[:ta]கற்கரை கற்பக விநாயகர்[:en]Katkarai Katpaka Vinayagar[:]

[:ta]

பல நூற்றாண்டு வரலாற்றுகள் பெருமை கொண்ட குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் ஆலய வரலாற்றை இங்கு தருகின்றோம். இப்பகுதியானது 1973 ஆம் ஆண்டு திரு.கதிரவேலு ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்டது. கிட்டத்தட்ட 35 வருடங்கள் முற்பட்ட பகுதியில் எழுதப்பட் படியால் இந்த வரலாறு முற்றுப் பெறவில்லை. 1973 இல் இருந்து 2010 ஆண்டு வரலாறு எழதப்பட வேண்டியுள்ளது. நாட்டின் போர் காரணமாக எமது கிராம மக்கள் பல இன்னல்களை அனுபவித்தனர். பலர் பல நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். இன்று பல நாடுகளில் வாழ்கின்றனர். ஆனாலும் எமது மூதாதையர்கள் தொன்று தொட்டு வாழ்ந்த அம் மண்ணின் வரலாறு மறக்கப்படக்கூடாது. அது பதியப்பட வேண்டும். எமது இளம் சமுதாயமும் எமது மண்ணின் வரலாற்றை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

கற்கரைக் கற்பக விநாயகனடி தொழ
அற்புத மானநல் வாழ்வது வருமே.

விநாயகப் பெருமான் துணை கொண்டு, இந்த ஆலயம் தொன்றிய வரலாற்றினை ஓரளவு ஆராய்ந்து அறிந்து எழுதுவதற்கு விரும்பினேன். ஆனால் வரலாற்றினை நன்கறிந்த கற்றோரும் மற்றோரும் மறைந்து விட்ட காரணத்தினால் சரியாக அறிய முடியாவிட்டாலும், எம்பெருமான் அற்புதத்தை அடிக்கடி பலரும் பேசிக் கொள்வதால் கற்கரை கற்பக விநாயகன் அருள்கொண்ட அண்ணலே என்பதை துணிந்து கொண்டதோடு, அவர் மூர்த்தியாக அமைந்த கதையை முதியவர் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் தொடங்கி இற்றைக்கு சில ஆண்டுகள் வரை எம்மூரவர் சிலர் மன்னார் (முன்பு மாதோட்டம்) வியாபாரிகளாக இருந்தனர். மாதோட்டம் என்னும் பெயர் சரித்திர காலப் பெயராகவும், நாயன்மார் வாய்ச் சொல்லாகவும் வந்திருப்பதை கற்றோர் அறிவர். வீதிகள், வாகனங்கள் இன்றிப் பிராயண வசதிகள் அற்ற அக்காலப் பகுதியில் இங்கிருந்து கால் நடையாகக் கொழும்புத் துறை சென்று, அங்கே தோணியேறிப் பூநகரி துறையில் இறங்குவார்கள்.அங்கிருந்து செம்பன் குண்டு, பல்லவராயன் கட்டு, முழங்காவில், வெள்ளாங்குளம், இலுப்பை கடவை, ஆத்தி மூட்டை, பாப்பா மூட்டை வழியாக மாந்தை சென்று வியாபாரம் செய்து கால் நடையாக வீடு திரும்புவார்கள். அக்காலத்தில் சங்ககாலத்தில் கூறப்பட்ட ஆறலை கள்வர் கூட்டம் கூட்டமாக நாடுகளுக்குள் மறைந்து வழிப்பறி செய்து வாழ்ந்தனர்.

எம்மூர் பெரியார் அடுகாஞ்சி, படுகாஞ்சி என்ற இரு சகோதரர்கள் நடைப்பயணம் செய்த போது வழிப்பறி செய்வோர் அவர்களை மறித்து தலைச்சுமையாக கொண்டு செல்பவற்றை பறித்து துன்புறித்தனர். சகோதரர் இருவரும் தாமும் அவர்களோடு சேர வந்ததாக கூறித் தம் பொருட்களை காப்பாற்ற முனைந்தனர். அவர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு உணவு சமைத்தும், காவல் காத்தும் சில மாதங்கள் கழித்தனர்.ஒரு நாள் இரவு கொள்ளை பொருள்களை அள்ளிக் கொண்டு இருவரும் அவர்களிடமிருந்து தப்பி ஓட்டமும் நடையுமாக வந்து ஊரை அடைந்தனர். கொள்ளைப் பொருட்கள் குடும்பத்துக் காவதென்றெண்ணி, அதனை ஆலயம் அமைக்க தீர்மானித்தார்கள். இதன்போது ஆலயம் அமைந்த இடத்திலே தலையில் கொண்டு வந்த பொருட்களை இறக்கி வைத்துக் களைப்பாறினார்கள். அச்சமயம் கொள்ளை கூட்ட தலைவன் குதிரையில் வந்து அவர்களை கைது செய்து கொள்ளைப் பொருட்களை தூக்க முயன்றான். கலக்கமடைந்த சகோதரர் விநாயப் பெருமானை வேண்டினர். கொள்ளைப் பொருட்கள் தூக்க முடியாதனவாகிக் கல்லாக தோற்றமளித்தன.கொள்ளைத் தலைவன் மனம் மாறி அந்த இடத்திலே ஆலய வழிபாடு செய்து தன் இழி தொழிலையும் விட்டான். இந்த திவ்விய இடமே இந்த ஆலயத்தின் இருப்பிடமாகும்.

