கர்நாடக சங்கீத மேதை இசைமணி வே. நடேசன்

இசைமணி வே. நடேசன் வாழ்க்கையில் புண்ணியம் செய்து இருந்தால் தான் சிலபேரை நம்மால் பார்க்கமுடியும், அவர்கள் வாழ்க்கையை அறியமுடியும். நாம் பார்க்கின்ற மனிதர்கள் சத்புருஷராக இருந்தால் நம்முடைய அறிவும் பளிச்சிடும். அவரோடு அடிக்கடி பேசக்கூடிய பழகக்கூடிய சந்தர்ப்பங்கள் கிடைத்தால் நம்மை நாம் உயர்த்திக் கொள்ள முடியும். பலவிஷயங்களை அவர் மூலம் கிரகித்துக் கொண்டு நம் வாழ்வை நெறிப்படுத்திக் கொள்ள முடியும். ‘தைத்திரிய உபநிஷதம்’ சொல்கிறது. “உங்கள் கடமை என்ன, குறிப்பிட்ட சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பவை பற்றி உங்களுக்குச் சந்தேகம் எழுமானால் சான்றோர்களைப் பின்பற்ற வேண்டும். ஆழ்ந்து சிந்திக்கின்ற, மன ஒருமைப்பாடு மிக்க,
சுதந்திரமான கோணல் புத்தி இல்லாத நல்வழியில் நடக்கின்ற அந்தச் சான்றோர்கள், எந்தெந்த விஷயங்களில் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படி நீங்களும் செயல்படுங்கள்”

மேலே சொன்ன இந்த தைத்திரிய உபநிஷத வாக்கியப்படி நடந்தவர்தான் முன்னைநாள் தென்மராட்சி இசைக்கலைமன்ற ஸ்தாபகரும் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி இசை ஆசிரியராகவும் விளங்கிய இசைமணி வே. நடேசன்ஆவார். அன்னாரின் 25 ஆவது நினைவுதினம் பெப்ரவரி 9 ஆம் திகதியாகும்.
கலையையே தன் தவமாகக் கொண்டு, கலைக்கொரு கருவறை அமைத்து, ஆடரங்கின் அம்பலவாணனாய் நற்குருவாய், நல்லாசானாய், நண்பனாய், காய்தல் உவத்தலற்ற கலைஞனாய், காலம் கடந்தும் கலைவாழுதற்கு வகை செய்தோனின் விருட்சத்தில் விழுதுகளாய் நின்று மகிழ்வுற்று வாழுகின்ற கலைஞர்கள் எழுத்திலடங்கா.

உலகம் போற்றும் உயர்ந்தவர்கள், உன்னதமானவர்கள் வரிசையிலே ஈழத்துக்குப் பெருமை தேடித்தந்தவர்களில்-இசைமணி’ நடேசன் அவர்கள் முதன்மையானவர். மேலும்இ கலைகளைப் பொறுத்த வரையில் பாரதத்திற்கு ஈழம் சளைத்தது அல்ல சமமானது என்ற வரலாற்று முத்திரையைப் பதியவைத்தவர் நடேசன் அவர்கள் என்றால் மிகையாகாது.

ஈழநாட்டின் வடபுறத்தே, செந்தமிழ் கொஞ்சி விளையாடும் தமிழர் தாயகம் யாழ்ப்பாணம். இங்கே தமிழும், சைவமும் இரு கண்களெனப் போற்றப்பட்டு வளர்ச்சி பெற்றது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர், பண்டிதர் சிவபாத சுந்தரனார், பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை போன்ற மகான்களால் சைவமும், தமிழும் வளர்ந்தோங்கியது. இக்குடாநாட்டில் அமைந்துள்ள நீர்வேலி என்னும் கிராமம் வரலாற்றுச் சிறப்பும், பண்பும் ஞானச் செழிப்பும் கலையும் கவினும் கொண்டு விஞ்ஞானிகளையும் மெய்ஞ்ஞானிகளையும் பண்டிதர்களையும், சித்தர்களையும், சமூக சேவையாளர்களையும் தலை சிறந்த கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் வாழையடி வாழையாக ஈன்றெடுத்த பெருமை பெற்றது. இப்பேர்ப்பட்ட நீர்வேலியூரில் சிவசங்கரப் பண்டிதரின் வழித்தோன்றலான சின்னத்தம்பி வேலுப்பிள்ளைக்கும் நாச்சிப்பிள்ளை அம்மையாருக்கும் மகனாக 20.12.1920 ஆம் ஆண்டு இசைமணி’ நடேசன் அவர்கள் பிறந்தார்.

