ஏரம்பு சுப்பையா

ஏரம்பு சுப்பையா

இணுவிலைப் பிறப்பிடமாகவும், ”கலாபவனம்” கொக்குவில் மேற்கினை வாழ்விடமாகவும் கொண்டு வாழ்ந்தவர் அமரர் ஏரம்பு சுப்பையா (தோற்றம் – 13.01.1922). முதலாவது அரச நியமனம் பெற்ற நடன ஆசான் என்ற பெருமைக்குரியவர். பரதம், கதகளி ஆகிய நடனத்துறையில் பேராற்றல் பெற்று இருபத்தேழு வருடங்கள் இம்மண்ணிலே நடனத்துறையில் தடம்பதித்தவர் இப்பெருங்கலைஞர் ஏரம்பு சுப்பையா ஆவார். இலங்கை மண்ணில் அனைத்து மாவட்டங்களிலும் கலை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு விழாக்கள், கலாச்சார சமய விழாக்கள், சுதந்திர தின விழாக்கள், நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் என இவரின் நடனப் பாதங்கள் பதியாத இடங்கள், அரங்குகள் இல்லையென்றே  கூறலாம். பரம்பரை வழியாக இத்துறையில் ஈடுபட்டு வரும் இவர் தந்தையார் ஏரம்பு அண்ணாவியாரிடம் ஆரம்ப நடனக் கலையைக் கற்றுக் கொண்டவர்.

பின்னர் பாரத நாடு சென்று நடன நிகேதன் சென்னை குருஜி கோபிநாத் அவர்களிடம் கதகளியையும், திருச்செந்தூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் பரதக்கலையையும் பயின்றார். அக்காலப் பகுதியில் இந்திய மண்ணிலும் தன் நடன ஆற்றலை இவர் வெளிப்படுத்தினார். இந்திய திரைப்படமான சந்திரலேகா, சக்ரதாரி ஆகிய திரைப்படங்களிலும் இவர் நடனமாடியுள்ளார். இலங்கைக்கு வருகை தந்த மகாராணியார் எலிசபெத், தேசாதிபதியாகவும் பிரதமராகவும் இருந்த சேர். ஜோன் கொத்தலாவலை ஆகியோர் முன் இவரின் நெறியாள்கையில் நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. இந்நிகழ்வுக்காக ஏரம்பு சுப்பையா அவர்கள் பாராட்டுதலையும் பெற்றிருந்தார்.

1960 ம் வருடம் யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற கலை, கலாச்சார விழாவில் ஏழு கலைஞர்கள் ஒவ்வொரு துறைக்காகக் கௌரவிக்கப்பட்டார்கள். இந்நிகழ்வில் நடனத்துறைக்காக ஏரம்பு சுப்பையா அவர்களும், அப்போவிருந்த யாழ்ப்பாண அரச அதிபர்  திரு. ம.   சிறீகாந்தா அவர்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். அப்போது இவருக்குக் ”கலைச்செல்வன்” ”அபிநய அரசகேசரி” என்னும் பட்டங்கள் வழங்கப்பட்டன. நடனக் கலையை பலருக்குப் பயிற்றுவித்த நடன ஆசான் ஏரம்பு சுப்பையா அவர்களுக்குப் பின் அவர் நேசித்த நடனக் கலையை மேலும் வளர வேண்டும் என்ற கனவை அவரது மகள் நடன கலாகீர்த்தி திருமதி சாந்தினி சிவனேசன் நிறைவேற்றி வருகின்றார்.
By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

Add your review

12345