கொள்ளைத் தலைவன் கும்பிட்ட கோயில் கொட்டிலாக இருந்து பக்தர்கள் பலரைத் தன்னிடம் ஈர்த்தது. நாளடைவில் வளர்ச்சியடைந்து பிரம்ம சிறி பொன்னையா குருக்கள் பரம்பரையினரை அர்ச்சகராக கொண்டு வளர்ந்தது.அவர் காலத்தில் அவரின் மருமகன் செல்லையா குருக்கள் (காலம் சென்ற வைத்தீஸவரா வித்தியா சாலை ஆசிரியர் சுந்தர சர்மாவின் மைத்துணர் எடுத்த பிரயாசையால் காலம் சென்ற வ.வைத்திலிங்கத்தின் தந்தை ஆ.வல்லிபுரமும் ஊரவர்களும் சேர்ந்து மண்டபம் அமைத்துக் கும்பாபிசேகம் செய்தனர்.

திரு வ.வைத்திலிங்கத்தின் அயரா உழைப்பினாலும் அவருக்கு துணையாக நின்று தொண்டாற்றிய திரு ந.கந்தையா, தலைமை ஆசிரியர், திரு.த.ஜயாத்துரை தலைமை ஆசிரியர், திரு.வ.பண்டிதரின் பெருமுயற்சியாலும் ஆலய பரிபாலன சபை உருவாகி ஆலய வளர்ச்சிக்கு இன்று வரை அரும்பணிகள் புரிகின்றது. திரு.வைத்திலிங்கம் தம் பொருளை ஆயிரக் கணக்கில் அளித்து ஆலயம் திருத்தி 1957ம் ஆம் ஆண்டில் கும்பாபிசேகம் செய்வித்தார்.

திரு.ந.கந்தையா தமது அரும் பொருள் ஈந்ததுடன் மக்களின் பணத்தையும் சேர்த்து மண்டபம் திருத்தி மகா சங்காபிசேகம் செய்வித்தார். திரு.த.ஜயாத்துரை கடலோடி மலாய சென்று பணம் சேர்த்து ஆனைமுகனின் அழகிய உருவம் ஒன்றை அளித்ததுடன் எழந்தருளி வீதி வர சகடை உருளியும் தம் பொருளால் உதவினார்.

நாளடைவில் ஆலயத்தின் நவக்கிரக மண்டபமும், விஸ்ணு, சுப்பிரமணிய நடராசா திருவுருவங்களும் அவர்களுக்கு தனித்தனி மண்டபங்களும் அமைக்கப்பட்டன. இன்று கோயில் அழகாக தெரிகிறது. மூலஸ்தானமும் வசந்த மண்டபமும் வேறு சில பகுதிகளும் புரணமைக்கப்பட்டு, நிகழும் பரிதாபி வருடம் தை மாதம் 19ம் நாள் கிரியாரம்பமும் 23ம் நாள் (5-2-1973) தொடக்கம் மகா கும்பாபிசேகமும் 48ம் நாளன்று சகஸ்ரச தசங்காபிகேமும் நிகழ இருக்கின்றன. புதுக்கலையுடன் கண்கொள்ளா கவின் அழகு கொண்டு ஆலயம் விளங்குகிறது.

ஆலய அர்ச்சகர் சிவ சிறி.ஜ. குமாரராசாக் குருக்கள் தாடி வளர்த்து ஆலயத்தின் புனருத்தாரண வேலைகளை மேற்கொண்டு தவமிருப்பவர். ஊரவரை நாடி உதவி வேண்டி அரும்பாடு படும் அவருக்கும் ஆலய பரிபாலன சபைக்கும் குப்பிழான் மக்கள் நன்றியுடையவர்களாவார்கள். கருணைக் கடவுளாகிய கற்பரை கற்பக விநாயகன் திருவருள் நமக்கெல்லாம் கிடைப்பதாக.

By – Shutharsan.S

நன்றி- திரு. கதிரவேலு ஆசிரியர்

http://www.kuppilanweb.com இணையம்[:]

Sharing is caring!

Add your review

12345