கவிஞர் மூர்த்தி

நாகப்பன் ஏரம்ப மூர்த்தி என்ற எருவில் மூர்த்தி அவர்கள் அரச எழுது வினைஞராகக் கடமையாற்றியவர். இவருக்கு சிவயோகம் என்ற மனைவியும் கயல்விழி என்ற மகளும் (தற்போது மணமுடித்து கனடாவில்) உள்ளனர்.

இவர் இலங்கை வானொலி தேசிய சேவை, ரூபவாஹினி கூட்டுத்தாபன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும், பிரபல பாடகர்களான வனஜா சிறீனிவாசன், சத்தியமூர்த்தி, சுஜாத்தா அத்தநாயக்க, அமுதன் அண்ணாமலை, கணபதிப்பிள்ளை, எஸ். இராமச்சந்திரன், வீ முத்தழகு, ஜோசப் இராஜேந்திரன், மற்றும் பல பாடகர்களுக்கும் பாடல்கள் இயற்றியுள்ளார். மறைந்த எருவில் மூர்த்தியின் பாடல்களுக்கு திரைப்படப் புகழ் இசையமைப்பாளர்களான எம்.எஸ்.செல்வராஜா, ஆர்.முத்துசாமி, எம்.கே.ரொக்சாமி, யாழ்.கண்ணன் – நேசன் போன்றோர் இசையமைத்துள்ளனர். ( தகவல் – வீரகேசரி ஜனவரி 14, 2007)

ஒரு பாடல் “இயற்கை அன்னையின் கலைக்கூடம்” பாடலை இயற்றியவர்
எருவில் மூர்த்தியாவார். மட்டக்களப்பில் எருவில் என்ற கிராமத்தில் பிறந்தவர். அந்தக் கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 17 மைல்களுக்கு அப்பால் உள்ளது. 5 ஆம் வகுப்பு வரை அங்கே படித்தவர். பின்னர் திருகோணமலை இந்துக்கல்லூரியில் கல்வி கற்கச் சென்றார். அங்கு படித்துக்கொண்டிருக்கும் போது அவர் அநேகமாகப் பத்திரிகைகளில் வரும் கதை, கவிதைகளைப் படிப்பது வழ்க்கம், அப்போது அவருக்கு எழுதவேண்டும் என்ற ஆரவம் தோன்றியது. சிறு சிறு பாடல்களையெல்லாம் எழுதினார். ஆனால் அவையெல்லாம் சரியான பாடல்களா , இலக்கண முறைப்படி அமைந்தனவா என்பதில் அவருக்குச் சந்தேகம் இருந்தது. ஆனபடியால் அவைகளை அவர் பிரசுரிக்க அனுப்பவில்லை. அவர் 8 ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது வீரகேசரியின் சிறுவர்களுக்கான பகுதியில் பூஞ்சோலை என்ற கட்டுரையை எழுதியனுப்பினார். அது உடனே பிரசுரிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் 16 , 17 வயதிலே கவிதைகளை எழுதத் தொடங்கிவிட்டார். அவர்ஆங்கில மீடியத்தில் படித்திருந்தாலும் தமிழ் மீது நிறைய ஆர்வம் இருந்தது.

இலங்கை, இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளைப் படிப்பதில் ஆர்வமுடையவனாக இருந்தார். தனது 18 ஆவது வயதில் எழுதுவினைஞராக உத்தியோகம் பெற்றார், கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்தார். பின் 19 ஆவது வயதில் மட்டக்களப்பிற்கு மாற்றலானார். தன் 20 வயதில் பயிற்சிக்காகக் கொழும்பு சென்றிருந்தபோது கவிஞர் மஹாகவி அவர்களைச் சந்திக்கும் பெரும்பேறு கிடைத்தது. அவர் அப்போது “தேன்மொழி” என்ற பெயரில் கவிதை நூலொன்றை வெளியிட்டுக்கொண்டிருந்தார். அந்தக் கவிதை நூலில் அவரும் ஒரு சந்தாதாரராகித் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தார். தேன்மொழியில் அழகான சிறப்பான கவிதைகள் வெளிவந்துகொண்டிருந்தன. வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத அளவிற்குச் சுவை கொண்ட கவித்துவம் நிறந்த கவிதைகள் அவை. முக்கியமாக நாவற்குழியூர் நடராசன், கவிஞர் மஹாகவி, சில்லையூர் செல்வராசன், மட்டக்களப்புப் பகுதியைச் சேர்ந்த திமிலைத் துமிலன், நீலாவணன் என்று எல்லோரும் எழுதினார்கள். இவர்களுடைய கவிதைகளைப் படிக்கும்போது அவரும் எழுதுவார், பின்னர் கிழித்தெறிந்துவிடுவார்.

அதன் பிறகு தன் 21 ஆவது வயதிலே மட்டக்களப்பில் நடந்த இனக்கலவரத்தில் அவரின் இரண்டு கண்களும் பறிபோயின. ஆகவே அவர் தனது குக்கிராமத்திலேயே தங்கியிருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்படியிருக்கும் போது பத்திரிகைகள், சஞ்சிகைகளை அவரது சகோதரர்களும் நண்பர்களுமாக வாசித்துக் காட்டுவார்கள். அதன் மூலமாக அவருக்கு இலக்கிய ஆர்வம் நிறையவே வளர்ந்து கொண்டு வந்தது. அப்பொழுது அவர் பாடல்களைப் புனையத் தொடங்கினார். முதற்பாடல் 1958 ஆம் ஆண்டிலே நா.ஏரம்ப மூர்த்தி என்ற பெயரிலேயெ சுதந்திரன் பத்திரிகையில் வெளிவந்தது. தன் காதலிக்கு ஒரு வண்டைத் தூது விடுகிறான் இப்படி:

போதவிழ்ந்த புது மலர்கள் தேடி நித்தம்
பித்தனைப் போல் சுற்றுகின்றாய் பேதை வண்டே
போடுகின்றேன் கேளுனக்கு நானோர் வார்த்தை
உத்தமியாள் என் சுசியைச் சென்று நீ பார்.
கோதையவள் கன்னமதில் ரோஜா காண்பாய்
குறு நகை செய் இதழ்களிலே முல்லை காண்பாய்
போதை பெறத் தேனெதற்குபோய்ப் பார்
எந்தன் பொற்கொடியாள் புன்னகையே போதுமென்பாய்.

