குமாரசுவாமி ஐயர்

குமாரசுவாமி ஐயர்

சைவத்தையும் தமிழையும் வளர்க்கவென பிறந்த அறிஞர்களில் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்ப்புலவர் குமாரசுவாமி ஐயர் அவர்களும் மிக முக்கியமானவர்.

விபுலாநந்த நாவலருக்குச் சங்கதமொழிக் கல்வியைத் தொடங்கி வைத்த தமிழ்ப் புலவர் ஒருவர் நம்மிடை ஆடரம்பரமின்றி வாழ்ந்து மறைந்துள்ளார். மட்டக்களப்பு ஆரைப்பற்றை சேர்ந்த தமிழ்ப்புலவர் குமாரசுவாமி ஐயர் தமது சைவநெறி குன்றாத வைதிக வாழ்வினால் ‘ஐயர்‘ என்று குறிப்பிடப்பெற்ற சிறப்புடையவர் ஆவார். இவர், ஆரைப்பற்றை எனும் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பியாரும் அவர் மனைவியாரான சின்னம்மையாருக்கும் வெகுதானிய வருடம் மார்கழி மாதம் 22 ஆந் திகதி (1879) தமிழும் சைவமும் வளர்த்தத்கென்றே பிறக்கலாயினர். நோய் நிறைந்தோனாய் மெலிந்த தேகியாய் இருந்த குமார சுவாமி பிற்காலத்திற் பேரறிஞனாய் விளங்குவானென்று அப்போது யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இளமையிலே தமிழ் இலக்கிய இலக்கண நுல்களை மூலபாடமாக இவர் கற்ற பின்னர், யாழ்ப்பாணத்தில் பெருந் தமிழ் வித்துவானாய் விளங்கிய த.கைலாசப்பிள்ளை என்பவரின் மாணவனாக இவருக்குக் கிடைத்த வாய்ப்பு மட்டக்களப்பு நாட்டுக்குப் பெரிதும் மதிப்பினை ஈட்டிக்கொடுப்பதாயிற்று.

ஆசிரியருடைய நன்மதிப்பைப் பெற்ற முதற்தரமான மாணவர் நமது குமாரசுவாமி ஐயர். இளமையிலேயே சிவபக்தியும் சிவநெறியில் வழுவாத ஒழுகலாறும் இன்னாரது தமிழ் நெஞ்சோடு கலந்து பலருடைய மதிப்புக்கும் இவரை இலக்காக்கின. தமிழ் மொழியில் மட்டுமன்றி வடமொழியிலும் இராமோதந்தம் முதலான நல்லிலக்கியங்களையெல்லாம் கற்றுத் தம்மூர் திரும்பினார். நல்ல பண்பட்ட பாடல்களை ஆக்கும் புலமை இவரிடத்தில் இயல்பாயமைந்திருத்தலைக் கண்டு நண்பர் பலரும் வியந்தார்கள். தமிழுக்கு இயல்பான இனிமையும் குழைவும் ஐயர் எழுதும் தமிழுரை நடையிலே பொலிந்து தனியழகு பெற்றன. இவருடைய உரைநடைப் புலமையைச் சித்தவைத்தியப் பத்திரிகைகளிலும், ‘செங்குந்தமித்திரன்’ முதலான வெளியீடுகளிலுங் கண்டு பல அறிஞர் பாராட்டுவாராயினர். இப் பெரியார் சங்க இலக்கியங்களைத் தமது பழஞ்சொத்துக்கள் போலப் பேணிக் கற்றும் கற்பித்தும் வந்தார். மட்டுநகர்க் கோட்டைமுனையில் இவர் வசித்த காலத்தில் தமிழிலும் சங்கதத்திலும் இவருக்கு மாணவராய் அமைந்து பயன்பெற்றோர் பலராவர். இந்தக் காலத்திலேதான் பண்டித மயில்வாகனனாரது தமிழுறவு இவருக்கு ஏற்பட்டது. ஐயருடைய புலமையை வியந்து வடமொழிக் கல்வியில் அவருக்கு மாணவனாக அமைந்து, மயில்வாகனனாரும் ஐயருடைய கலைப்புகழை மேலும் உயர்த்தினார். நாடகக் கொப்பிகள், காவடிச்சிந்துகள் முதலாகப் பல நூற்பிரதிகள் ஐயரவர்களுடைய திருத்தத்துக்கும் அங்கீகாரத்துக்குமாக பல இடங்களிலிருந்து வந்துபோகும். அரசடியில் இருந்த தமிழ் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையிலே இவர் சிலகாலம் தனிப்பட்ட முறையில் அமைந்த ஓர் ஆசிரியராகப் பணிசெய்து மாணவர் பலரைத் தமிழ்கற்றைகளிற் கரைசேரச் செய்தனர்.

