எழுத்தாளர் வீ.ஜீவகுமாரன்
எழுத்தாளர் வீ.ஜீவகுமாரன் அவர்கள் புலம் பெயர் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர். இவர் யாழ்ப்பாணம் சங்கானையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தற்போது டென்மார்க் அரச நூலகத்தின் தமிழ் பகுதி பொறுப்பாளராகவும் மொழி பெயரப்பாளராகவும் கடமை புரிந்து வருகின்றார்.
கவிதை, சிறுகதை, நாவல், பதிப்புத்துறை போன்றவற்றில் தடம்பதித்துவரும் இவரது படைப்புக்கள் புலம்பெயர் இதழ்களிலும் இணையத்தளங்களிலும் இலத்திரனியல் ஊடகங்கள் பலவற்றிலும் களம் கண்டுள்ளன.
விஸ்வசேது இலக்கியபால பதிப்பகத்தின் பொறுப்பாளராக இருக்கும் இவர் ‘மக்கள் மக்களால் மக்களுக்காக’ என்ற நாவலுக்காக சிறந்த நாவலுக்குரிய பரிசினை பெற்று அண்மையில் மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் ‘தமிழியல் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு ‘தகவம்’ கதைஞர் வட்டம் நடாத்திய தேசிய மட்ட சிறுகதைப்போட்டியில்
கிராமத்து பெரிய வீட்டுக்காரி
அகால மரணம்
ஆகிய சிறுகதைகளுக்காக முதலாம் இரண்டாம் இடங்களை பெற்றிருக்கின்றார்.
டெனிஷ் – தமிழ் – ஆங்கில மருத்துவ அகராதியும் கையேடும்
யாவும் கற்பனைஅல்ல (சிறுகதை தொகுதி)
மக்கள் மக்கள் மக்களுக்காக (நாவல்)
சங்கானைச் சண்டியன் (சிறுகதை தொகுதி)
இப்படிக்கு அன்புள்ள அம்மா (மொழி பெயர்ப்பு நூல் )
ஆகிய நூல்களை வெளியிட்டிருப்பதோடு ஈழத்து எழுத்தாளர்கள் 50 பேரின் சிறுகதைகளை தொகுத்து ‘முகங்கள்‘ எனும் பெயரில் நூலாகவும் வெளியிட்டுள்ளார்.
தனது எழுத்துக்கள் மூலம் ஈழத்து எழுத்துத்துறைக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர் வீ.ஜீவகுமாரனை நாமும் வாழ்த்துவோம்.

நன்றி – மூலம்- கவிஞர் அஸ்மின் இணையம்