கவிஞர் இராசையா குகதாசன்

கவிஞர் இராசையா குகதாசன்

கவிஞர் இராசையா குகதாசன் அவர்களின் தோற்றம் 20.11.1953. யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டு, இல 74/12 இராமநாதன் வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட இக்கவிஞர் அமரர் பேராசான் க.சொக்கலிங்கம், கவிமாமணி அமரர் க. வீரமணி ஐயர் ஆகியோரைக் குருவாகக் கொண்டவர். கவிதை, கீர்த்தனைகள், பாடல்கள் எழுதுதல் ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்க இவர் ஈழத்துத் தமிழ் பத்திரிகைகளில் தனது ஆக்கங்களை வெளிப்படுத்தி வருகிறார். இருபத்தி மூன்று ஆலயங்களுக்கு திருவூஞ்சல் பாமாலை பாடிய பொழுதும் புத்தக வடிவில் வெளிவந்தவை பதினாறு ஆகும். திருப்புகழ் வடிவில் பல இறை அருட்பாக்களைப் பாடியிருக்கும் இராசையா குகதாசன் பாடும் பணியே பெரும் பணியாகக் கொண்டு வாழ்பவர்.
யா/நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் யாழ் மத்திய கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்றறிந்த இக்கவிஞர் ஆன்மீகத் துறையில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளதோடு, சமூக சேவையாளனாகவும் இருந்து வருகிறார். இலங்கை அரசாங்க நீதி அமைச்சினால் சமாதான நீதவானாகவும் நியமனம் பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபையின் உப தலைவராகவும், திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சிறுவர் நிறைவாழ்வு இல்லத்தின் சமயத் திட்டப் பணிப்பாளராகவும் இருந்து நற்பணிகளை ஆற்றி வருகின்றார். “சிவாலயங்களில் பூசைகளில் சிவத்தமிழ் வேதங்கள்”, “அபரக் கிரியையில் ஒரு நோக்கு” போன்ற பல கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். 2002ம் ஆண்டு நல்லூர் கலாசாரப் பேரவை நடாத்திய விழாவில் கோப்பாய் ஆசிரியப் பயிற்சி கல்லூரி விரிவுரையாளர் திருநாவுக்கரசு அவர்களின் தலைமையின் கீழ் கவிதை பாடியுள்ளார்.
கவிஞர் இராசையா குகதாசன் அவர்கள் காலத்துக்கு காலம் “திருமுறைத் தேனமுது” ஒலிப் பேழைகளையும், குநற்தட்டுகளையும் வெளியிட்டு பலரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளார். இக்கவிஞரது புகழை மேலும் உயர்வு செய்யும் பெருந்தொகுப்பாக “வாழ்வில் வளம் தரும் வண்டமிழ் வேதங்கள்” என்னும் நூல் வெளிவர இருக்கின்றது. முருகேசன், தாசன் என்ற புனை பெயர்களிலும் இவர் கவிதைகள் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. பல கல்வெட்டுக்கள் எழுதியும் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள சமூக நிறுவனங்கள், பெரியார்களின் விழாக்களுக்கு கவிதை எழுதியும் வருகின்றார். நல்லூர் பாணன்குளம் நாச்சியம்பாள் ஆலயத்திற்கு மகா ஆசீர்வாதம் தமிழில் இயற்றி இந்துக் குருமாரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம்- கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – கலைஞானம் 2009 வெளியீடு

Sharing is caring!

Add your review

12345