‘நல்லா ரிணக்கமும் நின்புசை நேசமும் ஞானமுமே
அல்லாமல் வேறொன் றறினே; பராபரமே’

என்ற இவருடைய கடப்பாடு விபுலாநந்த அடிகள், வித்துவான் சரவணமுத்தன் முதலிய நல்லறிஞர்களது தொடர்பாடல் அக்காலத்தில் இனிது வளம்பெறலாயிற்று. இந்நாட்களிலே தமது பரம்பரைக் கல்வியான வைத்தியத்துறையில் இவர் மனம் சென்றது. தமிழ், சங்கீதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமையாளராய் இலக்கிய இலக்கணங்களிற் கை தேர்ந்தவராய் விளங்கிய இவருக்குத் தமிழ் வைத்தியக் கல்வி ஒரு பொறுப்பாகத் தோன்றவில்லை. ஒரு சிறிது காலத்துள் அந்நூற் பரப்பினைச் சுவை தேர்ந்து முடித்தார். சித்த வைத்தியக்கலை இவரிடம் கை வந்ததொன்றாயிற்று. ‘நாடி‘ பார்ப்பதில் ஐயர் பெயர் பெற்றவராயினர். நோய் இன்னது என்று அவர் நிதானித்துக் கூறினால் அதிற் கடுகளவும் பிழையே இருக்காது. இத்திறமை குமாரசுவாமி வைத்தியர் புகழை எங்கும் பரப்பியது. உயரிய முறையில் ஆக்கப்பெற்ற நல்ல மருந்துகளைச் செய்யுந் திறமையாளராயும் இருந்ததனால் பலருடைய தீராத நோய்கள் எல்லாம் இவரைக் கண்டு ஓட்டம் பிடித்தன. திராட்சாரிட்டம், மிளகசந்தனாதித்தைலம், மயணத்தைலம் முதலான உயர்ந்த மருந்துகள் சிலவற்றிற்கு மக்கள் இவரை இன்றும் நினைத்துப் பேசுகின்றனர். இக் கலைப் பெருமையால் இந்தியாவிலுள்ள சித்தவைத்திய சங்கத்திலும் ஒரு உறுப்பினராக நீண்டகாலம் இருந்து தன் பங்கை நன்கு நிறைவேற்றிப் புகழ்கொண்டனர்.

இவரது வைத்தியக் கலைப் புலமையினொரு பகுதி இவரியற்றிய ‘ஆயுள்வேத வைத்தியக் கருவூலம்’ என்னும் நூலின் மூலமாக வெளிவந்திருக்கிறது. வெண்பா, ஆசிரியப்பா, கலித்துறை, கலிவெண்பா, விருத்தம் என்னும் யாப்புக்கள் கொண்ட 800 பாக்களால் அமைந்த ‘வைத்தியக் கருவூலம்‘ இவருடைய அநுபவ முதிர்ச்சியையும் சித்தவைத்தியக் கலைச் சிறப்பையும் நல்ல தமிழிற் காட்டி வைத்தியத்துறையை அழகு செய்யும் சிறப்புடையதாயிருக்கின்றது.

‘ஈச்சங் கொழுந்து நொச்சியிலை
இசங்கு மணித்தக் காளியிலை
காய்ச்சுஞ் சங்கம் குப்பியிலை
கரிய சீரம் பீநாறி
முச்சை யழிக்கும் செஞ்சந்தம்
முதிய குப்பை வெண்காயம்
பாச்சிக் கசாயம் பருக்கிவிட்டால்
பறக்கும் கரப்பன் பாலருக்கே’

என்னும் பாடல் சொறி, சிரங்கு, கரப்பன் என்பன சிறுவருக்கு வந்தாற் போட்டுக் கொடுக்க வேண்டிய குடி நீரொன்றினைக் குறிப்பிடுவது. ‘பறக்கும் கரப்பன் பாலருக்கே’ என்று திடமான கருத்தை வலியுறித்தி நோய் பறக்கின்ற வேகத்தைக் காட்டுகின்றார்.

