“பக்திப் பண்ணரசு” திரு. கதிர் சுந்தரலிங்கம்

கதிர் சுந்தரலிங்கம்
அன்று! ஒரு காலம்! பல்வேறு தமிழிசை விழாக்கள் கிராமம் தொட்டு நகரம் வரை தாயக மண்ணில் பல்வேறு இடங்களில் நடைபெறும் அந்த நிகழ்வுகள் இன்றும் பலருக்கும் பசுமரத்தாணி போல் நினைவில் இருக்கும் என்பதில் எதுவித சந்தேகமும் இருக்க மாட்டாது. ஆலயங்களில் இரவு இரவாக இயல், இசைநாடகங்களுடன் சேர்ந்த இன்னிசை விழாக்கள் நடைபெறும்! அதனை இப் புலம்பெயர் நாட்டிலிருந்து இன்றும் நினைத்தாலே ஒரு பரவசம் மனதில் தோன்றும். தற்போது கனடா உட்பட மேலைத்தேச நாடுகளில் வாழும் நாம்
அதனைத் தற்போது கடந்த காலத்தின் ஒரு கனவாகவே காண்கின்றோம். அந்த தாயக மண்ணின் இனிமையான பொற்கால வாழ்க்கையின் விழாக்களில் நடக்கும் இன்னிசைக் கச்சேரிகளில் அனேகமாக பல இடங்களில் நடுச்சாமத்தின் பின்பும் கூட “பக்திப்பண்ணரசு” திரு. கதிர் சுந்தரலிங்கம் அவர்களின் இன்னிசைப்பாடல்கள் நடைபெறவுள்ளது என்ற செய்தி இருந்தால் தூக்கக் கலக்கத்தில் இருப்போரையும் ஒரு முறை தட்டி விழித்திருக்கச் செய்யும்.

தென்னிந்திய திரையுலகில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய

” விநாயகனே வெல் வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான்”

அனேகமாக இதுதான் அவரது ஆரம்பப் பாடலாக பல இடங்களில் இருக்கும். சில மணிநேரங்கள் தமது இயற்கையான இனிமையான குரல் வளத்தினால் ரசிகர்களை ஆழமான பரவச நிலைக்கு எடுத்துச் செல்லும். திரு. கதிர் சுந்தரலிங்கம் அவர்களின் இறுதிப்பாடல் அருணகிரிசுவாமிகள் பாடிய

“முத்தைத்தரு பத்தித் திருநகை”

என்ற திருப்புகழாகவே அனேகமாக இருக்கும்.

ஏன்? இந்த ஒழுங்கு என அவரிடம் வினாவினால் “என் சக்திஇ என் குரல்வளம், இயற்கையாக பிறப்பில் உருவான என் திறமை என்னுடையது அல்ல. நான் பிறந்து வளர்ந்த எனது கிராமமான குப்பிளான் கிராமத்தில் எனது வீட்டுக்கு அருகில் உள்ள எங்கள் குல தெய்வம் “கற்கரைக் கற்பக விநாயகரின்” திருவருள் சக்தி எனக்கு அருளாக இருந்து என்னை வழிநாடாத்துகின்றது என்பதை என்னால் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.

அந்த ஆலயத்தில் சங்கீத ஞானம் என்றால் என்ன என்று அறியாத அந்த சிறுவயதில் வாய் திறந்து முதன் முதலில் பாடத்தொடங்கினேன். அவ ஆண்டவன் முன்னிலையில் தேவாரமாகப் பாடத்தொடங்கி, அகில இலங்கையின் பல இடங்களிலும் மட்டுமல்லாமல்,  தமிழ்நாட்டில் சிதம்பரம் தில்லை நடராசர் அரங்கம் என்று பாடி இன்று கனடாவிலும் இதனை இந்த 64 வயதிலும் தொடர்கிறேன். கடந்த சில வருடங்களில் நல்லூர் கந்தன் உற்சவ திருவிழாக்களில் தொடர்ந்து பாடல்கள் பாடும் திருவருள் என் வாழ்வில் பல வருடங்கள் தொடர்ந்தது. அந்த முருகனை நினைத்து என் பாடல்களை முடிக்கின்றேன் என்கின்றார்”.

அகில இலங்கையின் பட்டி தொட்டியெல்லாம் தமது இயற்கையான அற்புதமான குரல் வளத்தினால் இன்னிசைப் பாடல்கள் பாடிய திரு. கதிர் சுந்தரலிங்கம் ஈழ மண்ணில் குப்பிளான் கிராமத்தில் பிறந்தார். ‘இசை’ என்பதனைப் பல்கலைக்கழகத்தில் படித்துத் தேறியவர் என்று இல்லை. ஆனால் இசைப்  பல்கலைக்கழகத்தில் முறைப்படி பயின்று முன்னிற்ப்பவர்களை விட தமக்குக் கிடைத்த இயற்கையான குரல் வளத்தினால் ரசிகர்களை மயங்க வைப்பவர்.

அவரின் குடும்ப குல தெய்வம் குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயமே அவர் பாடல்களின்  ஆரம்பம். குப்பிளான் கிராமத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையில் மிகச் சிறு வயதில் கல்வி பயின்று கொண்டிருந்த காலத்தில் இயற்கையாக உள்ள இவரது திறமையினை இனம் கண்டு கொண்டவர் அவரது ஆரம்பப் பள்ளி ஆசான் திரு. சொக்கலிங்கம் ஆசிரியர் அவர்கள். பாடசாலை நாடகத்தில் ஒரு அழகான சிறுவனாக இருந்த இவரை திருஞான சம்பந்தர் வேடத்திலும், முருகக் கடவுள் வேடத்திலும் பாட்டுப் படி நடிப்பதற்கு இவ் ஆசிரியர் நெறிப்படுத்தினார். அந்தக் காலத்தில் கிராமியக் கூத்துக் கலையினை தமது குப்பிளான் கிராமத்தில் நடாத்திக் கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த நாடகக் கலைஞர் திரு. பீதாம்பரம் அவர்கள் அந்தக் கிராமிய நாடகங்களில் சிறுவனாக இருந்த திரு. கதிர் சுந்தரலிங்கம் அவர்களை பாட்டுப் பாடி நடிக்க வைத்தார்.

