கவிஞர் பிள்ளையினார் நடராசா

கவிஞர் பிள்ளையினார் நடராசா அவர்களின் தோற்றம் 14.08.1939. “ஆடலிறை” என்னும் புனை பெயரில் இலக்கிய உலகில் அறிமுகமான இளவாலை மயிலங்கூடலை பிறப்பிடமாகக் கொண்ட மயிலங்கூடலூர் நடராசா என்றழைக்கப்படும் இக்கலைஞர் ஒரு இளைப்பாறிய ஆசிரியர். இவர் செம்மணி வீதி, நாயன்மார்கட்டில் வசித்து வருகிறார். இம்மண்ணில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகள், வாழ்ந்த இலக்கியப் படைப்பாளிகள் போன்ற பல்வேறு முக்கிய தகவல்களை எல்லாம் சேகரித்து இம்மண்ணின் தகவல் பெட்டகமாக இவர் இருந்தவர்.

கவிஞர் பிள்ளையினார் நடராசா

சிறுவர் இலக்கியம் படைப்பதில் வல்லவரான இவர் ஒரு பால பண்டிதரும் ஆவார். புலாலி ஆசிரியப் பயிற்சி கலாசாலையில் ஆசிரியப் பயிற்சி பெற்ற இவர் அங்கு பயிற்சி பெற்ற காலத்தில் பல இலக்கியப் பணிகளை மேற்கொண்டு பாராட்டுப் பெற்றவர். “பண்டிதம்” என்னும் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து சிறப்புப் பணி ஆற்றியவர்.
ஆமரர் செ.கதிரேசர்பிள்ளை, மயிலங்கூடலூர் கலாபூசணம் சி.அப்புத்துரை ஆகியோர்களைத் தன் துறை வளரக் காரணமாயிருந்தவர்கள் என இவர் கூறியுள்ளார். 1980 ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தின் கல்வி மூலவள நிலையங்களின் பொறுப்பாளர்களுடன் ஒருவராக இவர் பணியாற்றிய போது மாணவர்களை மையப்படுத்தி சிறுவர் மற்றும் குழந்தை இலக்கியப் பயிற்சிப் பட்டறைகளை இவர் நடாத்தியுள்ளார். இவ்வாறு இவரால் இத்துறையில் பயிற்றப்பட்டவர்கள் இலக்கியத் துறையில் சமகாலத்தில் வளர்ச்சி அடைந்து தமிழ் மண்ணில் செயற்பட்டு வருகிறார்கள். சிறுவர் இலக்கியத் துறையில் இருபத்தைந்து நூல்களுக்கு மேல் வெளிவர இக்கவிஞர் துணை நின்றுள்ளார். இந்த வகையில் குழந்தைக் கவிதைகளின் இலக்கிய வரலாற்றுக்கு இவர் அளித்துள்ள பங்களிப்பு விதந்து கூறப்பட வேண்டியதாகும்.
ஈழத்துப் பத்திரிகைகள் சஞசிகைகளில் காலத்திற்குக் காலம் ஏற்படுகின்ற மாற்றங்களை மையமாகக் கொண்டு இவரின் கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. அமரர் இரகசிகமணி கனகசெந்திநாதன் அவர்களை முதல் தலைவராகக் கொண்டு இயங்கும் யாழ் இலக்கிய வட்டத்துடன் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்தி இவர் செயற்பட்டு வந்தார். இவரின் “ஆடலிறை குழந்தைப் பாடல்கள்” நூல் யாழ் இலக்கிய வட்டத்தின் வெளியீடாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி- மூலம்- கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர்.

Sharing is caring!

Add your review

12345