கலாநிதி திருநாவுக்கரசு

கலாநிதி திருநாவுக்கரசு

கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் விரிவுரையாளரான கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு (தோற்றம் – 24.09.1950) அவர்கள் அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நல்லூர், இல. 84,செட்டித்தெருவை வாழ்விடமாகவும் கொண்டுள்ளார். இலக்கியம் படைப்பதிலும், நாடகம் நடிப்பதிலும் ஆற்றல் கொண்ட கலாநிதி திருநாவுக்கரசு அவர்கள் கலைமாணி, முதுகலைமாணி (தமிழ்), பட்டப்பின் கல்வி டிப்ளோமா, முகாமைத்துவ டிப்ளோமா, முதுகல்விமாணி (எம்.இ.டி), சைவப்புலவர், பண்டிதர், கலாநிதி (தமிழ்), இலங்கை அதிபர் சேவை தரம் -2, இலங்கை கல்வி நர்வாக சேவை வகுப்பு III ஆகிய பட்டங்களை கொண்டவர்.

சிறு வயதிலிருந்தே நாடகம், பேச்சு, எழுத்து ஆகிய துறைகளில் ஆற்றல் மிகுந்தவராக விளங்கும் இவர் கவிஞர் க. வ. ஆறுமுகத்தினுடைய “அடைப்புக்குறிகள்“, “பக்க வாத்தியம் இல்லாத பாட்டுக் கச்சேரி” ஆகிய நூல்களை பதிப்பித்துள்ளார். மற்றும் செய்யுள் தொகுப்பு, டானியலின் எழுத்துக்கள் ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். “டானியலின் எழுத்துக்கள்” என்னும் இவரின் ஆய்வு நூலுக்கு வடக்கு கிழக்கு மாகாண அமைச்சின் பரிசும், இலங்கை இலக்கியப் பேரவையின் பரிசும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் ஞாபகார்த்தப் பரிசும் கிடைக்கப் பெற்றது. நூற்றுக்கு மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ள இவர் பல நாடகங்களை எழுதியும், நெறியாள்கை செய்தும் உள்ளார். “பூதத்தம்பி” இசை நாடகத்தை புதுவடிவில் கலாநிதி திருநாவுக்கரசு எழுதியுள்ளார்.

கவிதை எழுதி அரங்குகளில் ஆற்றுகைப்படுத்தி வரும் இவர் 2005ம் ஆண்டு நல்லூர் பிரதேச செயலக கலாசாரப் பேரவை நடாத்திய பெருவிழாவில் நடைபெற்ற கவியரங்க நிகழ்ச்சிக்குத் தலமை தாங்கி பலரின் பாராட்டுதலைப் பெற்றுள்ளார். பல அரங்குகளில் அறிவியல் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகின்றார். 2006 ம் ஆண்டு கொழும்பு தமிழ் சங்கம் நடாத்திய மரபுக் கவிதைப் போட்டியில் இவருக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. இவரின் கலை இலக்கியப் பணியைப் பாராட்டி வேலணைப் பிரதேச செயலகம் இவரைக் கௌரவித்து “கலைவாரிதி” என்ற பட்டம் வழங்கியுள்ளது. கோப்பாய் அரசினர் ஆசிரிய கலாசாலை 2008 ம் ஆண்டு வெளியிட்ட நூலின் ஆசிரியர் குழுவில் இருந்து நம்மண்ணில் பல வகையிலும் ஆற்றல் மிகுந்தவர்களாக மிளிர்ந்து மறைந்த தலைவர்களை இந்நூலின் மூலம் அறிமுகப்படுத்தி பலரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

Add your review

12345