கலைஞானி அப்புக்குட்டி

கலைஞானி அப்புக்குட்டி

இஞ்சேருங்கோ பிள்ளையள் நான்தான் ஆவரங்கால் ஆறுமுகத்தாற்ர பேரன் அப்புக்குட்டி பேசுறன்” என்ற குரல் வானொலியிலும் மேடையிலும் ஒலிக்கும்போது சின்னக் குழந்தைகளும் உடனே சொல்லிவிடும் இது அப்புக்குட்டி ராஜகோபால் அவர்களுடைய குரல் என்று. முன்னொரு காலத்தில் அரச நாடகங்களிலும் அமைச்சர் நாடகங்க‌ளிலும் அடுக்குமொழி வசனங்களால் மேடைகளை அலங்கரித்துக் கொண்டிருக்க அதே நேரத்தில் யாழ்ப்பாணத்து மொழி என பரிகாசமாகப் பேசப்பட்ட எங்கள் மொழியை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களை ரசித்துக் கேக்கவைத்த பெருமைக்குரியவர்களில் திருவாளர் அப்புக்குட் ராஜகோபால் அவர்களும் ஒருவர்.
இவருக்கு பெருமை தேடித்தந்த நாடகங்களில் முக்கியமானது ‘கோமாளிகள் கும்மாளம் ‘ஆகும். இது முதலில் நாடகமாக மேடையேறி பின்னர் இலங்கை வானொலியில் தொடராக ஒலித்து தொடர்ந்து ‘கோமாளிகள் என்னும் பெயரில் திரைப்படமாகி இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ்ப் படங்களிலேயே 99 நாட்கள் ஓடி சாதனை படைத்திருந்தது.
1959ல் மேடைக்கலைஞர் ரகுநாதன் அவர்களின் ‘தேரோட்டி மகன்” என்னும் நாடகத்தில் பானுமதி என்னும் பெண் பாத்திரத்தில் நடித்ததின் மூலமாக மேடைகளில் நடிக்கத் தொடங்கிய இவர் வானொலி நாடகங்கள் மூலமாகவே பிரபல்யமானார். 1962ம் ஆண்டு முதல் இவர் நடித்த ஏராளமான வானொலி நாடகங்களில் ‘புரோக்கர் கந்தையா” ‘கோமாளிகள்” ‘தணியாத தாகம்” ‘முகத்தார் வீடு” ‘கிராமத்துக் கனவுகள்” போன்றவை பிரபலமானவை. இத்துடன் ‘ஏமாளிகள்” ‘கோமாளிகள்” நெஞ்சுக்கு நீதி” நான் உங்கள் தோழன்” போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.
பிரபலமான கலைஞர்களான ல‌ண்டன் கந்தையா” புகழ் சாவன்னா. கே.எம்.வாசகர் மரிக்கார் ராம்தாஸ்.உபாலி சந்திரசேகரன். சில்லையூர் செல்வராசன். முகத்தார் யேசுறட்ணம். போன்றவர்களுடன் இணைந்து நடித்த ராஜகோபால் அவர்கள் புலம் பெயர்ந்து பிரான்சிற்கு வருவதற்கு முன்பாகவே தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற நாடுகளான ல‌ண்டன்” சுவீஸ்” ‘ஜேர்மனி” ‘டென்மார்க்” ‘கொலண்ட்” ‘கனடா” ‘அமெரிக்கா” என உலகம் சுற்றிய கலைஞராக வலம் வந்ததோடு பிரான்சில் இருந்து ஒலிபரப்பான ரி.ஆர்.ரி‍‍.தமிழ் ஒலி. ஏ.பி.சி தமிழ் ஒலி. ஆகிய வானொலிகளில் நிகழ்ச்சிக் கட்டுப்பாட்டாளராகவும் பணியாற்றியிருக்கின்றார்.
இவரின் கலைப் பணியைப் பாராட்டி ‘கலா வினோதன்” ‘கலா வித்தகன்” ‘மண் வாசனைக் கலைஞன்” ந‌கைச்சுவை மன்னன்” ‘கலைஞானி” ‘ஈழத் தமிழ்விழி” ஆகிய விருதுகளும் கிடைத்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – www.anaicoddai.com இணையம்.

Sharing is caring!

Add your review

12345