ஒப்பனைக் கலைஞர் பெஞ்சமின் ஐயா

பெஞ்சமின் ஐயா. நாடகத் துறை சார்ந்தோரிற்கு இவரைத் தெரியாதிருக்கமுடியாது. கூத்து, இசைநாடகம், இலக்கிய நாடகம், நவீன நாடகம், நாட்டிய நாடகங்கள் என பெஞ்சமின் ஐயாவின் தொடர்புகள் விரிவுபட்டன.

வேடஉடைகள், ஒப்பனைகள், அரங்க அமைப்புக்கள், காட்சித்திரைகள், தட்டிகள் என அரங்கத்துறைக்கான இவரது பங்களிப்பு நீண்டகாலமாகவே இருந்து வந்திருக்கின்றது. 90வயதினைத் தாண்டி விட்ட இவர் தனது இளந்தாரிக் காலத்திலேயே மேற்குறித்த விடயங்களில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கி விட்டதாகக் கூறுகிறார்.

தனது 90வது வயதில் பெரும் பகுதியை அரங்கத்துறை சார்ந்த விடயங்களில் ஈடுபடுத்திய ஒப்பனைக் கலைஞரான பெஞ்சமின் ஐயா 25ம் ஆண்டளவில் இருந்து தனது நாடகத்துறை சார்ந்த அனுபவங்களை மீட்டுள்ளார்.

ஒப்பனைக் கலைஞர் பெஞ்சமின் ஐயாஅந்தக் காலத்தில் தனது பாடசாலைக் கல்வியை ஐந்தாவது வகுப்புடன் நிறுத்திக் கொண்ட இவர், இயல்பாகவே பாடசாலையில் சித்திரம் கீறும் அனுபவம் இருந்த தகமையுடன் தனது தொழில்சார் பிரவேசத்தையும் மேற்கொண்டிருக்கிறார். இராசா, பிலிப், செல்லையா என்பவர்களுடன் சிறு பையனாகதான் தன் பணிகளைத் தொடங்கினார். முதலில் செய்யத்தொடங்கிய வேலை கோட்கட்டுதல் ஆகும். பாத்திரங்களுக்கு ஏற்ப வேட உடை மேலங்கியை வைத்து ஊசி நூலால் கட்டிவிடுதலாகும். அதற்காக 25 சதத்தை அல்லது 15 சதத்தை கொடுப்பனவாகவும் பெற்றுக் கொண்டதையும் கூறி, அக்கால பொருளாதார நிலைகள் பற்றி விபரித்தார்.

இந்நிலைமைகளினுள் படிப்படியாகச் சொற்ப பணமுதலீட்டுடன் மூன்று திரை, இரண்டு மூன்று வேடஉடைகளுடன் தனியாகத் தனது தொழிலைத் தொடங்கியுள்ளார். அப்போது (30ம், 40ம் ஆண்டுகளில்) ஒப்பந்தப் பணமாக 45 ரூபா வரையில் பெற்றுக் கொள்வதும், அது வாழ்க்கைச் செலவிற்கு எவ்வாறு கட்டுபடியானது என்பது பற்றியும், தனது தொழில் சார்ந்த இவ்வருமானத்துடன் பிள்ளைகளின் கல்வி, அவர்களின் இன்றைய நிலைகள் பற்றியெல்லாம் கூறி பெருமிதம் கொள்ளும் தொழில்சார் கலைஞர் ஒருவரின் அன்றைய வாழ்வின் பெருமிதங்களையும் நாம் குறிப்பிட்டுக் கொள்ளுதல் வேண்டும்.

காணிவேல் கொண்டாட்டங்கள், ஆலயத் திருவிழாக்களில் மேடையேற்றங்கள் என்பன மேலோங்கி இருந்த காலத்தில் பெஞ்சமின் ஐயாவின் மண்டப அமைப்புக்கள், மேடைவிதானிப்புக்கள் புகழ்பெற்றவையாக இருந்திருக்கின்றன. 75அடி உயரப்பந்தல், 40அடி நீள அகலத்தில் மேடை, அதற்கேற்ற காட்சித்தட்டிகள் எல்லாம் சேர்த்து 50ம் ஆண்டளவில் நடைபெற்ற ‘காணிவேல்’ நிகழ்வுகளில் இந்துக் கல்லூரி மைதானத்தில், கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் எனப் பல இடங்களில் மண்டபமும் மேடையும் அமைத்தார்.

