எஸ். ரி. அரசு

நாடகச்செல்வர் எஸ். ரி. அரசு : ஈழத்து நாடக சிற்பிகளில் ஒருவர்

எஸ். ரி. அரசு

ஈழத்து தமிழ் நாடக மேடை வரலாறானது காலத்திற்கு காலம் பல கலைஞர்களால் செதுக்கி எடுக்கப்பட்டு ஒரு உயர்ந்த கலைவடிவமாக வளர்ந்து வந்துள்ளது. அவ்வாறான ஒரு கலைஞராக நாற்பதுகளின் பின் புதுமையான கண்ணோட்டத்துடன் செதுக்கிய சிற்பிகளில் ஒருவராக திகழும் திரு.எஸ்.ரி.அரசு எனப்படும் “அரசையா” அவர்களின் பதிவாக இன்றைய கவர் ஸ்டோரி அமைகிறது.

1948ஆம்  ஆண்டு “தூக்குமேடை” என்ற நாடகம் மூலம் ஒரு நடிகனாக அறிமுகமாகி இதுவரையில் ஏறத்தாள எழுபத்தி ஐந்து நாடகங்களுக்கு மேலான நாடகங்களில் தனது நடிப்புத்திறனை வெளிப்படுத்தியுள்ள அரசையா அவர்கள் நடிகனாக மட்டுமல்லாது நெறியாளனாக, ஒப்பனைக் கலைஞனாக, ஒரு புகைப்படக் கலைஞனாக, சிற்பக் கலைஞனாக, வில்லுப்பாட்டுக் கலைஞனாக என பல்முக கலைஞனாக மிளிர்கிறார். 1961ஆம்   ஆண்டு இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது எல்லோரும் சிதறியோடிய போதும் இவர்மட்டும் தனி மனிதனாக இராணுவ வாகனத்தின் முன் நிமிர்ந்து கிடந்தது தமிழர் நெஞ்சுறுதியை இந்த மண்ணில் பதிய வைத்த மாமனிதர்.

எஸ். ரி. அரசு

ஒரு மாமனிதராக சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நாடகவியலாளர் அரசையா(எஸ்.திருநாவுக்கரசு) அவர்கள் யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாக கொண்டவர். பரம்பரை வைத்திய தொழில் படிப்போடு தனது ஆரம்பக் கல்வியை யாழ்.சென்ஜோன்ஸ் கல்லூரியில் மேற்கொண்டார். சிற்பத் துறையில் இருந்த நாட்டம் காரணமாக தென்னிந்தியா சென்று அக்கலையை பயின்றார். அக்காலகட்டம் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தமையினால் நாலுவருட கட்டாய ராணுவ சேவையில் ஈடுபட்ட பின் நாடு திரும்பினார்.

இவர் தென்னிந்தியாவில் தங்கியிருந்த காலத்தில் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் புரட்சிகர கருத்துக்களால் கவரப்பட்டு அதன்பால் யாழ்ப்பாணம் திரும்பிய பின்னர் சில நண்பர்களுடன் இணைந்து ஒரு இளைஞர் கழகத்தை ஆரம்பித்து தமிழ் நாட்டில் அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் எழுதிய புரட்சிகர நாடகங்களை யாழ்ப்பாணத்தில் நடித்தி மேடையேற்றினார். “அடங்காப்பிடாரி” புகழ் வி.சி.பரமானந்தத்துடன் அரசையாவின் நாடகப் பணிகள் ஆரம்பித்தன. இவர் இயக்கிய அரசவரலாற்று நாடகங்களில் ‘திப்புசுல்தான்’, ‘தமிழன் கதை’, ‘வீரமைந்தன்’, ‘வீரத்தாய்’, குறிப்பிட்டு கூறக்கூடியவை.

