[:ta]அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையார்[:en]Alaveddy Kumpalavalai Pillaiyar[:]


பூர்வீகத்ததல் மாருதப்புரவீகவல்லி எனும் பெயருடைய சோழ அரசிளங்குமரி குதிரை முகமுடையவளாகக் குஷ்டரோக வாய்ப்பட்டமையால் அக்குதிரை முகமும் குஷ்டரோகமும் நீக்குவதற்குப் பற்பல சிகிச்சைகள் மேற்கொண்டும் தெய்வ வழிபாடுகள் ஆற்றியும் நோய் தீராமை கண்டு தவசிரேஷ்டர் ஒருவரின் வாக்குப்படி வட இலங்கையை அடைந்தாள். யாழ்ப்பாணத்தில் வட கரையிலமைந்த கீரிமலை என்னும் திவ்விய தீர்த்தத்திற் கந்தசுவாமி உபாசனையுடன் ஸ்நானஞ் செய்து ஒரே நிரையில் மாவிட்டபுரம் முதலாகத் தென்திசை நோக்கி ஐந்து கோவில்களில் கந்தசுவாமி விக்கிரகங்களை ஸ்தாபனஞ் செய்து வழிபட்டாள். அவளது நோயும் குதிரை முகமும் நீங்கப்பெற்றது. குறித்த குதிரை முகம் பிறர் பார்வைக்கு நீங்கியதாயினும் அவளது சொந்த நினைவுக்கும் பார்வைக்கும் நீங்கப்பெறவில்லை. அதன் காரணம் யாது என ஆராய்ந்த போது கந்தசுவாமி வழிபாட்டுக்கு முன் விக்கினேஸ்வர ஆராதனை செய்யாமையே என தவப்பெரியோர் கூறக்கேட்ட இராஜக்குமாரத்தி தன் பிழைக்கு மனம் நொந்தாள். விக்கினேஸ்வரரைத் தியானித்து
‘மெய்ப்பொருள் பாலிக்கும் மெய்ப்பொருளாயுள்ள பெருமானே! அறியாமற் செய்த என் பிழையை மன்னித்து என்மேலிரங்கி அருளுக. யான் செய்த பிழைக்கு பிராயச்சித்தமாக உமது பிரதிரூபத்தை ஏழு ஸ்தானங்களிற் பிரதிஷ்டை செய்து வழிபாடாற்றுவேன் என வாக்குறுதி பண்ணினாள். கொல்லங்கலட்டி முதலாகத் தென்திசை நோக்கி ஒரே நிரையில் ஏழு ஸ்தலங்களில் விக்கினேஸ்வரப் பிரதிஷ்டை செய்வித்தாள். கொல்லங்கலட்டி, வரத்தலம், அளகொல்லை, கும்பழாவளை, பெருமாக்கடவை,ஆலங்குழாய், கல்வளை என்பனவே அத்தலங்களாகும். இவைகளிற் மத்தியஸ்தலமாயுள்ள கும்பழாவளையில் விக்கினேஸ்வர அர்ச்சனை முடிந்த போது குமாரத்தியின் குதிரை முகச்சாயை அவளது சொந்தப் பார்வைக்கும் முற்றாக நீங்கியதாயிற்று. இக் கும்பழாவளையிற் முன்றிற் சோலை மாவிழிதிட்டி (மா – இழி – திட்டி) எனவும் இத்தலத்தின் தென்கிழக்கு மூலையிலிருந்த வயல் (இது முன்பு குளமாயிருந்தது) ‘குமாரத்தி குளம்‘ எனவும் அழைக்கப்பெற்றமை இவ்வரலாற்றை உறுதி செய்கின்றன. இவ்வரலாறு ஆலய திருவூஞ்சல் ஒன்பதாவது பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாலயத்தின் திருப்பள்ளியெழுச்சி பாடலிலும் ‘மாவையூர் முருகனின் வரம்பெறுவனிதையாம் மாருதவல்லியின் மாமுக நோய் தனை மாவிழிதிட்டி முன் வந்து நின்றகற்றி‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
‘சித்தங் குலைந்தவடியான் மனத்துயர் தீரவெண்ணி,அத்தெங் கொருகுலை யோரிலை பாதியருணநிறம்வைத்தெங்கெவர்க்கு முன்னற்புதங்காட்டி மகிழவைத்தாய்நத்தந் தருவினை யேற்கரிதோ வருள் நல்குவதே’
மேலதிக விபரங்களுக்கு கும்பழாவளைப் பிள்ளையார்
By – Shutharsan.S
நன்றி – கும்பழாவளைப் பிள்ளையார் இணையம்[:]