ஏழாலை அத்தியடி விநாயகர் ஆலயம்
ஏழாலை அத்தியடி விநாயகர் ஆலயம் பற்றிய சில தகவல்கள். பூசைகளில் சைவ மரபின் படி முதலிடம் பெறுபவர் விநாயகர் ஆவார். எப்போதும் விநாயகனை நினைத்தே வழிபாடுகளை தொடக்கி வைப்பது சைவர்களின் பழக்கமாகும். அந்தவகையில் ஏழாலையில் அமைந்துள்ள இக்கோயில் ஏழாலையில் உள்ள கோயில்களிலேயே மிகவும் பழமையானதாகும் என்பதுடன் இக்கோயிலே ஏழாலையில் உருவான முதற்கோயில் என்றும் சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாது ஏழாலையில் உள்ள கோயில்களிலேயே முதன்முதல் கொடியேற்றி திருவிழா நடைபெற்ற கோயில் இது என்பதுடன் முதன்முதல் தேரோட்டத் திருவிழாவையும் நடத்திய கோயில் இதுவாகும். இவ்வாறு சிறப்பை பரப்பி நின்ற இக்கோயிலின் புகழும் பெருமையும் இதனை பரிபாலித்து வந்த பூசகர்களின் பொறுப்பற்ற தனத்தால் சிலகாலம் மழுங்கிப்போய் விட்டதுடன் 1902 ஆண்டு கடைசியாக நடைபெற்ற மகோற்சவத்தின் பின்னர் பல ஆண்டுகள் மகோற்சவமும் நடைபெறாது இருந்துள்ளது. செல்லையர் என்று அழைக்கப்பட்ட பிராமணரிடம் ஊரவர்களினால் கோயில் பொறுப்பும் திறப்பும் ஒப்படைக்கப்பட அவரோ கோயில் சாமான்களை ஈடுவைத்துவிட்டார். இதையறிந்த ஊரவர்கள் அந்த பிராமணரிடம் முரண்பட்டு கோயில் பொறுப்புக்களை மீண்டும் இன்னொரு பிராமநரிடம் ஒப்படைத்தனராம். கடைசியாக பல இடைஞ்ஞல்களின் மத்தியில் இக்கோயில் புனரமைக்கப்பட்டு 1920 ஆம் ஆண்டு கும்பாவிஷேகம் நடை பெற்றதுடன் அதை தொடர்ந்து பல புனருத்தானங்களையும் கும்பாவிஷேகங்களையும் கண்ட இக்கோயில் இன்று அழகுற அமைந்து மக்களுக்கு அருள்பாலிக்கின்றது.
By – Shutharsan.S
நன்றி – மூலம்- ஊர்ப்பக்கம் இணையம்