சுதந்திரன் அப்பொழுது தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த பத்திரிகையாக வெளிவந்து கொண்டிருந்தது. தமிழர் உரிமைகளுக்காகப் போராடிய தமிழரசுக்கட்சியில் கொள்கைகளயும் பாடல்களைவும் அப்பத்திரிகை வெளியிட்டு வந்தது. அந்தப் பத்திரிகையில் நிறையப் பாடல்களை எழுதினார். அனேகமாக அவை உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பாடல்களாக அமைந்திருந்தன.

72 ஆம் ஆண்டிலே மெல்லிசைப் பாடல்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப் பட்டு வந்தன.நாவற்குழியூர் நடராசன் அவர்கள் இலங்கை வானொலியின் பணிப்பாளராக இருந்தபோது தான் மெல்லிசைப் பாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றைக் கேட்டு தானும் எழுதவேண்டும் என்று ஆசை அவருக்கு ஏற்பட்டது. அவர் எழுதி அனுப்பிய இரண்டு பாடல்களுமே ஒலிபரப்பப்பட்டன. அப்பொழுது வானொலி நிகழ்ச்சி அமைப்பளராக் இருந்த இரா.பத்மநாதன் (பின்னாள் தினக்குரல் ஆசிரியர்) “மூர்த்தி நீர் எழுதிய பாடல்கள் அருமையாக இருக்கின்றன ” என்று அந்தப் பாடல்கள் ஒலிபரப்ப முன்னரேயே கடிதம் எழுதினார். வி,முத்தழகு பாடிய பாடல்கள் அவை.

தித்திக்கும் செந்தமிழில் சித்தம் கசிந்துருகி
நித்தமும் உனைப் பாடுவேன் – முருகா
இருளின் மத்தியில் உனைத்தேடினேன்.

என்று தொடங்கும் ஒரு பாடல்.

இந்தப் பாடல் ஒலிபரப்பாகி அடுத்த மாதத்தில் புலவர்மணி பெரியதம்பி அவர்கள் பஸ் நிலையத்தில் கண்டபோது சொன்னார். “தம்பி! உமது பாடல்கள் நன்றாக இருக்கின்றன, இன்னும் எழுதுங்கள் ” என்று. அதன் பிறகு நிறைய மெல்லிசைப் பாடல்களை எழுதினார்.

இயற்கையின் சிறப்பைக் கவிஞர் தன் கவி வரிகளில் இப்படித் தருகின்றார்.

இயற்கை இறைவனின் கலைக்கூடம்
அதில் எத்தனை எத்தனை சுகம் பாரும்
மயக்கும் மதுரசம் அதிலூறும்
அதை வாங்கிடும் மனம் தினம் கவி கூறும்

இயற்கை இறைவனின்……..

தாரகை சோலையில் வெண்ணிலவும் – ஒரு
தண்மலர்ச்சோலையில் பெண் நிலவும் (2)
பேரருள் கலைஞனின் கைத்திறமே – அவை
பேசவும் இனித்திடும் சித்திரமே..

இயற்கை இறைவனின்……..

வான் என்னும் மேடையில் ஒரு பாதி – அவன்
வைத்தனன் பூமியில் அதன் மீதி
ஏன் என வாழ்ந்திட மனிதா நீ
அவன் செய்தவை யாவிலும் கலைவீடு

இயற்கை இறைவனின் கலைக்கூடம்
அதில் எத்தனை எத்தனை சுகம் பாரும்
மயக்கும் மதுரசம் அதிலூறும்
அதை வாங்கிடும் மனம் தினம் கவி கூறும்

பாடலைப் பாடியவர்கள்: முல்லைச் சகோதரிகள்
இசை: ஆர்.முத்துசாமி
மழலையைக் கண்ட கவிஞர் மனம் இப்படிப் பாடுகின்றது.

வட்டக்கருவிழி வண்டுகளோ
உந்தன் வண்ண உடல் மலர் செண்டுகளோ
பட்டு இதழ்களில் கட்டவிழ் புன்னகை
மொட்டவிழ் முல்லையோ….. புத்தொழியோ

வட்டக்கருவிழி………

கொஞ்சும் மழலைகள் அஞ்சுகமோ
தேவன் கோயில் உமதில நெஞ்சகமோ
பிஞ்சு உடலின் மிஞ்சி வரும்
மணம் கஞ்சமென் மாமலர் தந்ததுவோ

வட்டக்கருவிழி……….

நெற்றி சுடரொளி வான் பிறையோ -எந்தன்
நெஞ்சில் நீ பெய்வதும் தேன் மழையோ
தத்தி நடந்து எனை கட்டியணைத்து – நீ
முத்தம் தரும் செயல் தான் கலையோ

பாடலைப் பாடியவர் அம்பிகா தாமோதரன்
இசை: எம். கே.ரொக்சாமி

நன்றி – http://kanapraba.blogspot.com இணையம்

Sharing is caring!

Add your review

12345