விடமாகக் கொண்ட தம்பிராசா திருநாவுக்கரசு (நாவேந்தன் 14.12.1932 – 10.07.2000) ஈழத்துச் சிறுகதை வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் நிறையவே எழுதியவர். பயிற்சி பெற்ற அரச பாடசாலை ஆசிரியரான இவர் பதினைந்து வயதில் ”இந்துசாதனம்” பத்திரிகை வாயிலாக எழுத்துலகில் உட்புகுந்தார். நாவேந்தன் என்ற புனைபெயரில் இலக்கிய வட்டத்தில் மிகவும் அறிமுகமானவர். தினகரன், வீரகேசரி, ஈழகேசரி, சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளில் நாவேந்தன் சிறுகதைகள் வெளிவந்தன. 1950 களில் ”தமிழ்க் குரல்” என்னும் பத்திரிகை ஒன்றை இவர் வெளியிட்டு வந்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்காக மேடைகளில் முழக்கமிட்ட நாவேந்தன் இலக்கியத்துறையில்  சிறுகதை, நாவல், திறனாய்வு, கவிதை, கட்டுரை, இதழியல், மேடைப்பேச்சு எனப்பல துறைகளில் கால் பதித்தவர்.

மேரறிஞர் அண்ணாத்துரை, ப. ஜீவானந்தம் ஆகிய எழுத்துலகச் சிற்பிகளின் சாயலில் கருத்துக்களைச் சிறுகதைகளில் சாவேந்தன் தன் எழுத்துக்களை இளையோட விட்டிருந்தார். 1952 களில் நாவேந்தன் முழுமூச்சாக சுதந்திரனில் எழுதியபோது இலக்கிய உலகம் அவரை அவதானிக்கத் தொடங்கியது. அதன் காரணமாக வீரகேசரி, கலைமன்றம், உமா, தென்றல், சாட்டை, கலைச்செல்வி, உதயம், விவேகி, ஆகிய பத்திரிகைகள் தமது வெளியீடுகளிலும் இவரின் சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி வெளியிட்டு வந்தன.

தியாகம், அகலிகை, வாழத்தெரிந்தவள், தண்டனை, பிச்சைக்காரி, சகோதரி, போட்டி ஒழிந்தது, கள்ளத்தோணி, அவள் சாட்சி, எக்ஸ்ரா ரீச்சர், வெள்ளிக்கிழமை, அழியாதது, பட்ட மரம், கொலைகாரி, நம்பிக்கை, துறவியின் காதல், உழைப்பு, சலனம், விழிப்பு, வாழ்வு, ஒரு சொட்டுக் கண்ணீர், ஆசை மயக்கம், பெண், காதல் வென்றது, தவறு, சுடலையாண்டி, முதலான சிறுகதைகளை எழுதி வாசகரிடையே நன்மதிப்பை நிறையவே பெற்றார். வாழ்வு, தெய்வ மகன், ஆகியன இவரின் சிறுகதைத் தொகுதி நூல்களாகும். நாவேந்தன் ஞாபகார்த்தமாக யாழ் இலக்கிய வட்டம் சிறந்த சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு வருடா வருடம் பரிசளித்து வருவது குறிப்பிடத்தக்கது. இலக்கியவாதி நாவேந்தன் தனது பெயரிலேயே ஒரு இதழை வெளியிடும் துணிவுடையவர் ஆவார். இவர் மாற்றுக் கருத்துக்கு முகம் கொடுத்து தன் கருத்தை முன்னிறுத்த  பின்நிற்க மாட்டார். இவரது செயலாண்மைக் கதைகள், கட்டுரைகள், கவிதைகளாகப் பல நூல்களை வெளிக்கொணர்ந்தமையினாலும் கற்பித்தற் திறமையாற் பெற்ற உயர்ச்சிகளினாலும் புலனாகும்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடு

Sharing is caring!

Add your review

12345