கச்சாய் அ.த.க பாடசாலை

கச்சாய் அ.த.க பாடசாலை

1942 வரையில் கச்சாய் பாலாவிக் கிராமங்களிடையே ஓர் அமெரிக்க மிஷன் சிறிய பாடசாலை மட்டுமே இயங்கி வந்தது. இங்குள்ள மக்களில் பெரும்பான்மையோர் சைவசமயத்தவர். மிஷன் பாடசாலையில் கல்வி புகட்டும் இருஆசிரியர்களும் மிஷனைச் சேர்ந்தவர்களாதலால் இங்கு கற்கும் மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். ஆதலால் இங்குள்ள பெற்றோர்கள் சிலர் முன்னின்று சைவப்பாடசாலை திறப்பதற்கு ஆலோசித்தனர்.

இந்து மகாசபையில் அக்காலத்திலிருந்த தலைவர் திரு. இராசரத்தினம் என்பவரின் ஆலோசனையைப் பெற்று பாடசாலை ஒன்றை அமைப்பதற்கான நிர்வாகசபை ஒன்றை உருவாக்கினர். இதில் தலைவர் – க.கணபதிப்பிள்ளை

செயலாளர் – செ.பரராஜசேகரம்

பொருளாளர் – சு.கந்தையா

நிர்வாகசபை உறுப்பினர் – சின்னையா, கந்தையா, புண்ணியர், குமாரவேலு, சிதம்பரப்பிள்ளை, வேலு(ஐயா), முருகேசு
நிர்வாகசபை செயலாளர் செ.பரராஜசேகரம் கச்சாய் வீதியில் தற்போது பாடசாலை அமைந்துள்ள இடத்துக்காக 12 பரப்பு நிலத்தினை நன்கொடையாக வழங்கினார். ஊரிலுள்ள வசதி படைத்தவரின் நிதி உதவிகள் பெறப்பட்டு 1943ம் ஆண்டில் 20’ x 20’ கொண்ட அறையும் 80’ x 20’ கொண்ட மண்டபமும் கட்டப்பட்டு கிடுகினால் வேயப்பட்டது. பின்னர் இந்து மகாசபையின் உதவியோடு கிணறும், மலசலகூடமும் கட்டப்பட்டன. மாணவர்களும் வந்து கல்வி கற்கத் தொடங்கினர். கச்சாய் வடக்கைச் சேர்ந்த க. கணபதிப்பிள்ளை எனும் பயிற்றப்பட்ட ஆசிரியரும் க. நடராசா, ஆ. இராசையா ஆகியோரும் கற்பித்தலில் ஈடுபட்டனர். இக்காலத்தில் இந்துமாசபையின் உதவி நன்கொடை பெறுவதற்காக அரசில் பதிவு செய்யப்பட்டது.
75% மாணவர்கள் இப்பாடசாலையிலும் 25% மாணவர்கள் மிஷன் பாடசாலையிலும் கற்றனர். பயிற்றப்படாத வேறு ஆசிரியர்களும் காலத்திற்கு காலம் கற்பிக்க வந்து போயினர்.

01.09.1947 இல் மிஷன் பாடசாலையை அரசாங்கம் பொறுப்பேற்றது. 01.05.1949 இல் வித்தியாதரிசியின் ஆலோசனையின் படி இந்துப்பாடசாலையும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்பே இருபாடசாலைகளும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயங்கத்தொடங்கியது. பாலர் வகுப்புக்கள் மிஷன் பாடசாலையிலும் மேல்வகுப்புக்கள் தற்போதைய பாடசாலை இருக்கும் இடத்திலும் இயங்கி வந்தன. அப்போது மிஷன் பாடசாலையில் பொறுப்பாக இருந்த P. வேதநாயகம் என்பவரே இணைந்த பாடசாலையின் அதிபராகக் கடமையேற்றார். மாணவர் தொகை அதிகரித்த போதும் 4 ஆசிரியர்கள் மாத்திரமே கற்பித்தனர். பாடசாலையின் வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

