கவிஞர் கதிரவேலு யோகராசா

கவிஞர் கதிரவேலு யோகராசா அவர்கள் கவிதை, கட்டுரை எழுதுதல், சொற்பொழிவாற்றுதல், கவியரங்கில் பங்கு பற்றுதல் ஆகிய துறைகளின் நீண்ட கால அனுபவமும், ஆற்றலும் மிக்கவர். இவர் யாழ்ப்பாணம் சுண்டுக்குளியில் பிறந்து இல.138, திருமகள் வீதி, அரியாலை கிராமத்தை வாழ்விடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் கல்வி பயின்றவர். கல்லூரியில் பயின்று வந்த காலப் பகுதியிலேயே கலைத்துறையில் ஈடுபாடு மிக்கவராய்த் திகழ்ந்து பல போட்டிகளில் முதற்பரிசு பெற்றவர். ஆங்கில மொழியிலும் வல்லவராக திகழும் இவர் அமரர் சி.யே.இளையதம்பி அவர்களிடம் தமிழ்மொழி அறிவையும், அமரர்களான பி.ரி.மாத்தாய்(P.T.Mathai) ஜே.ஜே. செல்லையா ஆகியோரிடம் ஆங்கில மொழி அறிவையும் பெற்றுக் கொண்டு அவர்களை தன் துறை வளர ஆசானாகவும் கொண்டவர்.

கவிஞர் கதிரவேலு யோகராசா

பொறியியல் துறையில் பட்டதாரி ஆனதுடன், லண்டன் பொறியியல் ஆலோசனைச் சபை பட்டதாரிளாகவும், ஆசிய தொழில்நுட்ப நிலையப் பட்டதாரியாகவும், பாங்கொக், தாய்லாந்து ஆகிய இடங்களில் பட்டம் பெற்றுக் கொண்டவர். யாழ்ப்பாணம் கொழும்பு மற்றும் தமிழர் வாழும் இடங்களில் தன் கவியரங்க செயற்பாட்டை ஆற்றுகைப்படுத்தியவர். ஈழத்தில் இருந்து வெளிவரும் தமிழ் நாளேடுகள், வார வெளியீடுகள், சஞ்சிகைகள் பலவற்றிலும் ஆங்கிலப் பத்திரிகைகளிலும் தனது கவியாற்றலை இவர் வெளிப்படுத்தி உள்ளார். 1956ம் ஆண்டு ஆனந்தன் சஞ்சிகை நடாத்திய பாரதியார் நினைவுக் கட்டுரைப் போட்டியில் இவர் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். உலகக் கவிஞர் பேரவையின் உறுப்பினரான இவர் அமெரிக்காவிலுள்ள சன் பிரான்சிஸ்கோ மாநகரில் நடைபெற்ற உலகக் கவிஞர் மாநாட்டில் வெளியான ”இன்றைய தமிழ் கவிஞர்கள்” என்ற கவிதைத் தொகுப்பில் இவரது ”இயற்கை” என்ற கவிதை முன்னிடத்தில் இடம்பெற்றுள்ளது. ”யாழ்ப்பாணம்” என்னும் பத்திரிகையை வெளியிட்டு வந்த இக்கவிஞர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக அப்பத்திரிகையின் வெளியீட்டை இடைநிறுத்திக் கொண்டார். 1994ம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தீபாவளி கவியரங்கில் கலந்து சிறப்பித்தார். இவரது குடும்பத்தினரும் கலை இலக்கியத் துறையில் ஈடுபாடு கொண்டவர்கள்.

பாரதியார் நூற்றாண்டு விழாக் கழுவினர் 1982 ம் ஆண்டு திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் ”சீரிய கவிஞர்” என்ற பட்டம் இவருக்கு வழங்கப்பட்டது. 1988 ம் ஆண்டு உலகத் தமிழ் கவிஞர் பேரவை ”உலகக் கவிஞர்” விருதினையும், 1994 ம் ஆண்டு கனடிய தமிழ் பண்பாட்டு கழகம் ”தமிழ் காக்கும் கவிஞர்” என்ற விருதினையும் இவருக்கு வழங்கிக் கௌரவித்தன.

நன்றி- மூலம்- கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர்.

Sharing is caring!

Add your review

12345