எழுத்தாளர் மகாதேவா

எழுத்தாளர் மகாதேவா

அமரர் எழுத்தாளர் மகாதேவா அவர்கள் 27.09.1924 – 25.12.1982 காலப்பகுதியில் வாழ்ந்தார். முழுப்பெயர் இளையப்பா மகாதேவா. நல்லூர் திருநெல்வேலியை வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்த அமரர் எழுத்தாளர் மகாதேவா என்ற தேவன் ஈழத்து இலக்கிய உலகிற்குச் செய்த பங்களிப்பு எண்ணிக்கையில் மிகக் குறைவானாலும் மிகக் கனதியானவை. தென்னவன் பிரமராஜன், விதி, இரு சகோதரர்கள், பத்தினியா பாவையா, வீரபத்தினி, நளதமயந்தி என்பன எழுத்தாளர் மகாதேவா (தேவன்) அவர்களால் எழுதப்பட்ட நாடகப் பிரதிகளாகும். இலக்கியத் துறையில் நாடக ஆசிரியர், நாவலாசிரியர், விஞ்ஞானக் கட்டுரையாளர், பேச்சாளர், அறிவிப்பாளர், ஆசிரியர் எனப் பல பரிமாணங்களை இவர் பெற்றிருந்தார். 1944 ம் ஆண்டிலிருந்து எழுத்துலகில் ஈடுபட்டு வந்த இவர் யாழ். இந்துக்கல்லூரியின் புகழ்பூத்த ஆசிரியர்களில் ஒருவராக விளங்கினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஐம்பது, அறுபது, எழுபதுகளில் நடைபெற்ற எந்தப் பெரிய நிகழ்வானாலும் தேவனின் குரல் ஒலிக்காத விழாக்களே இல்லையெனலாம். வாடிய மலர்கள், மணிபல்லவம், கேட்டதும் நடந்ததும் என்பன இவரின் நாவல்களாகும். இவரின் எழுத்துக்களில் மெல்லிய நகைச்சுவை எப்போதும் விரவிக் காணப்படும். இவரால் எழுதப்பட்ட சிறுகதைகள் தொகுக்கப்பட்டு தேவன் – யாழ்ப்பாணம் சிறுகதைகள் என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய சிறுகதைகள் ஈழகேசரி, சுதந்திரன், வீரகேசரி, தினகரன், ஈழநாடு, பிரசன்ன விகடன், கலைச்செல்வி முதலான பத்திரிகைளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. காந்தியக் கதைகள் என்ற தொகுதியிலும் இவரின் சிறுகதைகள் இடம்பிடித்துள்ளன. 1963 ஆம் ஆண்டு இலங்கை எழுத்தாளர் சங்கத்தினை எருவாக்கியதில் இவருக்கிருந்த பங்கு முக்கியமானது. தேவனின் மொழிநடை எளிமையானது. அர்த்தம் செறிந்தது. அக்காலத்தில் ஆனந்த விகடன் ஆசிரியரின் பெயர் தேவன் என்று இருந்தமையால் இவர் தன் புனை பெயரின் பின்னால் யாழ்ப்பாணம் என்னும் ஊர்ப்பெயரை இணைத்து தேவன் – யாழ்ப்பாணம் என மாற்றிக் கொண்டார்.

இவர் ”Treasure Island” என்னும் ஆங்கில நாவலை ”மணிபல்லவம்” என்ற பெயரில் தமிழாக்கம் செய்திருந்தார். இந்நூலானது அக்காலத்தில் சிரேஷ்ட தராதரப் பத்திர வகுப்பில் உபயோகப்படுத்தப்பட்டது. ”அவன் சுற்றவாளி” என்ற குறுநாவலையும், ”வானவெளியில்” என்ற விஞ்ஞான அறிவியற் கட்டுரை நூலையும் இவர் எழுதியுள்ளார்.

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடு

Sharing is caring!

Add your review

12345