‘போமென்ற கனமாந்தக் குளிகை யொன்று
புகலுகின்றேன் திரிகடுகு கரிய சீரம்
ஆமென்ற வசம்புள்ளி யசம தாகம்
அப்பனே வகையொன்று வராக னொன்று
நாமென்ற கல்வத்தில் மருந்தை வைத்து
நாட்டக்கேள் பிரண்டையொடு மாவி லங்கை
தாமென்ற வேளை நொச்சி வேம்புவுஞ்
சங்குடனே பேய்மருட்டி சங்கந் தப்பி’

என்ற குளகச் செய்யுளானது கணமாந்தக் குளிகையைப் பற்றிய முதற் பாடலாக அமைந்து அதன் விவரத்தைக் கூறதற்கே இழுமென்னோசையோடு நடந்து ஐயரவர்களது வைத்தியப்புலமையும், தமிழ்ப்புலமையும் கலந்த ஒன்றாக மிளிர்வதைக் கண்டின்புறலாம். இத்தகைய பயன் நிறைந்த நூல் இன்னமும் அச்சேறி வெளிவராதிருப்பது வருந்தத்தக்கது. அரசடி ஆசிரிய கல்லூரியதிபராயிருந்த திரு.தம்பு என்பவர் ஐயரவர்களுடைய வைத்தியப் புலமையையும் தமிழ்ப் புலமையையும் வியந்து, மலேரியாக் காட்டுச்சுரத்ததைப் பற்றிய பாடல் நூல் ஒன்று செய்து தரும்படி அவரை வேண்டினார்.
ஆங்கில வாடை மிகுந்து, மேனாட்டு வைத்திய முறைகளிலேயே பெரும் நம்பிக்கை கொண்டிருந்த சூழல் ஒன்று, இவர் மூலம் அவ்வாறு பணித்தமையை அறிந்த ஐயர் அவர்கள் மேலைத்தேச வைத்திய முறைகளையும் சிறிது அறிவாராதலால், தமிழ் வைத்திய வழிகள் கொஞ்சமும் கலவாத முறையழல் ஐம்பத்தொரு பாடல்களைக் கொண்ட ‘மலேரியா என்னும் காட்டுச் சுரம்‘ என்ற நூல் ஒன்றை ஆக்கி அளித்தார்கள். வெண்பா முதலாகக் கும்மி, நொண்டிச்சிந்து, ஆனந்தக்களிப்பு, குறம்(பள்ளு) என்பவற்றால் நடந்து, கலிவெண்பாக்களால் முடிவுறும் இந்நூல் 1931ல் திரு.டி.என்.நல்லதம்பி ஆசிரியர் அவர்களால் அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டது. இந்நூற் சிறப்பபை பாராட்டிய வைத்தியர் குழு, மலேரியா வாரவிழா ஒன்றில் நூலை அரங்கேற்றி ஐயரவர்களுக்கு புகழ் மாலையும் சூட்டிக் கௌரவித்தது.

‘கொந்தலர் குழன் மடவாய் – யான்
கூறிடும் வாசகம் கேளனமே
முந்தையர் மலைச் சுரத்தால்
முற்றிலும் குழந்தனர் பற்றிலர்போல்’

என்று கும்மிப் பாடல்கள் இன்சொற்களாற் தொடங்குகின்றன. ஈற்றி லமைந்து நிற்கும் கலிவெண்பாவின் கடைசிப்பகுதி:

‘உற்றார் முதலாய் ஒழிந்தோ ரையுமிழந்து
வற்றாத செல்வம் மனைமாடு – நற்போகம்
விட்டுப் பிரிந்து விழற்கிறைத்த நீராகிக்
கிட்டுவார் விண்ணைக் கிளர்ந்து’

