கவிஞர் குறிஞ்சிவாணன்

கவிஞர் குறிஞ்சிவாணன்

குறிஞ்சிவாணன் எனும் புனைபெயரில் எழுதும் பி.மாணிக்கம் பதுளை மாவட்டத்திலுள்ள “தெமோதரை” என்னும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 65 வயதை அடைந்தும் அறுபடாப் பற்றுக்கொண்டு கவிதை எழுதிக்கொண்டிருக்கிறார். 1963 ல் எழுதத் தொடங்கிய குறிஞ்சிவாணன் அக்காலத்தில் “மாக்ணி”,“அக்கரைப்பாமா”, “சாகாமம் மணியன்” போன்ற புனைபெயர்களிலும் கவிதை எழுதினார். மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அக்கரைப்பற்றில் சிலகாலம் வாழ்ந்து தற்போது திருக்கோயில்ப் பிரிவிலுள்ள சாகாமம் எனும் குடியேற்றக் கிராமத்தில் வசித்துவருகிறார். தனது 18 வது வயதில் “வெற்றி நமதே” என்னும் தலைப்பில் வீரகேசரிக்கு தனது கன்னிக்கவிதையை எழுதினார். தொடர்ந்து தினபதி, சிந்தாமணி, ராதா, சுதந்திரன், செய்தி போன்ற பத்திரிகைகளில் இவரது 100 ற்கும் மேற்பட்ட கவிதைகள் பிரசுரமாகின.

1968 ல் “கல்லச்சு இயந்திரம்” ஒன்றைத் தயாரித்து அதன்மூலம் “மலைக்கீதம்” எனும் மெல்லிசைப் பாடல் தொகுதியொன்றை வெளியிட்டார். அடுத்து மலையக மக்களின் பிரச்சினைகளை மையமாகவைத்து “தேனிசை” என்ற பாடல்தொகுப்பைப் பிரசுரித்தார் 1991 ல் ஐரோப்பிய நாடான பெர்லின் நகரில் அமரர் “நடேசையர்” நினைவாக நடைபெற்ற தமிழ் இலக்கிய மகாநாட்டில் இவரது 50 கவிதைகள் பார்வைக்கு வைக்கப்பட்டன. அக்கரை மாணிக்கம், அமரர். கவிஞர் க.வடிவேல் கல்முனைப்பூபால், சி. கனகசூரியம் போன்றோருடன் கவியரங்குகளில் பங்குகொண்டு சிறந்த கவிதைகள் பாடியுள்ளார். 1996 ல் திருக்கோவிலில் நடைபெற்ற சாகித்திய விழாவில் எழுத்தாளர் “அன்புமணி” அவர்களால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். 1998 ல் வெளியான “இன்னும் விடியவில்லை” எனும் மரபுக் கவிதைத் தொகுதியில் இவரது கவிதைகள் உள. தற்போது 50 கவிதைகளைச் சேர்த்து அடுத்த கவிதைத்தொகுதி வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இன்றும் எழுதிக்கொண்டிருக்கிறார்.

குறிப்பு: துயரம் சுமக்கும் தோழர்களாய். எனும் இவரது  கவிதைத்தொகுப்பு கடந்த 2011 இல் வெளியானது.
By – Shutharsan.S

நன்றி – தகவல் மூலம் – http://kavignarkal.kavignan.com இணையம்

Sharing is caring!

Add your review

12345