காசிப்பிள்ளை நல்லையா

நள வருடம் மார்கழி மாதம் 2ம் திகதி திருவாதிரை நட்சத்திரத்தில் (15-12-1917) குப்பிழானில் சைவ ஆலயங்களும் சைவ மக்களும் சிறப்படைய வேண்டும் என்ற திருவருள் நோக்கில் பரம்பரை பரம்பரையாகப் புகழ் பெற்ற, செல்வம் வளமிக்க, எட்டுத் திட்டியென்னும் குறிச்சியில் ஆறுமுகம் என்பவருடைய வமிசத்தில் சூரியப் பிரகாசமாக ஓர் ஆண் குழந்தையைக் காசிப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகள் பெற்றெடுத்தனர்.இக்குழந்தை நாளொரு வண்ணமும் பொழுதெரு மேனியுமாக வளர்ந்து பெற்றோரை மகிழ்வித்தது. இக்குழந்தைக்கு நல்லையா என நாமகரணமிட்டார்கள் பெரியோர்கள்.
நல்லையா தனது ஆரம்ப கல்வியை முடித்துக் கொண்டு மல்லாகம் சைவ ஆங்கில வித்தியாசாலையில் ஆங்கிலக் கல்வியை ஏழாம் வகுப்பு வரை கற்றார்.பின் தனது மூத்த தமயனாரின் அழைப்பில் மலேசியா சென்று தனது உயர் கல்வியை முடித்துக் கோலாலம்பூரில் தந்தி தொலைபேசித் தொடர்பு நுண் கலை கல்வியை கற்று உதவிப் பொறியியலாளராத் தொழிலில் அமர்ந்தார்.

இக்காலத்தில் தனது அன்பான பெற்றோரை இழந்து தனித்தவரானார். குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்தை தொன்று தொட்டு பரிபாலித்து வந்த குடும்பத்தில் உள்ளவரும் முதன்முதலாக மலேசியா சென்று புகையிரத நிலைய அதிபராக கடமை புரிந்து இழைப்பாறியவருமாகிய வல்லிபுரம் வைத்திலிங்கத்தின் சிரேஸ்ட புத்திரி செல்வி கனகாம்பிகை அவர்களை, இறைவன் அருள் கூட்ட நல்லையாவுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

நல்லையா தம்பதிகள் இல்லறத்தை நல்லறமாக நடத்தி வரும் காலத்தில் குழந்தை இல்லாக் குறை அவர்களை வாட்டியது. இறைவன் நல்லருள் காட்ட இந்தியாவில் பங்களூரில் கைலாச ஆச்சிரமத்தில் தவத்திரு திருச்சி மகா சுவாமிகள் ஆசீர் வாதத்தையும் அவ்வாச்சிரமத்தில் எழுந்தருளியுள்ள சிறி ராஐராஜேஸ்வரி அம்பாளின் அருளையும் பெற்றுத் திருவருளின் கருத்தின் படி புத்திரப் பாக்கியம் பெற்றார்கள்.

இக்காலத்தில் இருவரும் தெய்வ பக்தியிலும் சமய வழிபாடுகளிலும் ஊக்கமுடையவர்களாய் பல சைவ ஸ்தாபனங்களில் அங்கத்தவர்களாய் உழைத்தார்கள். மலேசியா அருள் நெறித் திருக்கூட்டத்தின் செயலாளராகத் கடமையாற்றிய காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து வரும் பல பெரியோர்கள் சமயசாரியர்களின் சகவாசமும் கிடைத்தன. இவருக்குச் சைவபூசணம் என்னும் பட்டம் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

நல்லையா தம்பதிகளுக்கு இரு புத்திரி இரத்தினங்களை இறைவன் கருணை கூர்ந்து அளித்தார். மூத்த மகள் ஞானலட்சுமி, அடுத்த மகள் சிவகங்கை.நல்லையா மலேசியாவில் உள்ள தனது தொழிலில் இருந்து இளைபாறித் தனது சொந்த ஊரான குப்பிழானில் குடியேறித் தெய்வ வழிபாட்டிலும் சைவ சமய வளர்ச்சிக்கு ஊக்கமளித்தும் கற்கரை கற்பக விநாயகர் ஆலய பரிபாலனத்தில் தனது உடல், பொருள், ஆவி அத்தனையும் அர்பணித்தும் வாழ்ந்து வந்தார். கற்பக விநாயகர் கோவிலை புதிப்பித்தும், திருத்தியும், திருப்பணி வேலைகளைத் திறம்பட செய்வித்தும் வந்தார்.