தமிழ் நாட்டில் இருந்து இசை நாடகங்கள் கொண்டுவந்து இங்கு மேடையேறிய காலங்களில் அவர்களின் நுட்பங்கள் இவரது தொழிலுக்கு வலுச் சேர்த்திருக்கிறன. பொருட்களை விரிவுபடுத்த அவற்றைப் பார்த்த அனுபவம் கைகொடுத்திருக்கிறது. சாதாரணமாக திரைகளில் வீதிக்காட்சி, மாடிக் காட்சி, காடு என்பன போதுமானவையாக அக்காலங்களில் பாவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டு நாடகங்களின் வருகையின் பின்னர் அவற்றில் சித்திர நுணுக்கங்களும் நுட்பங்களும் ஏற்பட்டிருந்தன. வெட்டுக்காட்டுத் திரை உத்தி இந்த தமிழ்நாட்டு வருகையின் பின்பே ஏற்பட்டதாகப் பெஞ்சமின் ஐயா தெரிவிக்கின்றார். வீட்டுக்காட்சி, நந்தவனம், அரண்மனை எனக் காட்சித் திரைகள் தேவைக்கேற்ப விரிவுபடுத்தும் நிலைமை படிப்படியாகத் தோன்றியுள்ளது.

பெரும்பாலன பாடசாலை நாடகங்களில் ஒப்பனைக் கலை செய்வதற்கு இவரையே நம்பியிருப்பார்கள். இவரும் பணத்தின்மீது மட்டும் கண்ணாக இருக்காது, தனது திருப்திக்காகவும் அழைப்பவரை மதிப்பதற்காகவும் சளைக்காது சென்று பணியைச் செய்தார். யாழ்ப்பாணம் மட்டும் அல்லாது வன்னிப் பிரதேசம், குறிப்பாக மன்னார் போன்ற இடங்களிற்கு எல்லாம் சென்று தன்பணியைச் செய்திருக்கிறார். “நான் கஷ்டம் போனாலும் அதிலை ஒரு மனத்திருப்தி கொள்ளுவன்” எனத் தனது மேற்குறித்த நிலையை எடுத்துக் கூறுகிறார்.

உண்மையில் தொழில்சார் கலைஞராக வாழ்ந்து வருகின்ற பெஞ்சமின் ஐயாவின் மனத்திருப்தியும் அவர் தனது தொழிலில் பெற்ற அனுபவங்களும் ஒன்றை ஒன்று விஞ்சியே நிற்கின்றன. இவரது காலத்து நாடகங்கள், நாடகக்காரர்கள் அவற்றின் வரலாறுகள் என்பவை முக்கியமானவை. குறிப்பாக ஈழத்து நாடகப் போக்குகளின் பெரும்பகுதியை தன் அனுபவங்களால் கண்ட “ஒப்பனைக் கலைஞர்” தான் பெஞ்சமின் ஐயா. இவரது இந்த அனுபவங்கள் இன்னும் விரிவாகப் பகிரப்பட வேண்டும்.

இன்று முதுமையின் முதிர்வில் வாழ்ந்துகொண்டிருக்கும் பெஞ்சமின் ஐயாவை குறிப்பிட்டதொரு கலைஞர் கௌரவிப்பு விழாவிலும் காண நேர்ந்தது. கௌரவிப்பு முடிந்து மேடையை விட்டு இறங்கிய அவர் தனக்குப் போர்த்திய பொன்னாடையையும், முடியையும் கழற்றி உறவினரிடம் கொடுத்து விட்டு “இப்பிடி எத்தனை வேணும்…..! என்னட்டை இல்லாததோ…..!” எனத் தனது அடிமன உணர்வை வெளிக்காட்டினார். அவரது நீண்டகால துறைசார்ந்த அனுபவத்துக்கு கிடைக்கவேண்டிய கௌரவிப்பில் – அதன் பெறுமதியைப் பற்றி – கவனம் எடுத்திருக்க வேண்டுமோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஒரு தொழில்சார் கலைஞரின் மனக்குமுறலுக்குள் தொக்கு நிற்கும் விடயங்கள் எவை! இன்றும் இனியும் தொழில்சார் கலைஞர்களாக இருப்போரிற்கு இவரின் வாழ்வும் அனுபவமும் உளமும் சொல்லும் அர்த்தங்கள் எல்லையற்றவை. பெஞ்சமின் ஐயா பற்றிய இப்பகுதி பலருக்கு அவரை, அவரிடம் தங்கள் முகங்களை ஒப்பனைக்காக விட்டிருந்த காலங்களை நினைவுக்கு கொண்டு வந்திருக்கும். அவ்வளவுக்கு அவரும் ஒப்பனை அறைகளும் பிரிக்க முடியாத நீண்டகால உறவு கொண்டிருக்கின்றது. இது வடபுலத்தில் மட்டுமல்லாது இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பெஞ்சமின் ஐயாவைத் தெரிந்தால் இவ்வாறுதான் தெரியும்.

By – Shutharsan.S

Sharing is caring!

Add your review

12345