இவர் தமது ஆரம்பக்கல்வியை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியிலும் உயர்கல்வியை கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியிலும் கற்றுயர்ந்தார். இதன் பின்னர் தன் கர்நாடக சங்கீதத்தின் மேற்படிப்பை மேற்கொள்வதற்காக தென்னிந்தியாவின் தமிழ் நாட்டிற்குச் சென்று சிதம்பரத்தில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஐந்து வருடங்கள் குருகுலமாகப் படித்து ‘இசைமணி‘ , ‘சங்கீதபூஷணம்‘ ஆகிய பட்டங்களைப் பெற்றார். பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது முக்கியமாக இராமநாதபுரம், மதுரை சங்கரசிவம், மதுரை சோமசுந்தரம், ஆலத்தூர் சகோதரர்கள், பழனிசுப்பிரமணியம்பிள்ளை, இராமநாதபுரம் கிருஷ்ணன், இராமநாதபுரம் வேணு கோபால், இராமநாதபுரம் சமஸ்தானம் துரை அவர்களோடு நெருக்கமாகப் பழகி அவர்களின் அன்பிற்கும் மதிப்பிற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக விளங்கினார்.

தமது கர்நாடக சங்கீத மேற்படிப்பை முடித்த நடேசன் அவர்கள் 1948 ஆம் ஆண்டு ஈழநாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள யாழ்/வண்ணை நாவலர் பாடசாலையில் இசை ஆசிரியராக தமது முதற் பணியைத் தொடங்கினார். இதன்பின்னர் சாவகச்சேரியில் அமைந்துள்ள டிறிபேக் கல்லூரியில் இசை ஆசிரியராக 31 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினார்.

‘இசைமணி’ நடேசன் அவர்கள் ஆனைக்கோட்டை பேராயிரவர் உடையார் மரபில் உதித்த கதிரவேலு விதானையார் சிவக் கொழுந்து தம்பதிகளின் மகளான மகேஸ்வரி என்னும் நல்லாளை இல்லறத் துணைவியாக மணம் செய்து மூன்று பெண் பிள்ளைகளுக்கும் ஐந்து ஆண்பிள்ளைகளுக்கும் தந்தையானார். இவர் நுணாவில் கிழக்கில் கல்வயல் வீதியில் ஓர் அழகிய மனையை அமைத்து சாவகச்சேரியை தன் உறைவிடமாகக் கொண்டு சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார்.

இங்கு வாழ்ந்து வந்த காலப்பகுதியில் தென்மராட்சியில் நுண்கலைகளை வளர்க்கும் நோக்கத்துடன் ஓர் இசைக்கலைமன்றத்தை 1955 ஆம் ஆண்டு பதினொரு அங்கத்தவர்களுடன் ஆரம்பித்தார். இவ் இசைக்கலை மன்றத்தில் பல மாணவஇ மாணவிகள் மிடற்றிசைஇ வயலினிசை, மிருதங்க இசை, பரதநாட்டியம் போன்றவற்றை நன்கு கற்று வட இலங்கை சங்கீத சபையினால் நடாத்தப்படுகின்ற தேர்வுகளில் நன்கு பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இத்துடன், இசைமணி நடேசன் அவர்கள் காலத்துக்குக் காலம் இசை விழாக்களை வாரி வணநாத சிவன் கோயில் முன்றிலில் வனப்பான பந்தல்களைப் போட்டு, அழகான மேடைகளை அமைத்து தரமான இசை நடனக் கச்சேரிகளையும் நாதஸ்வர கச்சேரி, வில்லுப்பாட்டு, நாடகங்கள் என்பவற்றைத் தொடர்ந்து பத்து நாட்கள் வரை நயம்பட நடத்தி தென்மராட்சி மக்களிடையே ஓர் உன்னதமான இசை விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய ஓர் இசை மேதையாவார். இவ்விசை விழாவை 1980 ஆம் ஆண்டு வரை திறம்பட வாரிவணநாதர் முன்றிலில் நடாத்தி வந்தார். இவ் இசைக் கலைமன்ற வகுப்புக்களை சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மிகவும் தேர்ச்சி பெற்ற வித்துவான்களை வரவழைத்து வாய்ப்பாட்டிற்கு இசைமணியும் கல்வயலூர் ‘சங்கீதபூஷணம்’ எஸ்.விநாசித்தம்பியும், வயலினுக்கு ‘சங்கீதபூஷணம்’ சோமாஸ்கந்த சர்மாவும் சங்கீதவித்துவான் சர்வேஸ்வரசர்மாவும், மிருதங்கத்திற்கு அடையாறு மிருதங்க வித்துவான் ஏ.எஸ்.இராமநாதனும், பரதநாட்டியத்திற்கு யாழ்கலைமன்ற பரதநாட்டிய ஆசிரியை (டபிள்யூ.குமாரசாமியின் மகள்) வழுவூர் இராமையா பாணிக்குப் பெருமை சேர்த்தனர்.