எஸ். ரி. அரசு
எஸ். ரி. அரசு

 

கலையரசு சொர்ணலிங்கம் தயாரித்த “தேரோட்டி மகனில்’ அருச்சுனனாகவும், “கோவலன்” நாடகத்தில் கோவலனாகவும் நடித்துப் புகழ் பெற்றவர்.  சொக்கனின் கவரிவீசிய காவலன்’, ‘ஞானக்கவிஞன்’, ‘தெய்வப்பாவை’, ‘கூப்பியகரங்கள்’, பண்டிதர் சு.வேலுப்பிள்ளையின்(சு.வே.) ‘வீரசிவாஜி’, ‘சைலாக்’,  ‘ஒத்தொல்லோ’ போன்ற நாடகங்களையும் மற்றும் குழந்தை ம.சண்முகலிங்கத்தின் ‘வையத்துள் தெய்வம்’, ‘பாஞ்சாலி சபதம்’ ஆகியவற்றையும் இயக்கி தனது முத்திரையை பதித்தவர்.

எழுபதுகளில் அரசாங்கத்தால் நாடகத்துறையில் டிப்ளோமா பயிற்சிநெறி ஆரப்பிக்கப்பட்ட பொழுது அதனைக் கற்பதற்கு ஆர்வம் கொண்டு, அவ் டிப்ளோமா பயிற்சிநெறியினை முடித்தவர்களாகிய காரை.சுந்தரம்பிள்ளை, கவிஞர். கந்தவனம், தார்சீசியஸ், நா.சுந்தரலிங்கம், சிவானந்தன், வள்ளிநாயகி ராமலிங்கம் போன்றவர்களை இணைத்து இவர்களுடன் குழந்தை ம.சண்முகலிங்கம், பிரான்சிஸ் ஜெனம் ஆகியவர்களுடன் இணைந்து யாழ் நாடக அரங்கக் கல்லூரி எனும் அமைப்பை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவராக இன்றும் அந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றார். இவ்வாறு நவீன நாடக இயக்கத்துடன் இணைந்து குழந்தை ம.சண்முகலிங்கத்தின் ‘எந்தையும் தாயும்’ நாடகத்தில் ஐயாத்துரை எனும் பாத்திரம் ஏற்று சிறப்புற நடித்தவர். இந்நாடகம், யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் தமிழக நகரங்களில் மேடையேற்றப் பட்டு பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

‘பொறுத்ததுபோதும்’, ‘புதியதோர் வீடு’, ‘எந்தையும் தாயும்’  போன்ற நாடகங்களை தமிழக மேடைகளில் மேடையேற்றிய போது – ஈழத்தில் நாடகத் துறை இவ்வளவு வளர்ந்துள்ளதா என தமது வியப்பை வெளிக்காட்டினர்” என தனது தமிழக கலைப்பயணம்  தொடர்பான பதிவுக் குறிப்பில் அரசையா தெரிவித்துள்ளார்.

எப்பொழுதுமே நெற்றியில் விபூதிப் பூச்சு,  தனது உள்ளம் போலவே  வெள்ளை நிற நஷனல் வேட்டி, முறுக்கிய மீசை, திடகாத்திரமான உடல்,  எதையும் கூர்ந்து பார்க்கும் கண்கள், கம்பீரமான குரல்  என்பனவே அவரது நடிப்புத்திறனுக்கு இன்னும் அணிசெய்பவையாக அமைந்து விடுகிறது.

ஒரு நாடக கலைஞனாக மட்டுமல்லாது, தொழில்ரீதியாக ஒளிப்படவியல் கலைஞராகவும் வாழ்ந்த அரசையா சிற்பம் செய்யும் ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார். தியாகி. சிவகுமாரன், பருத்தித்துறை புற்றளை கந்தமுருகேசனார், சதாவதானி புலோலியூர் கதிரவேட்பில்லை ஆகியோரது சிலைகளை உருவாக்க  தனது மருகர், ரமணி, மற்றும் அன்ரன் மாஸ்டர் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியும் உள்ளார். இவரது இவ்விரு கலைத்திறமை நாடகத்துறையில் பாத்திரங்களை உருவாக்குவதிலும் ஒப்பனை செய்வதிலும் கைகொடுத்தன.