மலேசியாவிலிருந்து, 1972 ஆம் ஆண்டில் தாயகம் திரும்பிய திரு.நல்லையா கற்கரைப் பிள்ளையார் தொண்டனாக இருந்தார். ஆலய பரிபாலன சபை தலைமை பதவியை ஏற்க மறுத்த அவர்கள் இறுதியில் எல்லோரினதும் அன்பு கட்டளையை ஏற்று 20-09-1973 ஆம் ஆண்டு சபை தலைவரானார். அன்றிலிருந்து தனது ஆயுட் காலம் வரை தலைவராக அமர்ந்து, திரிகரண சுத்தியோடு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு தவறாமல் தமது பணியினை சிறப்பாக ஆற்றி வந்தார். அவரது பதவிக் காலத்தில் ஆலய வளர்ச்சியிலே ஏற்பட்ட மாற்றங்களும், மூர்த்திகர வியாபகமும் அளவிடக்கரியவை. ஒரு நூற்றாண்டு காலத்தில் சாதிக்க வேண்டிய சாதனைகளை 15 வருடங்களில் சாதித்து முடித்தார். இதற்கு காரணம் அவரது விடா முயற்சியாகும். ஆலயத்தின் கற்ப கிரகம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் அனைத்தும் புனர் நிர்மானம் செய்யப்பட்டுஇ வெளி வீதி சுற்று மதில் கட்டப்பட்டமைஇ கயலக்குமிஇ திருமுறைச் திருமுறைச் செல்வர் என் போருக்கு தனித் தனி ஆலயம் அமைக்கப்பட்டமை. திருப்பணிகளை செய்வதற்கு பணம் மட்டும் போதாது மனமும் வேண்டும்.

விநாயகப் பெருமான் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குத் தரிசனங் கொடுக்க ஓர் சிறந்த சிற்ப தேரை அமைத்துக் கொடுத்தார். சைவப் பிள்ளைகள் தெய்வப் பற்றும் சமய அறிவும் பெற்று வாழ வேண்டும் என்னும் கருத்தில் கோயிலில் கூட்டு வழிபாட்டையும், பண்ணிசை வகுப்பையும் ஏற்படுத்தி நற்பணி புரிந்தார். தனது குல தெய்வமாகிய விரபத்திர சுவாமியின் கோயிலைத் திருத்தி ஒழுங்கான பூசைகள் நடை பெற வழி வகுத்துக் கொடுத்தார்.

ஆண்டு தோறும் ஊர் மக்கள் நன்மை கருதிப் பல ஆயிரம் செலவில் கணபதி ஹோமம் நடாத்தி வந்தார். அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக பெரியவர் முதல் சிறுவர் வரை அவரைப் பெரியப்பா என்றே அழைப்பார்கள். விநாயகப் பெருமான் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாக அச்சம் அவரை விட்டு அகன்றது. மரணம் எக்காலத்திலும் அவரை பீடிக்கவில்லை. பிறந்தவர் சாதல் திண்ணம், மரணத்துக்கு பயந்து ஓடுவது அர்த்தமற்றது என்பதை உபதேசமாக கூறாமல் நடைமுறையில் வாழ்ந்து காட்டினார். கடந்த காலங்களில் ஏற்பட்ட தீவிர இராணுவ நடவடிக்கைகளின் போது மக்கள் தனது உடமைகள் அனைத்தையும் விட்டு உயிரைப் பிடிக்கலாம் என்று திசை மாறி ஓடிய போதும், நடப்பது எங்கேயும் எப்பவும் நடந்தே தீரும், விநாயகப் பெருமான் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு தினம்தோறு ஆலயம் சென்று வழிபட்டு வந்தமை அவரது அச்சமின்மைக்கு சிறந்த உதாரணம் ஆகும். உள்ளே நின்று வழிபடுவதோடமையாது உள் வீதி, வெளி வீதி ஆகிய இரண்டு வீதிகளாலும் வலம் வந்து இறைவனை வழிப்பட்டுத் தேங்காய் உடைக்கும் அவர்கள் எம்பெருமான் ஆலயத்துக்குக் கண்ணூறு ஏற்படக் கூடாதே என்பதற்காக வெளி வீதியில் நெற்பொரியோடு தேசிக்காயையும் வெட்டி வீசுவார்.

தன்னுடைய ஆயுட்காலத்தில் விநாயகப் பெருமானுடைய கோயிலுக்கு ஒரு இராச கோபுரம் அமைக்க வேண்டும் என்னும் பெருவிருப்பத்தினால் அடிக்கல் நாட்டிக் கட்டிடத்தைத் தொடக்கி வைத்தார். அவர் மலேசியா சென்று 2-2-89 இல் விநாயகப் பெருமானைத் தரிசித்து அடியார்களுக்குக் கோபுரத்தின் இன்றியமையாமையும் அதன் தரிசனத்தால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பதையும் எடுத்துக் கூறி அக மகிழ்ச்சியோடு வீடு திரும்பி இரவு உணவு உண்டு சயனித்தார். 04-02-1989 காலை எழுந்து பூசை அறையில் பூசையை முடித்துக் கொண்டு காலை நீரருந்தினார். சற்று களைப்பாக இருப்பதாக கண்ணயந்தார். சில நிமிடங்களில் அவருடைய மனைவி மக்கள் முன்னிலையில் (அன்று சனிக்கிழமை, அபரபக்தத் திரயோதசித் திதியில், பூராட நட்சத்திரத்தில்) அவருடைய ஆன்மா மெய்ஞ்ஞானத் தாணுவனேடு அத்துவிதமாகி விட்டது.

நன்றி – http://www.kuppilanweb.com இணையம்

Sharing is caring!

1 review on “காசிப்பிள்ளை நல்லையா”

  1. பரீட்சார்த்தம்

Add your review

12345