1961  ம் ஆண்டு, யாழ் முற்ற வெளியில் நடந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தில் சிறுவன் கதிர் சுந்தரலிங்கம் பாடிய பாடல் யாழ் நகர் எங்கும் ஒலித்து சகலரின் மனதையும் தொட்டு நின்றது.

“மானமுள்ள தமிழா வாடா

மார் தட்டி முன்னே வாடா

ஈனர் செய்யும் இன்னல் கண்டு

இன்னமும் தாமதம் ஏனோ”

1967  ம் ஆண்டு யாழ் நாச்சிமார் கோவிலடியினைச் சேர்ந்த “இசைவாணன்” திரு. எம். கண்ணன் அவர்களின் இன்னிசைக் கோஷ்டியில் சேர்ந்து பாடத் தொடங்கியதே அகில இலங்கை எங்கும் இவரது குரல் வளம் பிரபல்யமாவதற்க்கு வலி காட்டியது எனலாம். அன்று பிரபல்யமாக இலங்கையில் இருந்த கண்ணன் கோஷ்டியில் இலங்கையின் முன்னணிப் பாடகர்களான திரு. அமுதன் அண்ணாமலை, சுண்டிக்குளி ஜே. ஆர்.  சௌந்தரம் ஆகியோரும் சேர்ந்து பாடியிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.

சினிமா, பக்திப் பாடல்களை இலங்கையின் தமிழ்ப் பகுதிகளில் மட்டுமல்ல, சிங்களப் பகுதிகளில் நடந்த தமிழர்கள் விழாவில் பாடிய காலங்களில் தொடர்ந்து ஒவ்வொரு இரவும் வெவ்வேறு இடங்களில் இன்னிசைக் கச்சேரிகளில் பாடல் பாட வேண்டிய நிலைமை இருக்கும். யாழ் குடாநாட்டில் சில நேரங்களில் ஒரு இரவில் இரண்டு அல்லது மூன்று இடங்களிலும் இவர்களின் இன்னிசைக் கச்சேரி நடக்கும். அங்கு இவரது பாடலை அந்த திறந்த வெளியில் கேட்டு ரசிக்க என ஒரு ரசிகர் கூட்டம் அலைமோதும். குறிப்பாக தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய உற்சவ காலத்தில் பல தடவைகளில் இவரது பக்திப் பாடல்களின் இன்னிசை நிகழ்வு நடைபெற்றதும் அதன் ரசனையில் மூழ்கியதும் அவ் ஆலய பக்தர்களுக்கு இன்றும் நினைவிலிருக்கும் விடயமாகும்.சினிமாப் பாடல்களை அதிகமாகப் பாடினாலும் அவரது குரல் வளம் என்பது பக்திப் பாடல்கள்இ தெய்வீகப் பாடல்களுக்கே மிகவும் பொருத்தமானதாகவும் அந்த தெய்வீகப் பாடல்களின் ரசனை என்பது கேட்பவர்களை பக்திப்பரவசத்திற்கே இழுத்துச் செல்வதாக இருந்தது.

1974 ம் ஆண்டு பக்திப் பாடல்களுக்கு என தனியாகவே தனது தலைமையில் ஒரு இன்னிசைக் கோஷ்டியினை உருவாக்கி ஈழத் தமிழ் மண்ணின் எராளமான ஆலயங்களில் தெய்வீக பக்திப் பாடல்களை மட்டும் பாடி வந்தார்.

தாயக மண்ணின் இன ஒடுக்கல் பிரச்சினை காரணமாக தமிழ்நாடு சிதம்பரத்தில் வசித்த 1991 – 2001  ஆம் ஆண்டு காலத்தில்இ இவரது பாடல்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத்துறை மாணவர்கள் பக்க வாத்தியங்களை இசைத்திருந்தனர். சிதம்பரத்தில் 1995 ஆம் ஆண்டு ஒருமுறை நடந்த விசேட கும்பாவிஷேக விழாவில் இவரது பக்திப் பாடல் நிகழ்ச்சி சிதம்பரம் வாழ் பகதர்களின் மனதினைத் தொட்டிருந்தது. அங்கு பத்திரிகையில் வெளிவந்த செய்தியாகும்.

ஈழத்தின் பட்டி தொட்டியெல்லாம் இன்னிசை மழை பொழிந்து தமிழ்நாடு சிதம்பரத்திலும் சுமார் பத்து வருடங்கள் இன்னிசை நிகழ்ச்சி நடாத்திய “பக்திப் பண்ணரசு ” திரு. கதிர் சுந்தரலிங்கம் அவர்கள் தற்போது கனடாவில் வாழ்ந்து வருகின்றார். தமது ஓய்வு பெறும் காலத்திலும் இந்தக் கலைஞனின் கலைப்பணி, பல ஆலய நிகழ்ச்சிகள், விழாக்களில் கனடாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ந்த வண்ணமேயுள்ளது.

இவரால் குப்பிளான் மண் பெருமையடைகிறது.

By – Shutharsan.S

நன்றி – புதிய குப்பிளான் இணையம்

Sharing is caring!

Add your review

12345