எஸ். ரி. அரசு
எஸ். ரி. அரசு

 

நடிப்புத்துறையில் மேடை நாடகத்துடன் மட்டும் நின்றுவிடாது ‘குத்து விளக்கு’, ‘Taxi Driver , ஈழத்து சினிமா படங்களில் நடித்ததோடு, ‘கடமையின் எல்லை’ எனும் படத்தில் உதவி நெறியாளராகவும் தனது கலைப்பயணத்தை பதிவு செய்துள்ளார்.   அத்தோடு திருப்பூங்காடி ஆறுமுகம், கலாவிநோதன் சின்னமணி கணபதிப்பிள்ளை ஆகியோருடன் இணைந்து வில்லிசை கலைஞராகவும் மிளிந்துள்ளார்.

எஸ். ரி. அரசு

யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளில் மேடை நாடக வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய அரசையா அவர்கள் இடப்பெயர்வு காலங்களில் வவுனியாவில் வவுனியா வளாகம், தேசிய கல்வியியல் கல்லூரி, மற்றும் பாடசாலைகள் பலவிட்கு தனது தன்னலம் பாராத சேவையினை வழங்கியுள்ளார். இன்று நான்கு  தலைமுறைகளுக்கு நாடகப் பயிற்சியினை வழங்கி பல கலைஞர்களை உருவாக்கிய பெருமை அந்த மகோன்னத மனிதரை சேரும். அப்படிப்பட்ட ஒரு கலைஞனிடம் நானும்  நாடகம் பயிற்ச்சியினை பெற்றேன் என்பதில் நிறைவடைகிறேன். அவருடன் பேசிக் கொண்டிருந்தாலே நிறைய விடயங்களை கற்றுக்கொள்ளலாம். அவ்வாறு ஒரு பழுத்த அனுபவசாலி.

நாடக அரங்க கல்லூரி, தேசிய கலை இலக்கிய பேரவை, அரங்க செயற்பாட்டுப் குழு மற்றும் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், இன்னும் பல இலக்கிய அமைப்புக்களுடன் இணைந்து தனது கலைப் பயணத்தை இன்றும் தொடர்ந்து வருகிறார்.

By – Shutharsan.S

நன்றி – தொகுப்பு – சேகர் தம்பிராஜா தகவல் மூலம் – தாய்வீடு ஜூலை 2010

Sharing is caring!

1 review on “எஸ். ரி. அரசு”

  1. பொதுவாக அரசையா என அன்பாக அழைக்கப்பெறும் எஸ்.ரி. அரசு அவர்களை நினைவுகூர்ந்து இப்பதிவை இடுகிறேன்.

    இன்றும் பசுமையான அந்நாள் நினைவுகள்! எங்கள் உறவினர் சடங்குகளிலெல்லாம் அரசண்ணைதான் புகைப்படக் கலைஞர். நாங்கள் சிறுவர்களாக அவர் எப்போது அடுத்த படம் எடுப்பாரென்று அவர் பின்னாலேயே சுத்துவோம். சுடச்சுட எரிந்த குமிழ் வாங்குவதற்கு!! ஒரு முறை ஒருத்தருக்கென்று பங்கிட்டுக் தருவார். அவரைப் பார்த்தே வீட்டில் நாங்களும் வில்லிசை நடத்துவதுண்டு. கதை சொல்லுவதை விடுத்து ‘ஆமா’ போடுவதே பெரும்பாலுமிருக்கும்… ஒரு முறை நான் புதுவை அண்ணையை சந்திக்க செற்றவிடத்து அரசு அண்ணையும் அங்கு இருந்தார். புதுவை அண்ணை என்னை அருகே அழைத்து இவர்தான் பாமினி தமிழ் எழுத்துருவாக்கியவர் என அறிமுகம் செய்தார். அரசு அண்ணை என்னைப்பார்த்து நீ வந்து நிற்கிறாய் எனக் கேழ்விப்பட்டேன் ஆனால் நீதான் பாமினி எழுத்துருவாக்கியவன் என்று எனக்குத் தெரியாது..
    இவர் சின்ராசுவின் (இரத்தினதுரை பத்மநாதன்) மகன் எனது தம்பியாரது மகன்தான் எனப் பெருமையாகச் சொன்னது இன்றும் என் காதிலொலித்துக்கொண்டிருக்கின்றது. நானும் அவரது உறவுக்காரன் என்பது மனதிலோர் இதமான வருடலைத் தருகின்றது. அன்னாருக்கு எனது அகவணக்கங்கள். நன்றி!

Add your review

12345