கவிஞர் கணபதிப்பிள்ளை சண்முகநாதபிள்ளை

கவிஞர் கணபதிப்பிள்ளை சண்முகநாதபிள்ளை

கவிஞர் கணபதிப்பிள்ளை சண்முகநாதபிள்ளை அவர்கள் பாடசாலைப் பருவத்தில் இருந்தே கவிதை எழுதுதல், கட்டுரை, நாடகம், சமயச் சொற்பொழிவு ஆகிய துறைகளில் தன்னை ஈடுபடுத்தி வந்த இக்கவிஞர் நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபராக இருந்த காலம் முதல் நல்லூர் ஆலய சூழலில் வாழ்ந்து வந்தார். கவிதைத் துறையில் அதீத ஈடுபாடு கொண்டிருந்த இவர், இலங்கையில் வெளிவரும் தமிழ் நாளிதழ்கள், வார இதழ்களில் பலநூறு கவிதைகளையும், ஆன்மீகம், ஆய்வு என பல்துறை சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
1987ம் ஆண்டு காலப்பகுதியில் தவறுதலான துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி பலகாலம் படுக்கையில் இருந்தார். இந்நிகழ்விலிருந்து மீண்டுவந்த பின்பும் கவிதைத் துறையில் ஈடுபாடு கொண்டிருந்தார். தனது சொந்தப் பேரில் மட்டுமல்லாது நயினைநாதன், ஷண், முருகனடியான் எனும் புனை பெயர்களிலும் தனது ஆக்கங்களை வெளிப்படுத்தி வந்துள்ளார். ஈழத்தின் புகழ் பூத்த மாத சஞ்சிகைகளிலும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஒலிபரப்பிலும் தனது ஆளுமை மிக்க கலைவளத்தை இவர் வெளிப்படுத்தினார். மரபுவழிக் கவிதைகள் படைப்பதே இவரின் நோக்காக இருந்தது. நயினாதீவு நாகபூஷணி அம்மன் மேல் அளவில்லாத பற்றுடன் வாழ்ந்த இவர் “புராதனி நயினை நாகபூஷணி” என்னும் அரிய நூலை எழுதியுள்ளார். இவரின் தெளிவுமிக்க ஆற்றலை அழகுற வெளிப்படுத்திய இந் நூலானது பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது ஓய்வூதியம் பெற்று வாழ்ந்து வரும் இவர் தமிழ் இலக்கியம், சமயம் ஆகிய துறைகளில் வெளிவந்த நூல்களை ஆழமாகக் கற்றறிந்தமையால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தன் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருகிறார்.
அகில இலங்கை ரீதியில் அரச நிறுவனத் தமிழ் இலக்கிய மாமன்றம் நடாத்திய கவிதைப் போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட இவர் கொழும்பு தமிழ் சங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ் மன்றம், உலக ஆசிரியர் தினம், நில அளவைத் திணைக்களம் ஆகியவை ஒழுங்கு செய்த கவிதை, கட்டுரைப் போட்டிகளிலும் பங்கு கொண்டு பரிசில்களைப் பெற்றுள்ளார். நயினை மணி பல்லவக் கலாமன்றம், இவரின் இலக்கியப் பணியைப் பாராட்டி 1972ம் ஆண்டு இவருக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது.

நன்றி- மூலம்- கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர்.

Sharing is caring!

Add your review

12345