இத்துடன், ‘கலாபூஷணம்’, ‘நாட்டியக்கலை மணி’ திருமதி திரிபுரசுந்தரி யோகானந்தமும் செல்வி ஜானகி கோபால் குமாரசாமியும் இங்கு வருகை தந்து வகுப்புக்களை நடாத்தி இசைக்கலை மன்ற மாணவிகளான செல்வி பிறீனி சொலமன், செல்வி நல்லினி கனக சபாபதி, செல்விகள் கௌரி காயத்திரி இராசையா, கிரியா, பரமசாமி, .மஞ்சுளா சிவஞானம் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றத்தை திறம்பட நடாத்தினார்கள்.

மேலும், ‘இசைமணி’ நடேசன் அவர்கள் இந்தியாவிலிருந்து ஓதுவார் பி.ஏ.எஸ். இராஜசேகரனை இம்மன்றத்திற்கு வரவழைத்து மாணவ, மாணவிகளையும் கல்லூரி ஆசிரிய, ஆசிரியைகளையும் பண்ணுடன் தேவாரம், திருவாசகம் பாடும் பயிற்சியைப் பயிற்றுவித்தார்.

‘இசைமணி’ நடேசன் அவர்களின் முதன்மை மாணவிகளாக திகழ்ந்தவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்த காலம் சென்ற வ.ந.நவரத்தினத்தின் பாரியார் ரகுபதி, ‘சங்கீதபூஷணம்’ திருமதி பூமணி இராஜரட்ணம், காலம் சென்ற ‘சங்கீதபூஷணம்’ மோகனாம்பிகை கணேசன் ஆகியோர் ஆவர்.

பண்ணும், பரதமும் தமிழ் மக்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருப்பது யாவரும் அறிந்ததே. எல்லாம் வல்ல இறைவனையும் தன் யாழிசையால் மயக்கியவன் அந்த சிவபக்தனாகிய இராவணன். மேலும், சுந்தரமூர்த்தி நாயனார் இறைவனைக் கண்டு யாது செய்வது என்று கண் கலங்கி நின்றபோது இறைவனே சுந்தரமூர்த்தி நாயனார் பாடுவதற்கு ‘பித்தா’ என்று அடியெடுத்துக் கொடுத்தார். மேலும், அருணகிரிநாதருக்கு முருகக் கடவுளே பாடுவதற்கு அடியெடுத்துக் கொடுத்தார். இதேபோன்று திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள் யாவரும் தம் சங்கீத நாதத்தினால் இறைவனைப் பாடி மகிழ்ந்ததோடு திருக்கோயில்களைத் திறக்கவும், மூடவும் பாடியிருக்கின்றார்கள்.

சங்கீதம் என்பது வெறும் சப்தம் அல்ல. அதனை எங்கள் முன்னோர்கள் வகுக்கும்போதே இயற்கையை நன்றாகக் கூர்ந்து, அவதானித்த பின்னரே வகுத்தனர். மேலும், சூழலை வைத்தும் பறவைகளையும் விலங்குகளையும் உன்னிப் பார்த்து ஆராய்ந்து சங்கீதத்தின் அடித்தளத்தை அமைத்தார்கள் நம்முன்னோர்கள்.

மேலும், எங்களைச் சுற்றியுள்ள இயற்கை எந்நேரமும் இசையிலேயே லயித்திருக்கின்றது. பறவைகள் பாடுகின்றன. வண்டுகள் ரீங்காரத்துடன் மலர்களில் பாடுகின்றன. ஆறுகள் ஓயாது பாடிக் கொண்டிருக்கின்றன. விலங்குகள் பாடுகின்றன. காற்றுப் பாடுகின்றது. வானம் கூடப் பாடுகின்றது இடிமின்னலுடன். ஆகவே எல்லாமே இயற்கையில் பாடுகின்றன.