என்று தகுந்தபடி தடுக்கப்படாவிடின் இச்சுரம் மனித குலத்தையே பூண்டோடழிக்க வல்லது என்று வலியுறுத்திக் கூறுவதா யமைந்து நூல் நிறைவுறுத்தப்பட்டுள்ளது. சிவ வழிபாட்டின் சின்னமான உருத்திராக்கத்தின் மீது பெருமதிப்புப் பூண்டு, அதனை என்றும் கழுத்திலணிந்த பெருமைகொண்ட ஐயர் அவர்கள் ‘உருத்திராக்க மான்மியம்’ என்னும் செய்யுள் நூல் ஒன்றையும் ஆக்கினார்கள். சிவ தத்துவத்தின் நுண்கருத்துக்களையும், உருத்திராக்க மகிமையையும் விளக்கும் இந்நூல் வெண்பா, ஆசிரியவிருத்தம், அகவல் என்பன கலந்து ஓர் இலக்கிய நூல் போன்று விளங்குகின்றது.

இவர் கோட்டமுனையில் அமைந்துள்ள வீரகத்திப் பிள்ளையார் கோயிலின் பரிபாலகராய் பல ஆண்டுகள் இருந்து அக் கோயிலைப் புதுக்கித் திருப்பணிகள் அனைத்தையும் பெருமைப்படுத்தியவர். அக்கோயிலிற் சிலகாலம் புராண வகுப்புக்களையும் நடத்திச் சைவம் வளர்த்த இப்பெருமையாளரது உழைப்பும் செல்வமும் கோயிற் பணிகளுக்கென்றால் ‘கணக்கு வழக்கற்றுச்‘ செலவழிக்கப்படும். இக்காலத்தில் மட்டக்களப்பில் நடந்த சைவசமயக் கிளர்ச்சியிலும் பங்குகொண்டு பல இடங்களிற் சைவப் பிரசங்கங்களும் ஆற்றியிருக்கின்றார். சைவசித்தாந்தச் சிறப்புகள் இவர் வாயிலாய் நாடெங்கும் அப்போது பரப்பப்பட்டன. வயது முதிர்ந்து வெளிப் பணிகளில் ஈடுபாடு குறைந்து வீட்டில் இருந்த காலத்திலும் பல அறிஞர் இவரை நாடிச் சென்று புத்திமதிகளைப் பெற்றுச் செல்வாராயினர். இவருடன் சிறிது நேரம் பேசும் சந்தர்ப்பம் பெற்ற எவரும் சைவம், இலக்கியம், வைத்தியம் என்ற துறைகளில் ஓரளவாவது அறிவுபெற்றே மீளுவதியல்பாயிற்று.

மூப்புக் காலத்தினைப் பொதுப்பணிகளின் ஈடுபாட்டிலிருந்து விலக்கித் தன்னில்லத்தையே கோயிலாக மாற்றிச் சிவபூசனைகளிற் கழித்துவந்து சர்வசித்து வருடம் சித்திரை மாதம் 20ஆந் திகதி (1947 இல்) இவர் இறைவனடி புகுந்தபோது மட்டக்களப்பு நாடு ஒரு தமிழ்ச் செல்வனை இழந்து தவித்தது. ஆவரடைய உறவினரும் நன்மாணவருள் ஒருவருமான பண்டிதர் சந்திரசேகரம் அவர்கள் கூறியதுபோன்று:

‘பாட்டமைதி எங்கேநின் பண்பெங்கே சொற்பெருக்குக்
கேட்டமைத லெங்கேஎங் கேள்வனே – கூட்டுறுபொற்
சீலக் குமார சுவாமிவிண் சேர்ந்நனையே
ஞாலத் தியல்பிதுவோ நாட்டு’

என்று, அவர்தம் மாணவர்களும் தமிழறிஞர்களும் இரங்கினர். மட்டக்களப்பின் புகழினை உயர்வுறுத்திச் சென்ற குமாரசுவாமி ஐயரவர்களது புகழ் என்றும் நிலைத்து நிற்பதொன்று. அவரியற்றிய ‘ஆயுள்வேத வைத்தியக் கருவூலம்’ முதலான நூல்களையெல்லாம் பதிப்பித்துப் பல்லோரும் பயன்பெறச் செய்வது நம் கடமை.

By – Shutharsan.S

நன்றி- வித்துவான் வீ.சி.கந்தையா எழுதிய ‘மட்டக்களப்பு தமிழகம்‘ புத்தகத்தில் இருந்து பிரதி பண்ணப்பட்டது.

தகவல் மூலம் -ஆரையம்பதி டொட் நெற் இணையம்.

Sharing is caring!

Add your review

12345