கவிஞர் தில்லையம்பலம் சிவசாமி

கவிஞர் தில்லையம்பலம் சிவசாமி அவர்கள் பிறப்பு 05.01.1928 மறைவு 26.11.2004. தீவகத்தின் வேலணை மண்ணில் பிறந்து அம்மன் வீதி நல்லூரில் வாழ்ந்த இவர் யாழ் ஸ்ரான்லி மத்திய மகா வித்தியாலயத்தில் பயின்ற மாணவராவார். இவரும் அமரர் மூதறிஞர் சொக்கனும் இக் கல்லூரியில் சம காலத்தில் கல்வி பயின்றவர்கள். கல்லூரி ஆசானாகவும், அதிபராகவும் இருந்து ஓய்வு பெற்ற இக்கவிஞர் தனது பதினெட்டாவது வயதில் 1946ம் ஆண்டு மறுமலர்ச்சிப் பத்திரிகையில் “பட்டணத்து மைச்சினி” எனும் கவிதையை எழுதி கவிதை உலகில் காலடி பதித்தார்.

கவிஞர் தில்லையம்பலம் சிவசாமி

இளவயதிலிருந்தே எழுத்தாற்றல் மிக்க இவர் நாடறிந்த சிறப்புக் கவிஞர்களில் ஒருவராக வாழ்ந்தார். “ஆசிரியை ஆகினேன்” என்ற காவியம், “வேலணைப் பெரியார் க.பொ.இரத்தினம்”, “சிறுவர் கதைப் பெட்டகம்”, ”படைப்போம் பாடுவோம்”, “நாவலர் வெண்பா” மற்றும் சிறுகதைகளாகிய “அந்தக் காலக் கவிதைகள்”, “காவல்வேலி” என்ற நூல்கள் உட்பட பதினேழு நூல்களை எழுதி வெளியிட்டிருக்கும் இவர் ஒரு மரபுக் கவிஞர் ஆவார்.
சிறுவரது எள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் கவிதைகள், கதைகளை எழுதியுள்ளார். சிவசாமி என்ற தனது இயற் பெயரை மறைக்கும் அளவிற்கு “தில்லைச்சிவன்” என்ற பெயரால் ஈழத்து இலக்கிய உலகில் இவர் பவனி வந்தார். தமிழின் இருப்பில் ஆர்வமும், தமிழ்த் தேசியத்தில் விருப்பும் சுமந்து இம்மண்ணிலே வாழ்ந்த தில்லைச்சிவன் எழுதிய கவிதைகள், சிறுகதைகள் ஈழத்து இலக்கியப் பரப்பிலே சுடர்விட்டுப் பிரகாசித்த பத்திரிகைகள், சஞ்சிகைகளில் காலத்திற்குக் காலம் வெளிவந்தன. பிரசித்தி பெற்ற யாழ்ப்பாண உற்சவ காலங்களில் இறையுணர்வுடன் இவரது கவிதைகள் வெளிவந்தன. தனது வரலாற்றை “நான்” என்ற தலையங்கத்தில் பாடிய முதற்கவிஞன் தில்லைச்சிவன் அவர்களேயாவார். இக்கவிதையை நூலுருவில் மல்லிகைப் பந்தல் வெளியீடாக மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் வெளிக்கொணர்ந்தார். தமிழ்ப் பற்றும், மதப் பற்றும், மனித நேயமும் மிக்க இக்கலைஞர் கவிதைத் தொகுதிகள் பல்கலைக்கழக மட்டத்தில் மாணவர்களின் ஆய்வுக் கருப்;பொருளாக அமையும் சிறப்பு மிக்கதாக உள்ளது. வரகவியாக விளங்கிய தில்லைச்சிவனை ரசிகர்களும், சான்றோர்களும் “வெல்லச் சுவையினை வெல்லக் கவி சொல்லும் தில்லைச்சிவன்” என தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. “தமிழன்” என்ற இதழின் ஆசிரியராக சில காலம் இவர் இருந்துள்ளார். இவரது “தந்தை செல்வா காவியம்” என்ற நூல் யாழ் பல்கலைக் கழகத்தினால் அரங்கேற்றப்பட்டது.

Sharing is caring!

Add your review

12345