மேலும், இயற்கையோடு ஒன்றிப்பாடுதலே கர்நாடக சங்கீதத்தின் சிறப்பாகும். இதை உணர்ந்து பாடினால் சங்கீதம் புதுமெருகுபெறும். அப்பேர்ப்பட்ட சங்கீதம் நாட்டிற்கும் நமக்கும் நன்மையளிக்கும்.

‘இசைமணி’ நடேசன் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட இசைக் கலைமன்றம் பலதரப்பட்ட கலைஞர்களுக்கு நிழல்தரும் மரமாக விளங்குகின்றது. இன்று தென்மராட்சியில் இசையின் புகழ் பெற்று விளங்குபவர்கள் அநேகர் இசை மணியால் உருவாக்கப்பட்டவர்களே ஆவர். மேலும், இவரின் மாணவர் உலகளாவிய ரீதியில் இசையில் பிரபல்யம் பெற்று விளங்குகின்றனர்.

இசை மணி நடேசன் அவர்கள் கொழும்பு சட்டக்கல்லூரி நவராத்திரி விழாவிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலி கலைஞராகவும் பாமாலை பாடும் பாடகராகவும் தியாகராஜா சுவாமிகள் ஆராதனையை காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்திலும் யாழ்.ரசிக ரஞ்சனசபா, யாழ்.சங்கீத சபைகளிலும் பல மேடைக் கச்சேரி செய்து புகழ் பெற்றார்.அத்துடன் இன்று சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி இசை ஆசிரியர்களாக “கலாவித்தகர்” தியாகேஸ்வரி சிவநாதனும், கலாவித்தகர் திருமதி புஷ்பா துரைசிங்கமும் விளங்குகிறார்கள்.

‘இசைமணி” நடேசன் அவர்களின் கலைப்பணியைப் பாராட்டி காலம் சென்ற அரசாங்க அதிபர் ஸ்ரீகாந்தா மற்றும் முன்னைநாள் யாழ். அரசாங்க அதிபராக விளங்கிய லயனல் பெர்னாண்டோ ஆகியோர் பற்பல உதவிகளை இவருக்குச் செய்திருக்கிறார்கள்.

உண்மையிலேயே இசைமணி நடேசன் அவர்கள் இந்நாட்டிலே ஒரு தலை சிறந்த கலைஞராகவும் , தெளிந்த அறிஞனாகவும் உயர்ந்த பண்பாளனாகவும் பாசமிகு தந்தையாகவும் முதன்மையான மூத்தோனாகவும் நம் தமிழ் இனத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்து யாவரின் நெஞ்சிலும் அவர் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டார்.

ஆயினும் ஒரு குடும்ப விருட்சமாக பாசத்தின் வேராக நின்று நெடு நிழல் பரப்பி கலைஞர்கள், மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள் யாவருக்கும் ஒரு வழிகாட்டியாக வாழ்ந்த இசைமணி அவர்கள் அருள்மிகு சாவகச்சேரி வாரிவணநாதர் சிவன் கோயிலின் வடக்கு வீதிக்கு மறுபக்கத்தில் காணியொன்று பெறப்பட்டு இசைக்கலை மன்ற மேடை அமைத்துக் கொண்டு மண்டபம் கட்டும் நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அருள்மிகு வாரிவணநாதர் பெருமானின் இணையடியை 15.01.1982 வெள்ளிக்கிழமை ஸப்தமி திதியில் சென்றடைந்தார்.

“இசைமணி” நடேசன் அவர்கள் சிவபதமடைந்து இன்று 25 ஆண்டுகள் சென்று விட்டாலும் அவரின் மனைவி, பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் யாவரும் ஓர் பாய்மரம் சாய்ந்த ஓடம் போல் நட்டாற்றில் திசை மாறி நின்று தவிக்கின்றனர். யோகர் சுவாமிகள் கூறியது போல “எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்” என்ற அவரின் வாக்கு நமக்கு ஓரளவு நிம்மதியை அளிக்கின்றது.

“இசைமணி” இவ்வுலக வாழ்வை தமது 62 ஆவது வயதில் நீத்தாலும் அவருடைய கலை அம்சம் நிலையம்சமாகி நீடூழி வாழும் என்பது நிஜமானதே.

By – Shutharsan.S

நன்றி : கலாபூஷணம் செல்வத்தம்பி மாணிக்கவாசகர்
நீர்வேலி இணையம்

Sharing is caring!

Add your review

12345