01.01.1957 இல் ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று வரத்தொடங்கினர். 03.06.1957 இல் P. வேதநாயகம் இளைப்பாறிச்செல்ல உதவி ஆசிரியரான மு. வேதவனம் என்பவர் பாடசாலையைப் பொறுப்பேற்றார். 04.09.1957 இல் திரு.மு.சி. பதஞ்சலி அவர்கள் அதிபராகக் கடமையேற்றார். அதன் பின்னர் பாடசாலை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெறத்தொடங்கியது. மாணவர் தொகையும் அதிகரிக்க மேல்வகுப்புக்களும் நடாத்தப்பட்டன. 1985 இல் முதன்முதலாக அரச பொதுப்பரீட்சையில் மாணவர்கள் தோற்றினர். இக்காலப்பகுதியிலேயே அதிபர் சி. பதஞ்சலி அவர்களால் பாடசாலைக் கீதம் ஆக்கப்பட்டது.

1985 இல் 100’ x 20’ மண்டபம் அரசாங்கத்தால் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இக்காலப்பகுதியிலேயே வர்த்தகரான கச்சாயைச்சேர்ந்த முருகேசு அவர்களால் 20’ x 20’ கொண்ட அதிபர் நிர்வாக அறையும் பெரிய வெளிக்கேற்றும் போடப்பட்டது. 1960 இல் தெற்கு மண்டபம் விஞ்ஞான அறையாக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கிழக்குப்பக்கமாக 20 x 80’ மண்டபமும் 20’ x 10’ களஞ்சிய அறையும் அமைக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டளவில் மாணவர் தொகை 400 வரை அதிகரித்தது. 06.01.1966 இல் திரு.சி. பதஞ்சலி அவர்கள் மாற்றலாகி தம்பிராசா அவர்கள் அதிபராக வந்தார். இக்காலத்தில் சங்கீத ஆசிரியரான க. குமாரசாமி அவர்களின் ஊக்குவிப்பாலும் ஏனையோரின் முயற்சியாலும் 27’ x 15’ கொண்ட முத்தமிழ்க் கலையரங்கு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 07.07.1968 இல் சி. பதஞ்சலி அவர்கள் மறுபடியும் அதிபராக கடமையேற்றார்.

இதுவரையில் பாடசாலைக்கான விளையாட்டிடம் இல்லாமை பெருங்குறையாக இருந்தது. 1968 இல் பாடசாலைக்கு தெற்குப்புறத்திலுள்ள கனகரத்தினம் என்பவரின் 12 பரப்புக்காணி விலைகொடுத்து வாங்கப்பட்டு செப்பனிடப்பட்டது. 1970 இல் குறித்த விளையாட்டிடத்தின் கிழக்குப்பக்கமாக சின்னப்பொடி வேலு(ஐயா) என்பவரின் முயற்சியால் 4 பரப்புக்காணி நன்கொடையாக (சாம்பசிவம் பெண் ஞானம்பிகை) பெறப்பட்டது. இதற்குப்பின்னர் ஆண்டுதோறும் பெரியளவில் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றது.

மற்றும் கச்சாய் அ.த.க பாடசாலை, வருடந்தோறும் கலைவிழாக்கள், சமயவிழாக்கள், பரிசில்விழா என்பனவும் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

கச்சாய் அ.த.க பாடசாலை கீதம்

கச்சாய் கலாசாலை வாழ்கவே – வாழ்க வாழ்க
கச்சாய் கலாசாலை வாழ்கவே – தினம் தினம் தினம்
கச்சாய் கலாசாலை வாழ்கவே – வாழ்க வாழ்க
கச்சாய் கலாசாலை வாழ்கவே

பெற்றோரை ஆசிரியரை பெருமையோடு வாழ்த்துவோம்
பேணி வித்தை வளர்க்கும் கல்விப் பகுதியாரைப் போற்றுவோம்
( கச்சாய் கலாசாலை … )

செந்தமிழாம் இனிய மொழியைச் சிறந்து பரவச் செய்குவோம்
தேசத்திற்கே தேவையான வேறுகலையபயிலுவோம்
( கச்சாய் கலாசாலை … )

கமலம் பூத்த கழனி சூழ்ந்த கச்சாய் வித்தியாலயம்
கடமையே தன் உடமையாக காலமெல்லாம் வாழ்கவே
( கச்சாய் கலாசாலை … )

மேலதிக விபரங்களுக்கு – http://www.kachgtms.sch.lk/web இணையம்

Sharing is caring!

Add your review

12345