கவிஞர் வேலுப்பிள்ளை ஐயாத்துரை

கவிஞர் வேலுப்பிள்ளை ஐயாத்துரை

கவிஞர் வேலுப்பிள்ளை ஐயாத்துரை அவர்கள் தோற்றம் 02.02.1926 மறைவு 18.04.1996. கலை வளரவும், கவிதை வளம் பெறவும் கலைவாணிக்க கோவில் கட்டி பூசித்துவரும் பரம்பரையின் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த இக்கவிஞர் ஓர் அபூர்வப்பிறவி. கவித்திறனும், இசைத்திறனும், நாடகத்திறனும் நிறையப்பெற்றவர். அரியாலை சிறீ கலைமகள் நாடக சபாவின் இயக்குனராகவும், அரியாலை சிறீ கலைமகள் சனசமூக நிலைய ஆரம்பகால செயலாளராகவும். “அடங்காப்பிடாரி” நகைச்சுவை நாடகம் புகழ் சுண்டுக்குழி யாழ் நாடகக் கலாமன்றத்தின் செயலாளராகம், நடிகராகவும் செயற்பட்டார்.
வடமராட்சி அல்வையூரைப் பிறப்பிடமாகவும் இல.59, கலைமகள் வீதி, அரியாலையை வசிப்பிடமாகவும் கொண் வாழ்ந்தார். ஈழத்தமிழ் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் மட்டும் அல்லாது வெளிநாட்டுப் பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் தன் கவிதை ஆற்றலை வெளிப்படுத்தியவர். யாழ் இலக்கிய வட்டத்தின் மூலம் 1965ம் ஆண்டு காலப்பகுதிக்குப் பின்னர் அறிமுகமான இவர் கவிதைகளை இசையுடன் பாடி கவியரங்குகளை கலகலப்படையச் செய்தவர். இதன் காரணமாக “கன்னல் இசைமழை பொழியும் கவி ஐயாத்துரை” எனப் பலராலும் பாராட்டப்பட்டவர். இலங்கை அரசினால் காந்தி விழாவையொட்டி 1969ம் ஆண்டு நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் பரிசு பெற்று அப்பரிசினை முன்னாள் இந்தியப் பிரதமர் நேரு அவர்களின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டிடம் வாங்கிய பெருமைக்குரியவர். வடமாகாண ஐக்கிய மேற்பார்வைச் சங்கம் சர்வதேச கூட்டுறவு தினங்களையொட்டி நடாத்திய கவிதைப் போட்டிகளில் 1969, 1970, 1971 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து முதற் பரிசு பெற்றவர்.
வெள்ளைக்கமலம்” “வளர்தெங்கு” ஆகிய கவிதை நூல்களைத்தான் சார்ந்த யாழ் இலக்கிய வட்டத்தின் வெளியீடாகத் தந்தவர். இவரின் கவித்றைக்கான அளப்பரிய சேவையைப் பாராட்டி யாழ் இலக்கிய வட்டம் இவர் மறைந்த பின்னர் “ஐயாத்துரையின் கவிதைகள்” என்னும் நூலை வெளியிட்டது. இசை நாடகங்கள் எழுதுவதிலும் அதனை இயக்குவதிலும் நடிப்பதிலும் வல்லமை மிக்கவரான இக்கவிஞரை அகில இலங்கைக் கம்பன் கழகம் பாராட்டி விருது வழங்கிப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்து “மூதறிஞர்” என்ற பட்டமும் வழங்கியது. இது தவிர பல சமூக மன்றங்களும் இவரைப் பாராட்டி உள்ளன. அரியாலை சிறீ கலைமகள் சனசமூக நிலையம் இவருக்கு “கலைப்புகழ்” விழா எடுத்துக் கௌரவித்து மலரும் வெளியிட்டது.

நன்றி- மூலம்- கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர்.

Sharing is caring!

Add your review

12345